திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (10 of 53)


 
பொதிகை மலையில் முண்டந்துறையில் தான் புலிகள் வாழ்ந்து வருகிறது. இந்த புலிகள் மனிதர்களைக் கண்டு பயப்படுவதில்லை. இங்கு காணிகளும் புலிகளை கண்டு பயப்படுவது இல்லை.
 
இதுகுறித்து எனது நண்பர் தான் நேரில் கண்ட சம்பவத்தினை என்னிடம் பகர்ந்து கொண்டார். அந்த சம்பவம் இது தான். பாபநாசம் அணையின் தண்ணீர் திறக்கப்படும் காட்சி ஒருமுறை தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள நாட்டார்குளத்தை சேர்ந்தவர் எஸ்.கே.திருப்பதி. இவர் நாடக நடிகர். எனது நண்பரான இவர் காணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நாடகம் ஒன்றை நடித்து காட்ட சென்றார். அவருடன் பெண்களும் சென்றனர்.
 
அதற்கு முன்பு காணிகளை பற்றி ஒரிரு வார்த்தை சொல்ல வேண்டும். காணிகள் வாழ்க்கை எப்போதுமே வித்தியாசமானது. இவர்களின் தொழில் வேட்டையாடுவது. இவர்கள் வேட்டையாட வில், அம்பு போன்ற கருவிகளை பயன்படுத்துவார்கள். ஏனெனில் துப்பாக்கி பற்றியெல்லாம் அவர்களுக்கு தெரியாது. காணிகளுக்கு மந்திரம், தந்திரம் நன்றாக தெரியும். பெரும்பாலும் வேட்டைக்கு இரவு நேரம் தான் செல்வார்கள். இவர்கள் வேட்டைக்கு சென்றால் 2 அல்லது 3 நாள் கழித்து தான் வீட்டுக்கு வருவார்கள்.
 
இதற்கிடையில் பகல் வேளையில் தேன் எடுக்க சென்று விடுவார்கள். இவர்கள் தங்கள் வேட்டை மூலம் கிடைக்கும் பொருளை பணம் ஆக்குவது இல்லை. குறிப்பாக காணிகள் இனத்தவர் பெண்களை மணமுடிக்க ஆண்கள் தான் பணம்கொடுத்து முடிப்பார்கள். பணத்துக்கு பதிலாக பண்டமாற்று மூலம் பொருள்களை வாங்கி கொள்வார்கள். இவர்கள் குடியிருந்து வரும் குடியிறுப்புக்குள்ளே சிறு குழந்தைகள் மற்றும் பெண்கள் மட்டுமே நுழைய முடியும். எந்த காரணம் கொண்டும் ஆண்கள் நுழைய முடியாது.
 
ஆனால் இந்த நிலை தற்போது மாறி விட்டது. இவர்கள் வட்டிக்கு பணம் பெற ஆராம்பித்த போது வெளி ஆண்கள் காணிகள் குடியிருப்பிற்கு வந்து வட்டியை பிரிக்க ஆரம்பித்தனர். பொதிகை மலையின் கீழே, குடியிருக்கும் பெண்கள் கீழே விளையும் அரிசி, மிளகுவத்தல், சிறு கிழங்கு கொண்டு கொடுத்து விட்டு காணிகள் மலை தோட்டத்தில் விளையும் ஏலேல (கப்பக்) கிழங்கு வாங்கிக் கொண்டு வருவார்கள். ( ஏழு - இலை - கிழங்கு என்ற பெயர்தான் மருவி ஏலேல கிழங்கு என்று பெயராகி இருக்க வேண்டும். இந்த பயிரில் ஏழு இலை இருக்கும். மேலும் மலையாள வார்த்தை படி இக் கிழங்குக்கு கப்பக்கிழங்கு என்று பெயரும் உண்டு.
 
அதாவது கம்பில் இருந்து வரும் கிழங்கு இது என்பதால் கப்பக்கிழங்கு) இப்படி பண்டமாற்று முறையில் வாழ்ந்த இந்த காணி மக்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படவே. அவர்களுக்கு பணம் மூலம் பொருள்கள் தேவைப்பட்டது. பின்பு பணத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டதால் வட்டிக்கு பணம் வாங்கும் நிலை ஏற்பட்டது. மருதூர் அணை மேலக்கால்வாய் தோற்றம் மலைக்கு கீழ் வாழும் மற்றவர்கள் காணிகளுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வட்டி வசூல் பிரிக்க ஆரம்பித்தனர். இதனால் அவர்களுக்கு மனக்கஷடம் ஏற்பட்டது.
 
பணம் என்றாலே பிரச்சனை வந்துவிடுமல்லவா? எனவே வட்டி பிரச்சனை பெரும் பிரச்சனையாகி விட்டது. வட்டியால் மக்கள் வாட்டி வதைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலை பற்றி நாட்டார்குளம் எஸ்.கே. திருப்பதி வேலை பார்த்த தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவல்படி இவரது தலைமையில் தெரு நாடகம் போட்டு அவர்களுடைய நிலையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் காணிகுடியிருப்பு சென்றனர். அன்று இரவு நாடகம் அரங்கேறியது.
 
நாடகத்தை பார்த்த காணிகுடியிருப்பை சேர்ந்த முதிய பெண் ஒருவர் திருப்பதி கன்னத்தில் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். கந்து வட்டிக்காரர்கள் தொந்தரவு தாங்க முடியாமல் வேதனைப்படும் காணிகள் இனிமேல் வட்டிக்கு வாங்க மாட்டோம் என உறுதியும் அளித்தனர். நாடகக் குழு அந்த குடியிருப்பில் ராத்திரி தங்கியது. மறுநாள் காலை நாட்டார்குளம் எஸ்.கே. திருப்பதி பல் துலக்குவதற்கு வேண்டிய பேஸ்ட், டவல் எடுத்துக் கொண்டு அந்த குடிலின் பின்புறம் வந்தார். அங்கு புலி ஒன்று நின்று கொண்டிருந்தது. பயத்தில் அவருக்கு ஒன்றும் ஓடவில்லை. சத்தம் போடவும் பயம். அதே நேரம் யாரையும் அங்கு காணவில்லை.
 
புலியிடம் வசமாக மாட்டிக் கொண்டோம் எப்படி தப்பிக்க என நினைத்த திருப்பதி அடுத்த கட்டம் வீட்டுக்குள் நுழைய கதவைத் திறக்க முயற்சித்தார். ஆனால் கதவு அடைக்கப்பட்டு விட்டது. திருப்பதி வெளியே வந்தவுடன் பெண் ஊழியர் ஒருவர் டிரஸ் மாற்ற கதவை உட்புறம் தாழ்ப்பாள் போட்டு விட்டார். திருப்பதி அடுத்தகட்டம் என்ன செய்வது என்று நினைக்கும் போது. புலி... அவரை பார்த்து விட்டது. . அடுத்து பாய்ந்து விடும் நிலையில்... திருப்பதியின் நரம்பு நாடிகள் எல்லாம் துடிக்க ஆரம்பித்து விட்டது. அடுத்த கணம் உயிர் நின்று விடும் போல இருந்தது.
 
வேர்த்து விறுவிறுத்துப் போன திருப்பதி இன்று நம்மை புலி அடித்து கொன்றுவிடும் என நினைக்கும் போது எதிர்புறம் நேற்று இரவு முத்தம் இட்ட பாட்டி எந்த டென்சனும் இல்லாமல் புலியின் அருகே வந்தார். இதைப் பார்த்த திருப்பதிக்கு ஓரளவு பயம் குறைந்தது. ஆயினும் அவர் பாட்டியிடம்" புலி என்றால் உங்களுக்கு பயம் இல்லையா ?” என்று கேட்டார். அதற்கு பாட்டி, "ஆமாம் எங்களுக்கு புலியை கண்டால் பயம் கிடையாது. ஆனால் புலியை துன்புறுத்தினால் தான் அது நம்மை எதிராளியாக பார்க்கும். இல்லையென்றால் அது நம்மை ஒன்றும் செய்யாது ”என்று கூறினார்.
 
 "குறிப்பாக மலைஅடிவார பகுதியில் பாம்பிராணி என்று அழைக்கப்படும் சாம்பிராணி இனம் விஷம் கொண்டது. ஆனால் அது வீட்டுக்குள் நுழைந்து விளையாடுகிறது. அதை யாரும் விரட்டுவது கிடையாது. அந்த சாம்பிராணி இனமும் நம்மை ஒன்றும் செய்வது இல்லை. அதே போல் எந்த மிருகத்தையும் தொந்தரவு செய்யாமல் இருந்தால் அது பிரச்சனை ஏற்படுத்தாது” என்று பாட்டி மேலும் கூறினார். நாட்டார்குளம் எஸ்.கே.திருப்பதி தப்பித்தோம், பிழைத்தோம் என ஊர் வந்து சேர்ந்தார்


Favorite tags



Tirunelveli Business Directory