திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (20 of 53)

இந்த பகுதியில் ஒரு குழந்தைகள் பள்ளி சாலையும் உதவி பொறியாளர் வீடும் உள்ளது. அந்த வழியாக சென்றால் அங்கு ஒரு பங்களா உள்ளது. அதில் மின் பொறியாளர் ஓய்வு எடுக்கும் பங்களாவாக வைத்து உள்ளார்கள். இங்கு தான் மந்திரிகள் யாராவது வந்தாலும் தங்குகிறார்கள்.
 
இதே பாதையில் சென்றால் கல்யாண தீர்த்தம் நமக்கு தெரிகிறது. அதற்கு முன்தான் சுதந்திர போராட்டத்தின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு முதல்வர் காமராஜர் 8-8-1957 ல் திறந்து வைத்த காட்டு பங்களா ஒன்று உள்ளது. இங்கிருந்து பார்க்கும் போது அழகான பள்ளத்தாக்கும் அதையடுத்து மேலே கல்யாண தீர்த்தமும் உள்ளது. தாமிரபரணி ஆற்று நீர் அங்கு பொங்கி எழுந்து பாறை இடுக்குகள் வழியே சென்று மற்றொரு பகுதியில் வேகமாக வெளி வருவது கண் கொள்ளாக் காட்சி.
 
இந்த அழகான காட்சியை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பு வேலி அருகே அருகே நின்று பார்த்து விட்டு ஒரு மண்டபத்தில் சற்று இளைப்பாரிச் செல்வது வழக்கம். அமைதியான இந்த மண்டபம் சுதந்திரப் போராட்ட வீரர் வ.வே.சுப்பிரமணிய அய்யர் அவர்களின் நினைவாக கட்டப்பட்டிருந்தது.
 
இது ஒரு சோக நிகழ்ச்சியை காலம் காலமாக சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது இந்த மண்டபம். இங்கு ஒரு முறை வ.வே.சு.அய்யர் தன் மகள் சுபத்ராவை அழைத்து வந்திருக்கிறார். அப்போது தாமிரபரணியின் அழகை ரசித்த அய்யரின் மகள் குளிப்பதற்கு ஓரிடத்தில் இறங்க அவரை வெள்ளம் அள்ளிச் சென்று விட்டது. மகளை மீட்கச் சென்ற அய்யரும் ஆற்று வெள்ளத்தில் பலியாகி விட்டார். சுதந்திர போராட்ட வீரர்களுக்கெல்லாம் நெஞ்சில் இடி போல இறங்கிய நிகழ்ச்சி இது.
 
இதனால் தான் கல்யாண தீர்த்தம் அருகே வ.வே.சு. அய்யர் நினைவு மண்டபம் கட்டி அதை பெருந்தலைவர் காமராஜர் திறந்து வைத்தார். இப்போது நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகப்படுத்தி பொதுமக்களுக்கு தொல்லை உண்டாக்கும் விதத்தில் சிலைகளை வைக்கும் அரசியல்வாதிகளின் மத்தியில் காட்டுக்குள் நினைவு மண்டபம் அமைத்த பெருந்தலைவரின் செயல் வித்தியாசமானது.


Favorite tags



Tirunelveli Business Directory