திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (11 of 53)

தாமிரபரணியில் மேலணையை பற்றி பார்த்தோம். இந்த மேலணையை விட்டு தண்ணீர் வெளியே வரும் பகுதியில் ஒரு வால்வு வைத்து இருக்கிறார்கள். இந்த வால்வின் மூலம் வெளியே வரும் தண்ணீர் பூப்போல பீச்சி அடிக்கப்படுகிறது. இதை பார்க்க மிக நன்றாக இருக்கும். இதை இ.இ வால்வு என்கிறார்கள்.
 
இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட இடமாக கருதப்படுகிறது. இங்கு எப்பொழுதும் ஆயுதம் தாங்கிய போலீஸ் காவலுக்கு உள்ளனர். திருநெல்வேலி -தூத்துக்குடி மாவட்டத்திற்கு இதயம் என்றால் இந்த அணை தான். இங்கு தேக்கப்படும் தண்ணீர் தான் நெல்லை- தூத்துக்குடி மாவட்டம் நெற்களஞ்சியமாக திகழ காரணமாகிறது. இந்த அணையில் சிறிது கசிவு கூட இல்லை. 143 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பி விட்டால் திறக்கும் வசதியில் ஷட்டர்கள் போடப்பட்டு உள்ளது. இதற்காக இ.இ. வால்வுக்கு அடுத்தபடியாக மற்றொரு குழாய் உள்ளது.
 
இ.இ வால்வு என்ற பெயருக்கு காரணம் இதை தயாரித்த கம்பெனியின் பெயர் இ.இ என்பதாகும். இயற்கை அற்புதங்களும், செயற்கை வினோதங்களும் நிறைந்த இந்த மலையில் 1985-ல் சேர்வலாறு அணை கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணையில் இருந்து மூன்றரை மைல் தூரம் குகை பாதை அமைத்து அதன் மூலம் பாபநாசம் மேலணையில் இருந்து சேர்வலாறுக்கு தண்ணீர் கொண்டு செல்வது விசேஷமான ஒரு அமைப்பாக உள்ளது. இந்த ஸ்பெஷல் அமைப்பினால் பாபநாசம் அணையில் அதிகம் வரும் தண்ணீரை சேர்வலாறு அணைக்கு செல்கிறது.
 
தண்ணீர் குறைவாக வந்தால் சேர்வலாறில் இருந்து தண்ணீர் பாபநாசம் அணைக்கு வருவதற்கு இந்த பாதை வசதியாக உள்ளது. சேர்வலாறு சேர்வலாறு அணையின் உயரம் 156 அடி. இதன் கொள்ளளவு 1.225 மில்லியன் கன அடி. இந்த நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீரையும் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் 20 மெகா வாட் மின் திட்டம் மூலம் 48 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது. இந்த மின் திட்டத்திற்கு திடீரென்று கடந்த 1992-ம் வருடம் பெய்த புயல் மழையின் காரணமாய் அணைக்கட்டு மற்றும் பாலம், மின்திட்ட நிலையத்திற்கும் சோதனை வந்தது.
 
அந்த வெள்ளத்தின் போது திடீரென்று இடிதாக்கி 20 கோடி மதிப்புள்ள தேக்கு மரங்கள் கருகி சாம்பலானது. சேர்வலாறு தண்ணீர் தாமிரபரணியில் வந்து கலக்கும் இடத்தில் உள்ள மிக பிரமாண்டமான பாலம் இந்த வெள்ளத்தின் போது இடிந்து விட்டது. ஆனால் அந்த பாலத்தில் தற்காலிகமாக ஒரு இரும்பு பாலம் போடப்பட்டது. இந்த பாலம் தான் கடந்த 18 வருடமாக உள்ளது. இந்த பாலம் அருகே பழைய பாலம் உயரமாக உள்ளது. ஆனால் இரு பகுதிக்கும் தொடர்பில்லாமல் அறுந்து கிடக்கிறது. அதன் இடிந்த பாகம் தற்போதும் இந்த ஆற்றில் கிடக்கிறது.
 
விவசாயத்துக்கு தாமிரபரணி நதி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இது குறித்து 1999ம் வருடம் திருநெல்வேலி மாவட்டம் நீர் பாசனக் கருத்தரங்கு நடந்த போது, பொதுப்பணித்துறை மூலம் வெளியிடப்பட்ட மலரில் இருந்து சில பகுதிகளை பார்க்கலாம். தாமிரபரணி ஆறு 75 மைல் ஓடுகிறது . அதை கி.மீ கணக்கில் மாற்றி தாமிரபரணி நதி நெல்லை மாவட்டத்தில் 80 கி.மீட்டரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 40 கி. மீட்டரும் ஆக மொத்தம் 120 கி.மீ ஓடி மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. என்ற தகவல் இந்த மலரில் இருந்தது. இந்த தாமிரபரணி நதி வடகிழக்கு மற்றும் தென்மேற்கு ஆகிய இருபருவங்களில் தான் முழு பயனையும் பெறுகிறது.
 
குறிப்பாக மலை பகுதிகளில் மேலணைக்கு மேலே காரையாறு, சேர்வலாறு, பாம்பார் போன்ற உபநதிகளும்,(இதில் பேயாறு இல்லை) சமவெளி பகுதியில் முதலில் சிங்கம்பட்டி பகுதியில் உற்பத்தியாகும மணிமுத்தாறு கல்லிடைக்குறிச்சி அருகே ஆலடிபட்டி என்னும் ஊரில் வந்து சேருகிறது. சிவசைலம் பகுதியில் உற்பத்தியாகும கடனாநதி, தாமிரபரணி ஆற்றுடன் திருபபுடைமருதூர் என்ற கிராமத்தில் வந்து கலக்கிறது. கடனா நதி வாரக நதி இரண்டும் தாமிபரணியில் சேரும் இடம் முக்கூடல் என்று அழைக்கப்படுகிறது.
 
களக்காடு மலை பகுதியில் உற்பத்தியாகும் பச்சையாறு பாசன நிலங்களுக்கு பயன்படுத்தியது போக மீதமுள்ள தண்ணீர் தருவை அருகே தாமிரபரணியோடு சங்கமம் ஆகிறது. குற்றால மலையில் உற்பத்தியாகும் சிற்றாறு, தென்காசி பகுதிக்கு வளம் சேர்த்து விட்டு தாமிரபரணியில் சீவலப்பேரி என்னும் கிராமத்தில் சங்கமம் ஆகிறது. இந்த இடம் தாமிரபரணியின் மற்றுமொரு முக்கூடல்ஆகும்.
 
இந்த இடத்தில் கயத்தாறு, சிற்றாறு ஆகிய ஆறுகள் தாமிபரணியோடு கலக்கிறது. தற்போது கயத்தாறு பரக்கிரம பாண்டி குளத்தில் நேரடியாக சேர்ந்து , அந்த குளம் நிரம்பி பின்பே தாமிபரபரணிக்கு வருகிறது.


Favorite tags



Tirunelveli Business Directory