திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (13 of 53)

தலையணை
 
தாமிரபரணி சமவெளி பகுதிக்கு வந்தவுடன் முதலில் கட்டப்பட்ட அணை தலையணை ஆகும் . இந்த அணைக்கு கோடைமேலழகியான் அணை என்று பெயர். இந்த அணைக்கட்டு மூலம் பயன் பெறும் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயில் 325 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட மொத்தம் 2,260 ஏக்கர் நிலம் பயன்பெறுகிறது. இதே அணைக்கட்டில் உள்ள தெற்கு கோடை மேலழகியான் கால்வாயில் குளத்து பாசனம் இல்லாமல் நேரடி பாசனம் மூலம் 870 ஏக்கர் நிலம் பயன் பெறுகிறது. தலையணையை பற்றி இந்த பகுதியில் பல செவி வழி கதை பேசப்படுகிறது. அதில் ஒன்றுதான் இது.
 


 
ஒரு காலத்தில் பாண்டிய மன்னனுக்கும், எட்டுவீட்டு பிள்ளைமாருக்கும் சண்டை மூண்டது. அப்போது பாண்டிய மன்னன் தோற்கும் நிலை ஏற்பட்டது. எனவே அவன் பயந்து போய் பொதிகை மலையில் உள்ள பாண்டியன் கோட்டையில் ஒழிந்து கொண்டான். ஆனால் எட்டு வீட்டு பிள்ளைமார் அவனை விடவில்லை. எப்படியாவது பாண்டியனை அழித்து விட வேண்டும் என்று முன்னேறினர். இனி நம்மை பிடித்து விடுவார்கள் என்று அச்சம் கொண்ட பாண்டியன் இவர்களிடம் மாட்டக்கூடாது என்று தன் தலையை தானே தனது வாளால் கொய்து கொண்டான்.
 
அதன்பின் தாமிரபரணியில் விழுந்தான். தலைவேறு, உடல்வேறு பிரிந்த அவனின் தலை ஒதுங்கிய இடம் தலை அணை என்றும். முண்டம் (தலையில்லாத உடல்) ஒதுங்கிய இடம் முண்டந்துறை என்றும் பெயர் பெற்றது என்பர். அதே போல் இந்த பகுதியில் மற்றுமொரு கதை பேசப்படுகிறது. அதுபற்றிய விவரம் வருமாறு
 
அது சுடலை மாடசுவாமி கதை. இந்த கதையை கூறும் போது புலயன் என்னும் கேரள மந்திரவாதி சுடலை மாடனை முண்டமாக சிமிலியில் அடைத்து அனுப்பினான் என்றும். அந்த முண்டத்துடன் சிமிழ் விழுந்த இடம் முண்டந்துறை என்றழைக்கப்பட்டது என்றும் கூறுவர். ஆனால் தாமிரபரணியில் தடுப்பணையில் இது முதல் (தலை) அணை ஆகவே" தலையணை” என்ற அழைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது பலருடைய கணிப்பு. இதை "கோடை மேல் அழகியான் அணை” என்று அழைக்கப்படுவதை வைத்து பார்க்கும் போது கோடை காலத்திலும் கூட இந்த அணை மிக அழகாக தண்ணீர் நிறைந்து இருக்கும் என்பதை வைத்து இந்த அணைக்கு கோடை மேல் அழகியான் என்று பெயர் வந்து இருக்க வேண்டும் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
நதியுண்ணி அணைக்கட்டு
 
தாமிரபரணியில் இரண்டாவது அணைக்கட்டு நதியுண்ணி அணைக்கட்டு. இந்த அணைக்கட்டுக்கு இந்த பெயர் வரக்காரணம் என்னவென்று ஆராயும் போது நதியே இந்த அணைத்தண்ணீரை உண்பதால் (எடுத்து கொள்வதால்) இப்பெயர் வந்து இருக்க வேண்டும் என்கிறார்கள். ஏன் என்றால் இந்த அணையின் மூலம் பயன்பெறும் நதியுண்ணி கால்வாயில் குளத்து பாசனம் இல்லை. அணைத்துமே நேரடி பாசனம் தான். அதாவது இக்கால்வாய் மூலம் 2460 ஏக்கர் நேரடி பாசனம் பெற்று வருகிறது.
 
அதன்பின் இந்த கால்வாய் தண்ணீர் பாசனத்திற்க்கு பயன் படுத்தப்பட்டு அம்பாசமுத்திரம் சுற்று பகுதிக்கு தண்ணீர் வசதி செய்து விட்டு தாமிரபரணி கிளை நதியான கடனா நதியில் விழுந்து மீண்டும் தாய் நதியான தாமிரபரணியில் கலக்கிறது. ஒரு நதியில் தோன்றி மற்றுமொரு நதியில் முடிவதால் இந்த அணைக்கு நதியுண்ணி அணை என்று பெயர் வந்திருக்க வேண்டும். இந்த அணைகன்னடியன் அணைக்கு சற்று மேற்கில் உள்ளது. அம்பாசமுத்திரத்தில் இருந்து ஆலடியுர் செல்லும் சாலையில் இருந்து பார்த்தால் இந்த அணைக்கட்டு மிக அழகாய் தெரியும். இயற்கை அழகுடன் காட்சியளிக்கும் இந்த அணையை சினிமாகாரர்கள் விட்டு வைப்பதில்லை.
 
கன்னடியன் அணைக்கட்டு
 
இந்த அணைக்கட்டு மூலம் கன்னடியன் கால்வாய் வழியாக 2166 ஏக்கர் குளத்து பாசனம் உட்பட 12500 ஏக்கர் பாசனம் பயனடைகிறது. இந்த கால்வாய் ஆலடியுர் செல்லும் சாலையில் சற்று கீழ்புறம் உள்ளது. குடமுறுட்டி சங்கரன்கோயில் என்றழைக்கப்படும் இடத்தில் காணப்படுகிறது. இந்த கன்னடியன் கால்வாயில் தான் தாமிரபரணியின் துணை நதிகளில் ஒன்றான மணிமுத்தாறு வந்து கலக்கிறது. இந்த கால்வாயை பற்றி பல கதைகள் பேசப்படுகிறது. மிக முக்கிய அணைக்கட்டான இந்த அணைக்கட்டில் தான் முதல் முதலில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பார்கள்.
 
இந்த பாசனத்தில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும்போது இந்த பகுதி நீர்பிடிப்பு ஆவியாக மாறவிடும் என்றும் அந்த ஆவியே பொதிகையில் மேகமாக சேர்ந்து பின் மழை பெய்து மற்ற அணைகளில் தண்ணீர் பெருகும் என்பது இந்த பகுதி விவசாய மக்களின் நம்பிக்கை. இந்த அணையில் இருந்து கிளம்பும் கால்வாய் கல்லிடைக்குறிச்சி. சேரன்மகாதேவி போன்ற வரலாற்று மிக்க நகரங்களை தொட்டு செல்கிறது. அந்த நகரத்தில் உள்ள மக்களின் வீட்டுக்கு புறவாசல் வழியாக இந்த கால்வாய் ஓடுகிறது.
 
இந்த கன்னடியன் கால்வாயில் வெள்ளாங்குழி என்னும் ஊர் அருகே எலுமிச்சையாறு என்னும் கோதையாறு வந்து சேருகிறது. இந்த ஆற்றின் அமைப்பு , இதன் தண்ணீரை முன்னுரிமையாக கன்னடியன் கால்வாய்க்கு தந்து விட்டு அதன் பிறகு தான் தாமிபரணிக்கு செல்கிறது. இந்த இடத்தில் இருந்து தான் வறட்சி பகுதியான ராதாபுரம் பகுதிக்கு தாமிரபரணி தண்ணீரை கொண்டு செல்ல திட்டம் (2008) தயாராகி கொண்டிருக்கிறது. இந்த கால்வாய் பிராஞ்சேரி மற்றும் குளத்துடன் முடிகிறது.


Favorite tagsTirunelveli Business Directory