திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (23 of 53)

ஏக பொதிகையில அகத்தியரை பௌர்ணமியில்
பூஜை செய்யும் தேவர்கள்
 
பாண்டியர் கோட்டையில் வெள்ளிக் கிழமையனால் சிம்னி விளக்கு 6 மணிக்கு எரிய ஆரம்பித்துவிடும். இங்கு யார் இருக்கிறார்கள். என்பதை கண்டுபிடிக்க ஒரு வெள்ளிக்கிழமை கும் இருட்டில் பொதிகையடியில் வசித்த ஒரு இளைஞர் கிளம்பினார். அவர் பாண்டியர் கோட்டையில் என்ன இருக்கிறது என்பதை காண தனியாக சென்றார். ஆனால் அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
 
பொதிகை மலையில் அகத்தியர் அருவி செல்லும் பாதை
 
மறுநாள் காலை விறகு வெட்ட சென்ற ஒருவர் அங்கு போய் பார்த்த போது அந்த வாலிபர் இடுப்பில் கொடி ஒன்று சுற்றி இறந்து கிடந்தார். இதே போல் பலமுறை வெள்ளிக்கிழமை பாண்டியர் கோட்டைக்கு சென்றவர்கள் இறந்துவிட்டனர். ஆகவே யாருமே பாண்டியர் கோட்டைக்கு செல்வது இல்லையாம். இதில் பாண்டியர் கோட்டையில் விளக்கு வைப்பது யார் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளதாம்.
 
இது குறித்து பெரியவர்கள் பாண்டிய மன்னர்களின் ஆவி அங்கு இருப்பதாகவும், அதன் மூலம் தான் விளக்கு எரிகிறது என்றும் செவி வழியாக கூறுகிறார்கள். சிலர் ஒரு படி மேலே போய் அங்கு புதையல் இருப்பதாகவும் அந்த புதையலை காவல் காக்க பூதம் ஒன்று உள்ளது என்றும் கூறுகின்றனர். இது எல்லாம் 21-ம் நுர்ற்றாண்டுக்கு ஒத்துக் கொள்ளாத கதையாக இருந்தாலும் கூட இப்பகுதி செல்லும் போது அது உண்மையாக இருக்குமோ என்று நம்மை புல்லரிக்க வைக்கிறது.
 
அடுத்தபடியாக பொதிகையை பற்றி விக்கிரமசிங்கபுரம் வடக்கு பிள்ளையார் கோவில் தெரு, திருப்புகழ் இல்லத்தில் இறைப்பணி செய்து வரும் ஆவுடையப்பன் கூறியதாவது:
ஒங்கல் இடைவந்து
உயர்ந்தோர் தொழுவிளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத்
இருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் தனி யாழி
வெங்கதிரோன் ஏனையது
தன்னேரில்லாத தமிழ்  
 
  - வில்லி பாரதம் வில்லிபுத்துரன் மேற்கண்டவாறு செய்யுள் எழுதியுள்ளார்.
 
அதில் பொதிகை மலை, சூரியன், தமிழ் இந்த மூன்றும் தான் உலகம் தோன்றும் போதே தோன்றியது என்று கூறியுள்ளார். ஆகவே மிகவும் தொன்மையான இந்த பொதிகை மலையை அருணகிரிநாதர் திருபுகழில் 411 பாடலில் பிறவி பிணியை அருக்க சிவன் மலை இதுவே என்றும் பாடியுள்ளார். பொதிகை மலை ஏக பொதிகை, நாக பொதிகை, தோரண பொதிகை ஆகிய மூன்று பிரிவாக உள்ளது.
 
ஏக பொதிகை தான் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெரிய சிகரம் இதுதான் தெற்கே திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் இருந்து வடக்கு பார்த்தாலும் தெரியும். விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் ஊரில் இருந்து தெற்கே பார்த்தாலும் தெரியும். அகத்தியர் இங்கு தவம் இருந்த இடம் என்று இது கருதப்படுகிறது. சேரமன்னர்கள் பொதித்த சங்கு முத்திரை உள்ளது. காரையாரில் இருந்து 22 கி.மீட்டர் தென்புறம் திருவனந்தபுரத்தில் இருந்து 18 கி.மீட்டர் வடபுறம் உள்ளது.
 
திருவனந்தபுரத்தில் இருந்து திருநெல்வேலி மையப்பகுதியில் உள்ள இந்த இடம் வழியாக 40 கி.மீட்டர் தான். மலைப்பாதை மட்டும் அமைத்தால் மிக மிக அருகில் திருவனந்தபுரம் உள்ளது. இதற்கிடையில் தற்சமயம் திருவனந்தபுரம் செல்ல நுர்று கி.மீட்டரை தாண்டி செல்ல வேண்டியது உள்ளது. இந்த ஏக பொதிகையில் தான் அகத்தியர் பிரதிட்சை செய்யப்பட்டுள்ளார். அகத்தியரை வணங்க பக்தர்கள் மட்டும் வரவில்லை.
 
பௌர்ணமி நேரங்களில் தேவாதி தேவர்கள் எல்லாம் ஏக பொதிகை வந்து அகத்தியர் பிரதிட்சை செய்யப்பட்ட இடத்தில் பூமழை பொழிந்து வணங்குகிறார்கள். மேலும் அம்பாசமுத்திரத்தில் இருந்து இந்த ஏக பொதிகைக்கு சுரங்க பாதை உள்ளது என்றும் கூறுகிறார்கள்.
 
ஏக பொதிகையில் இஞ்சுகுழி பாண்டியர் கோட்டை, கொத்தளம் ஆகியவை உள்ளன. இவையெல்லாம் அரசர்கள் இங்கு தங்கி அரசு ஆலோசனை செய்து வந்தார்கள் என்பது உண்மையென புலப்படுகிறது.


Favorite tagsTirunelveli Business Directory