திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (26 of 53)

 
தாமிரபரணி தாயை பொறுத்தவரை பல கிராமங்களில் தாய் தெய்வ மாகவே வழிபடுகிறார்கள். அதற்கு ஒரு உதாரணம் தான் கடந்த பகுதியில் கூறியது. திருவைகுண்டம் பகுதியில் தாமிரபரணி ஆற்றில் எச்சில் கூட துப்பக் கூடாது என்பார்கள். தாமிரபரணியில் குளிக்கும் ஆண்கள் டவல் கட்டாமல் குளித்தால் பெரியவர்கள் திட்டுவார்கள். அந்த அளவுக்கு தாமிரபரணி மீது பாசமும் பற்றும் வைத்துள்ளார்கள் இந்தபகுதி மக்கள்.
 
தோரணமலை
 
தோரணமலையைப் பற்றி ஆசிரியரு அகஸ்தீஸ்வரன் கூறியது:
 
பொதிகை மலையில் வலது புறம் தோரணமலை உள்ளது. இந்த மலை தோரணம் போல் நமது கண்ணுக்கு தோன்றுவதால் தோரணமலை என்று பெயர் வந்தது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்று சொல்லும் கூற்றுக்கு இணங்க தென்றல் தவழ்ந்து வரும் தென் பொதிகை மலைத் தொடரில் தோரண மலையில் முருகன் கோவில் உள்ளது.
 
பூஜை
 
இந்த மலை அடிவாரத்தில் ஒரு தோரணவாயில், குடிநீர் தொட்டி, குளிக்கும் அறை முதலியன கட்டி வைக்கப் பட்டுள்ளது. இக்கோவிலுக்கு வேறு வருமானம் எதுவும் கிடையாது. ஆகவே பூஜைகள் பக்தர்கள் ஆதரவிலேயே நடைபெறுகிறது. கடைசி வெள்ளிக்கிழமை இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். மலை மீது ஏறிச் செல்ல முடியாத பக்தர்கள் இந்த இடத்தில் வணங்க மலை அடிவாரத்தில் விநாயகர் கோவிலும், பூங்காவில் கண்ணன் மற்றும் லட்சுமி உருவங்களும் உள்ளது.
 
இதற்கு பூஜைகளும் நடைப்பெற்று வருகிறது. இங்கு உள்ள தெய்வத்தை வணங்கினால் துன்பங்கள், துயரங்கள், மற்றும் பிணி தீருகிறது. கோவிலின் மேல் உச்சியில் ராமர் பாதம் பட்ட இடத்தில் பாறையில் கால் தடம் உள்ளது. பொதிகையை பற்றியே கூறிக்கொண்டு வந்த நாம் திடீரென்று ஆலங்குளம், கடையம் என்று விலகி செல்வது போல் தெரிகிறதா? சில காரணங்களுக்காக இதை சொல்லி தீர வேண்டியது உள்ளது. குறிப்பாக ராமர் இவ்வழியாக மானை தேடி பொதிகை மலைக்கே வருகிறார்.
 
இதற்கு முன்பு சங்க இலக்கியத்தில் கன்னியாகுமரியில் இருந்து 700 காத தூரம் (1 காத தூரம் என்றால் 10 மைல் தூரம்) ஒரு நாடு இருந்தது என்றும் பகுருளி ஆறும், குமரி ஆறும் இங்கு ஓடியது என்றும், அங்கு தான் கபடபுரம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதில்தான் முதல் தமிழ் சங்கம் இருந்துள்ளது. 2-வது தமிழ் சங்கம் தென் மதுரையில் தோன்றியது என்றும், அங்கு அகத்திய மாமுனிவரும், முருகப்பெருமானும் இருந்ததாகவும் இங்கு அகத்தியம் என்னும் நூல் எழுதப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
 
இந்த அகத்தியம் நூல் பிற்காலத்தில் கிடைக்காமல் போனதாகவும் கூறுகிறார். இடைச் சங்கத்தில் அகத்தியர் சீடரான தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் தான் முதல் தமிழ் நுர்லாகவும் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது அகத்தியர் பெருமானுக்கு முருகன் தமிழ் போதித்ததாக கூறப்படும் கோவில் தற்சமயம் பொதிகை மலையில் உள்ள அகத்தியர் அருவி செல்லும் வழியில் உள்ளது.
 
முன்பு இந்த கோவில் முன்பு தான் பக்தர்கள் குளிப்பார்கள். இக்கோவில் முன்புள்ள மரத்தில் பகல் நேரத்திலும் தண்ணீர் சொட்டு சொட்டாக விழும். மரத்தின் கீழ் அமர்ந்து இருக்கும் பக்தர்கள் மீது அது விழும் போது உடம்பு புல்லரிக்க செய்யும். அந்த அளவுக்கு இப்பகுதி செழிப்பாக இருந்தது. தற்சமயம் இது குறைந்து உள்ளது.தற்போது இந்த முருகன் கோயில் சீரமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த பகுதியில் அகத்தியர் அருவிக்கு வரும் மக்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கிறார்கள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோயிலில் தினசரி அர்ச்சகர் வந்து அர்ச்சனை செய்கின்றனர். அகத்தியர் அருவிக்கு வாகனம் மூலமாக வந்தால் சாலை வழியாகவும் , இல்லை என்றால் தலையணையில் இருந்து நடந்தே இந்த கோயிலுக்கும் அகத்தியர் அருவிக்கு வந்து விடலாம். பின்பு இந்த பகுதியில்இருந்து முன்பு குதிரை ஓட பயன் படுத்திய ஓடுதளம் வழியாக லோயர் கேம்ப் சென்று விடலாம்.
 
அறிந்து கொள்ள

மாயமானை தேடி ராமர் சென்ற இடம் ஆலங்குளம் அருகே உள்ள மாயமான்குறிச்சிஆகும். இந்த கிராமத்தில் தான் ராமர் தேடி வந்த மான் மாயமாக மறைந்தது. ஒரு இடத்தில் மான் குத்தரை (தலைகீழ்) பாய்கிறது. அந்த இடத்துக்கு பெயர் குத்தரைபாய்ஞ்சான் என்றும் இப்போதும் அழைக்கப்படுகிறது. இவ்வழியாக ராமர் தோரணமலைக்கு வந்தார்.இதை நினைவு கொள்ளும் வகையில் தற்போதும் ராமர் வந்த பாதை வழியாக நடந்து வரும் மக்கள் கற்களை பொறுக்கி குவித்து போட்டுக் கொண்டே வருகிறார்கள்.


Favorite tags



Tirunelveli Business Directory