திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (12 of 53)


 
மணிமுத்தாறு அணை
 
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு மணிமுத்தாறின் குறுக்கே 1958-ம் ஆண்டு சிங்கம்பட்டி கிராமத்தில் 5511 மீ. க. அடி கொள்ளளவு கொண்ட அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் நான்குநேரி, சாத்தான்குளம் போன்ற வறண்ட பகுதியில் 22,852 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியும் தாமிரபரணி மேலணை மூலம் பயன்பெறும் அனைத்து பாசன பரப்புக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. தமிழக முதல்வராக காமராசர் இருந்த போது இந்த அணைக்கட்டப்பட்டது.
 
வித்தியாசம்
 
இந்த மணிமுத்தாறு அணையில் ஒரு விசித்திரமான திட்டம் உள்ளது. அதாவது 80 அடிக்கு மேல் அணையில் தண்ணீர் இருந்தால் தான் மணிமுத்தாறு கால்வாய் வழியாக நாங்குநேரி மற்றும் சாத்தான்குளம் பகுதி பாசன வசதிபெறும். அதுவும் 1-வது ரிச், 2-வது ரிச், 3-வது ரிச், 4-வது ரிச் ஆக 4 ரிச்சுகளாக பிரிந்து ஒரு வருடம் முதல் இரண்டு ரிச்சுகளுக்கும், தண்ணீர் கொடுத்தால் மறு வருடம் கடைசி 2 ரிச்சுகளுக்கும் தண்ணீர் கொடுக்கப்படும்.
 
அதன்பிறகு 80 அடிக்கு கீழ் அணையில் இருக்கும் தண்ணீர் எல்லாம் பாபநாசம் அணைக்கு திறக்கப்பட்டு, மின்சாரம் மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தப்பட்டு, திருவைகுண்டம் தென்கால் வழியாக கடம்பா குளத்துக்கும் அதன் கீழ் உள்ள 11 குளத்து பாசன பகுதியில் உள்ள வயற்காட்டு பாசனத்துக்கும் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமத்திற்கும் குடிதண்ணீர் தருவதற்கும்.
 
திருவைகுண்டம் வடகால் வழியாக தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நிரந்தரமாக தண்ணீர் தருவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அரசர்கள் கட்டிய அணைகள் - தாமிரபரணியின் இதயமான மேலணை வெள்ளையர் ஆட்சிக் காலத்திலும், மணிமுத்தாறு அணை காமராசர் தமிழக முதல்வராக இருந்த காலத்திலும், சேர்வலாறு அணை எம்.ஜி. ஆர். முதல்வராக இருந்த காலத்திலும் கட்டப்பட்டது. ஆனால் தாமிரபரணியில் சமவெளி பகுதியில் உள்ள 7 அணை கட்டுகள் நமது குறுநில மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. யார் கட்டினார்கள் என்று கூட குறிப்பு சரியாக தெரியாமல் உள்ளது.
 
இது குறித்து பலர் பல கருத்து கூறுகிறார்கள். அந்த குறு அணைகளில், நெல்லை மாவட்டத்தில் கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், பழவூர், அரியநாயகிபுரம், சுத்தமல்லி ஆகிய 6 அணைக்கட்டும் தூத்துக்குடி மாவட்டத்திலஉள்ள மருதூர் அணைக்கட்டும் குறுநில மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. கடைசி அணையான திருவைகுண்டம் அணைக்கட்டு ஆங்கிலேயர் காலத்தில் கலெக்டராக இருந்த பக்கிள்துரை என்பவரால் கட்டப்பட்டது. இந்த பக்கிள்துரை இங்கு அணை கட்டும் போது இப்பகுதி மக்களிடம் மிகவும் அன்போடு பேசி வந்தாராம்.
 
அரவணைத்து பணியாளர்களை கொண்டு சென்றாராம். ஆகவே, இங்கு வசித்த சில தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பக்கிள்துரை என பெயரிட்டு மகிழ்ந்து உள்ளனர். (எனது மனைவி பொன்சிவகாமியின் தந்தை பெயர் பக்கிள் துரை-ஆசிரியர்) தாமிரபரணி ஆற்றின் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் திருநெல்வேலி மாவட்டத்திலும், 46 ஆயிரத்து 407 ஏக்கர் நிலங்கள் தூத்துக்குடி மாவட்டத்திலும் பயன்பெற்று வருகிறது.
 
அட்வான்ஸ் கார்
 
இந்த பகுதியில் பயிரிடப்படும் முறைகள் 3 பகுதிகளாக பிரிக்கின்றனர். அவை கார் பருவம், பிசான பருவம், அட்வான்ஸ் கார் என பிரிக்கிறோம். ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை கார் பருவம் என்றும் அக்டோபர் 1 முதல் மார்ச்சு 31 வரை பிசான பருவம் என்றும் ஏப்ரல் 1 முதல் பழந்தொழி அதாவது அட்வான்ஸ் கார் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் பழந்தொழி சாகுபடி செய்யும் நிலங்களில் அந்தந்த வருடங்களில் கார் சாகுபடி செய்ய உரிமை இல்லை.
 
தாமிரபரணியில் பாசனத்தில் 50 சதவீதத்திற்கு மேல் பயன்பெறும் பாசன பரப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் தான் உள்ளது. முதல் 6 அணையை விட கடைசியில் உள்ள மருதூர், திருவைகுண்டம் அணைகட்டு மூலம் தான் 46,407 ஏக்கர் பயன்பெறுகிறது. தாமிரபரணியில் மொத்தம் பாசன பரப்பு 86,407 ஏக்கர் ஆகும்.


Favorite tags



Tirunelveli Business Directory