திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (18 of 53)

 
குடமாடி பகுதியில் முண்டந்துறை வன விலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு வேட்டையாட அனுமதி கிடையாது. புகைப்படம் எடுக்க வேண்டுமெனில் செக் போஸ்டில் பணம் கட்ட வேண்டும். மேலும் கார் செல்ல கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பேருந்தில் செல்லும் போது கட்டணம் இல்லை. காமிரா மற்றும் வீடியோ காமிரா அதிகமாக சோதனை செயயப்படுவதில்லை. இந்த பஸ்சில் உள்ளூர் வாசிகளை விட வெளியூர்காரர்கள் தான் அதிகமாக வருகிறார்கள்.
 
இந்த காரையார் டேமின் கீழே அன்னம்மாள் என்னும் 100 வயது பாட்டியிடம் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்து வாங்க வரும் கூட்டமே அதிகமாக இருந்தது. தற்சமயம் பாட்டி இறந்து விட்டார். பாட்டி உயிருடன் இருக்கும் போது நோயாளிகளை பஸ்சில் நடத்துனர், ஓட்டுநர் கூட்டி வந்து காரையாரில் விட்டு வைத்தியம் முடிந்தவுடன் மீண்டும் கூட்டி கொண்டு மலையின் கீழே விட்டு விடுவார்கள். ஆக அணையை பார்க்க வருபவர்களை விட பாட்டியை பார்க்க வரும் கூட்டமே அதிகமாக இருந்தது.
 
தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்ல இந்தியாவின் வெவ்வேறு பகுதியில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இந்த பாட்டியை தேடி மஞ்சள் காமாலை நோயை தீர்க்க ஆட்கள் வந்தனர். அவர்கள் தற்சமயம் பொதிகையடியில் உள்ள அன்னம்மாள் பாட்டியின் உறவுக்காரரிடம் மருந்து வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர். பெரும்பாலும் மஞ்சள் காமாலை நோய் வந்தால் இளநீர் மற்றும் கரும்புசாறு குடிப்பது வழக்கம். ஆனால் அன்னம்மாள் பாட்டி இதை வன்மையாக கண்டித்தார். மஞ்சள் காமாலை நோய்க்காரர்கள் கரும்புச்சாறு, இளநீர் குடித்தால் அது கல்லீரலை பாதிக்கும் என்ற கருத்தையும் அவர் கூறினார்.
 
அவர் மஞ்சள் காமாலை நோயை பற்றி கூறியது:
 
ஒருவருக்கு மஞ்சள் காமாலை நோய் உள்ளது என்றால் காய்ச்சல் விட்டு விட்டு வரும். அதை நாம் நிமோனியா என்று விட்டு விடக்கூடாது. உடனே மஞ்சள் காமாலை நோயா என்று கண்டு பிடிக்க உப்பு போடாத சுடுசோறு வைத்து அதன் மீது சிறுநீர் தளித்து பார்க்க வேண்டும். சோறு மஞ்சள் கலராக மாறினால் மஞ்சள் காமாலை நோய் தான் என தீர்மானிக்கலாம்.
 
முதன் முதலில் தேயிலை தண்ணீர் கலரில் வரும் சிறுநீர் முடிவில் ரத்தம் கலரில் வர ஆரம்பிக்கும். இந்த நோயை எப்படி தீர்ப்பது என்றால் அது தான் விந்தையானது. பாட்டி கொடுக்கும் பச்சிலை கலவையை தின்றுவிட்டு முட்டளவு தண்ணீரில் நின்று தாமிரபரணி தண்ணீரை குடித்துவிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் மாயமாக தீர்ந்து விடும். பாட்டி உயிருடன் இருக்கும் போது அவரிடம் என்ன மருந்தை எப்படி சேர்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு அதுபற்றி தெரிவிக்க மறுத்துவிட்டார்.
 
இவரது பூர்வீகம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அடுத்த கல்லூராகும். கொழும்பிலுள்ள ரத்னபுரியில் உறவினர்களுடன் வசித்த அன்னம்மாள் பாட்டிக்கும் ஆபிரகாம் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த சமயத்தில் பாபநாசத்தில் தோட்ட வேலை செய்ய ஆட்கள் தேவைப்படவே, தற்சமயம் மேல் அணை இருக்கும் பகுதியில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள பழத்தோட்டத்திற்கு சொந்தக்காரனான ஆங்கிலேய துரை பாட்டி குடும்பத்தை தோட்ட வேலைக்காக இந்தியா அழைத்து வந்தார்.
 
1935-ம் ஆண்டு இப்பகுதியில் குடியேறிய பாட்டியை ஆங்கிலேய துரை கப்பலில் லண்டனுக்கு அழைத்து சென்றாராம். மேலும் துரையின் தோட்டத்தை தான் வெள்ளைக்கார மாவட்ட கலெக்டர் பக்கிள் துரை சர்வே செய்து இவர்களுக்கு வேறு இடத்தை கொடுத்து விட்டு மேல் அணையை கட்டினார். 1938-ம் வருடம் இந்த அணை கட்டும் போது பாட்டி காரையாரில் தான் இருந்தார்.


Favorite tags



Tirunelveli Business Directory