திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (16 of 53)

சித்திரை விசு டெலிவிஷன் ஆன கதை
 
பொதிகை மலையில் இடி தாக்கியதால் மோசமான சம்பவம் ஒன்ற நடந்தது. அது பற்றி இனி பார்க்கலாம். சேர்வலாறு அணைக்கட்டில் 1992-ம் வருடம் பெய்த கன மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதை சமாளிக்க மதகு வழியே தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது மின்நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் சுமார் 5 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரம் செயல் இழந்தது.
 
50 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட பாபநாசம் மின் நிலையம் எந்த ஒரு வெள்ளத்தையும் தாங்கும் சக்தியில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் சமயத்தில் சேர்வலாறு அணைத் திட்டத்தில் உள்ள மின்நிலையம் செயலிழந்து போனது அனைவரையும் வருத்தத்திற் குள்ளாக்கியது.
 
தேக்குமரம்
 
இந்த வெள்ளம் வரும் போது தான் திடீர் இடி, மின்னல் காரணமாய் 300 அடி அகலம், 3 கிலோ மீட்டர் தூரம் காடு அப்படியே கருகி சாம்பலானது. இதனால் 20 கோடி மதிப்புள்ள தேக்கு மரங்கள் அழிந்தது. அழிந்ததோடு மட்டுமல்லாமல் வெள்ளத்திலும் அடித்து செல்லப்பட்டது. இதனால் காரையாறு செல்லும் ரோட்டுப் பாதையில் ஓரமாய் இருந்த ஒரு பெரிய பாலம் உடைந்துவிட்டது. தற்சமயம் இந்த இடத்தில் தற்காலிக இரும்பு பாலம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் இந்த நூல் வெளிவரும் வரை புதிதாக கட்டப்படவில்லை.
 
டெலிவிஷன்
 
சித்திரை மாத பிறப்பன்று பாபநாசம் சிவன் கோவிலில் சித்திரை விசு திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஏனென்றால் கைலாச மலையில் சிவபெருமான் பார்வதி திருமண காட்சியை காண்பதற்கு அனைவரும் வடக்கே செல்ல வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது.
 
அந்த நிலையை சமன் செய்வதற்காக அகத்திய மாமுனிவரை பொதிகை மலைக்கு சிவபெருமான் அனுப்பி உள்ளார். பெருமானே! உங்கள் திருமண கோலத்தை நான் எப்படி காண்பது என்று அவர் கேட்க பொருநை நதிக்கரையில் நீர் காணும் படி எங்கள் திருமண காட்சி நடைபெறும் என்று கூறி வழி அனுப்பி வைத்தார். அதன்படி சித்திரை விசு அன்று அகத்திய மாமுனிவருக்கு சிவபெருமான் பார்வதி திருமண காட்சி காணும் விழா தான் சித்திரை விசு விழா.
 
விசு என்றால் காட்சி. விஷன் என்றால் அதுவும் காட்சி. கைலாசத்தில் நடந்த திருமணத்தை பொருநை நதிக்கரையில் பொதிகை மலை அடிவாரத்தில் காட்டிய காட்சி சித்திரை விசு. இந்த மொழி தான்மருவி தற்சமயம் விஷன் என்பது டெலிவிஷன் என்று மருவி இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். தற்போது நேரடி ஒளிபரப்பு என்று மற்ற நாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம்.
 
ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அகத்தியர் இதே போல் ஒரு நேரடி ஒளிபரப்பை பார்த்துள்ளார். இதை அடிப்படையாக கொண்டு தொலைக்காட்சி உருவாகி இருக்குமோ என எண்ணத்தோன்றுகிறது. ஆக பல நுhற்றாண்டுகளுக்கு முன்பே டெலிவிஷன் போல் சிவபெருமான் திருமண காட்சியை தரிசனம் செய்த அகத்திய மாமுனிவர் நம் மண்ணில் இருந்தார் என்று நினைக்கும் போது நமக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம் தானே.
 
இதை தமிழாசிரியர் திருமதி லதா அவர்கள் விசு என்ற வார்த்தை விசன் என்று மாற வாய்ப்பில்லை என்று கூறுகிறார். ஆனால் பல ஆயிரம் வருடத்திற்கு முன்பு அகத்தியர் கண்ட நேரடி ஒளிபரப்பு பற்றி கூறும் போது அதற்கு மறுப்பு எதுவும் சொல்லவில்லை. பாபநாசத்தினை பொறுத்த வரை முன்னோர்கள் இறந்தால் அவர்கள் முக்தி அடைய காசிக்கு சென்று அங்கு ஆண்டிகளுக்கு அன்னதானம் கொடுத்தால் முக்தி கிடைக்கும் என்று கூறுவார்கள்.
 
ஆனால் பாபநாசம் கோவிலில் நமது முன்னோர்களை வேண்டி அன்னதானம் செய்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் காசிக்கு செல்ல முடியாத பக்தர்கள் கூட இங்கு வந்து அன்னதானம் அளித்து செல்கின்றனர்.மேலும் இந்த பக்கத்தில் உள்ள கிராம மக்கள் அனைவரும் பாபநாசத்தில் வந்து திதி கொடுத்து செல்கின்றனர். இந்த நிகழ்ச்சி ஆண்டாண்டு காலமாக நடக்கிறது.


Favorite tagsTirunelveli Business Directory