திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (29 of 53)

தீர்த்த கட்டங்கள் :
 
நமது உடலில் அநேக உறுப்புகள் இருந்த போதிலும் கண், இதயம் போன்றவைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றனர். அது போல நதிகளும் பல ஊர்களின் வழியாக சென்ற போதிலும் முனிவர்கள், நதிகள், மகான்கள் இவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட பூஜிக்கப்பட்ட பிரதிஷடை செய்யப்பட்ட இடங்கள் தீர்த்த கட்டங்கள் என போற்றப்படுகின்றன.
 
மனம் உவந்து வரைந்த கல்யாண தீர்த்த சிற்பம்
 
தாமிரபரணி நதியில் பல அற்புதம் உள்ளது. இதோ இந்த கற்சிற்பம் கல்யாண தீர்த்தம் பகுதியில் உள்ளது. இந்த சிற்பம் அனைத்துமே வட நாட்டு யாத்திரியர்கள் மனம் உவந்து வரைந்தவைகள் ஆகும். பெரும் பாலுமே ஒரு சிற்பம் செதுக்க வேண்டும் என்றால் அந்த காலத்தில் சிறை கைதிகள் கொண்டும். அல்லது பணத்துக்காக அவர்களை இழுத்து கொண்டு வந்துதான் வரைவார்கள். ஆனால் இந்த சிற்பம் அனைத்துமே வரைந்தவர்கள் மனம் உவந்து செய்தவைகளாகும். இந்த ஓவியத்தினை நாம் காண வேண்டும் என்றால் கல்யாண தீர்த்தம் முன்பே உள்ள சிவன் கோயில் அருகில் கீழே இறங்கி தான் பார்க்க வேண்டும்.
 
எந்த தீர்த்த கட்டத்தில் எந்த மாதத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும்
 
மிகவும் பிரசித்தி பெற்ற தாமிரபரணி நதியை பற்றி பலர் கூறிய கருத்துக்களை பார்த்தோம். இந்த நதியில் பெருமையை காளிதாச மகாகவி ‘மாத பிரஸ்தமலயாசல பதமபீடே’ என்று சிறப்பித்துக் கூறுகிறார். இத்தகைய பெருமை வாய்ந்த தாமிரபரணியில் தீர்த்தகட்டங்கள் மிக அதிகமாக உள்ளன.
 
பொதுவாக தீர்த்தகட்டங்கள் பாவங்களை நீக்கி இம்மைக்கும், மறுமைக்கும் புகழ் சேர்ப்பவையாக அமைகிறது. சில தீர்த்தகட்டங்கள் நோயில் இருந்து காப்பாற்றவும் வாழ்விற்கு வளங்களை சேர்க்கவும் முன்னோர்களின் பிதுர் கடன் செய்யவும் பயன்படுகின்றன. அத்தகைய புகழ் வாய்ந்த தீர்த்த கட்டங்களை பற்றி தான் முதலில் நாம் பார்க்கப் போகிறோம்.
 
பாவங்கள் போக்க
 
இதில் பாணதீர்த்தம், நாதாம்புஜம் (சேரன்மகாதேவி), பிரமாரணியம் (திருவைகுண்டம்), இராமபுரம் (ஆழ்வார் திருநகரி), கோட்டிசுவரம் (ஊர்க்காடு), புடார்ச்சனம் (திருப்புடைமருதூர்) வேனுவணம்(நெல்லை) , நதிப்புரம் (ஆத்தூர்), போன்ற தீர்த்த கட்டகள் அனைத்துப் பாவங்களையும் போக்க வல்லமை தருவதாகும். இந்த தீர்த்தம் எல்லாம் இம்மைக்கும் மறுமைக்கும் நற்கதி அளிக்க வல்லது ஆகும்.
 
தீர்த்த கட்ட விபரங்கள்
 
பூர்வவாகினியாக தாமிரபரணி ஓடும் இடத்தில் ஊர்ஜஸ்தீர்த்தம், இஷர்தீர்த்தம், விருஷர்ங்கதீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், சக்கரதீர்த்தம், பாண தீர்த்தம் ஆகியவை உள்ளது. உத்திரவாகினியாக தாமிரபரணி ஓடும் இடத்தில் வாமன தீர்த்தம், ரேம்ப தீர்த்தம், நரசிங்க தீர்த்தம், போகி ராஜ தீர்த்தம் உள்பட பல தீர்த்தம் உள்ளது. பாண தீர்த்தம், பாஞ்சஜன்ய தீர்த்தம். வராக தீர்த்தம், சக்கரசீலா தீர்த்தம், முனிதீர்த்தம், பிசங்கிலா தீர்த்தம், கன்னியாதீர்த்தம், வருணாதீர்த்தம், ராமதீர்த்தம், காலதீர்த்தம் இத்தகைய தீர்த்தங்களும் தாமிரபரணி நதி உற்பத்தி ஸ்தானத்தில் இருந்து கல்யாணதீர்த்தம் வரை உள்ளது.
 
கல்யாண தீர்த்தம், நாரத தீர்த்தம், வருண தீர்த்தம் (அகத்தியர் அருவி), பிராசேதல தீர்த்தம், தும்புரு தீர்த்தம், பருவத்தீர்த்தம், பாபநாசத்தில் இந்திரசீல தீர்த்தம், திரிநதிசங்கம தீர்த்தம், தீப தீர்த்தம், சாலா தீர்த்தம், அம்பாசமுத்திரத்தில் காசிப தீர்த்தம், கண்ணுவ தீர்த்தம், கல்லிடைகுறிச்சியில் பிருகு தீர்த்தம் ஆகியவையும் மிக முக்கியவையாகும்.
 
உத்திரவாகினியாக தாமிரபரணி ஓடும் இடத்தில் கோட்டீஸ்வர தீர்த்தம் (ஊர்க்காடு), சக்கர தீர்த்தம், மாண்டக தீர்த்தம்,திருப்புடைமருதூரில் கடனா சங்கம தீர்த்தம், மானவ தீர்த்தம், சுரேந்திர மோட்ச தீர்த்தம், பைசாசமோசன தீர்த்தம், தர்மதர தீர்த்தம், தண்டபிரம்மசாரி தீர்த்தம், கரும தீர்த்தம், அத்தாளநல்லூரில் கஜேந்திரா மோட்ச தீர்த்தம், புஷபவனேச தீர்த்தம், மணிக்கீரிவ தீர்த்தம், அரிய நாயகிபுரத்தில் யட்ச தீர்த்தம், கோ தீர்த்தம், சோம தீர்த்தம் சேரன்மகாதேவியில் வியாச தீர்த்தம், மார்கண்டேய தீர்த்தம், ரோமச தீர்த்தம்,(கோடகநல்லூர்), துருவாச தீர்த்தம், பார்கவ தீர்த்தம்(கரிசூழ்ந்த மங்களம்), வைனதேய தீர்த்தம், சாயா தீர்த்தம், காந்தர்வ தீர்த்தம், பானு தீர்த்தம், பிரபா தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌரி தீர்த்தம் (செவல்), யாக தீர்த்தம், ருத்ர தீர்த்தம், புஷப தீர்த்தம் (சிந்துபூந்துறை), ரிஷி தீர்த்தம், மூர்த்தீஸ்வரன தீர்த்தம், அக்கினி தீர்த்தம், தயா தீர்த்தம், புசங்க மோகன தீர்த்தம், சுசி தீர்த்தம், சிங்க தீர்த்தம், கேது தீர்த்தம், உஷர் தீர்த்தம், இவைகள் எல்லாம் தருவை அருகில் உள்ளன.
 
வடகரையில் ராமா தீர்த்தம், ஜடாயு தீர்த்தம், ருத்ரபாத தீர்த்தம், ஆகியவை திருவண்ணநாதபுரம் மற்றும் அருகன்குளம் அருகில் உள்ளன. பாவ விமோட்சன தீர்த்தம், பட்ஷி தீர்த்தம், அட்சுரு தீர்த்தம், காசி தீர்த்தம், நதி ஸ்தம்பன தீர்த்தம், பூசாவதன தீர்த்தம் (செப்பரை), துரிதாபக தீர்த்தம், மங்கள தீர்த்தம் (பாலாமடை), லோகிவாச தீர்த்தம் ஆகியவையும் உத்திரவாகினியாக தாமிரபரணி ஓடும் இடத்தில் உள்ளது.
 
தட்சனவாகினி
 
தாமிரபரணி வடக்கிருந்து தெற்காக ஓடும் இடத்தினை தட்சன வாகினி என்பார்கள். இந்த இடத்தில் சித்ராசங்கம தீர்த்தம், சத்திய தீர்த்தம், விசுவ தேவ தீர்த்தம், தசாவதார தீர்த்தம், சப்தரிஷி தீர்த்தம், மாஞ்ஜிஷட தீர்த்தம், போகி தீர்த்தம், யாககுண்ட தீர்த்தம், சுரதா தீர்த்தம், ஸ்மராள தீர்த்தம், சத்புத்ர புத தீர்த்தம், காந்தீஸ்வர தீர்த்தம், ஆழ்வார்திருநகரில் இராம தீர்த்தம், போகி தீர்த்தம், தரா தீர்த்தம், சக்கர தீர்த்தம், நிதி தீர்த்தம், கால தீர்த்தம், மங்கள தீர்த்தம், நிஷர் தீர்த்தம், ஸ்ருதி தீர்த்தம், லட்சுமி நாராயண தீர்த்தம்,புதூர் தீர்த்தம், அஸ்வினி தீர்த்தம் (இரட்டை திருப்பதி), மோகபாக தீர்த்தம், முக்தி முத்திர தீர்த்தம், மதாவள தீர்த்தம், ஞான தீர்த்தம், அக்கினி தீர்த்தம், சேர்ந்தமங்கள தீர்த்தம் (ஆத்தூர்), காசினி தீர்த்தம், கௌரி தீர்த்தம், சங்க ராஜதீர்த்தம், சம்பு நாராயண தீர்த்தம், அகத்தியர் தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம் முதலியன உள்ளது.
 
இதில் தாமிரபரணி முறப்பநாட்டில் இருந்து முத்தாலங்குறிச்சி வரை வடக்கிருந்து தெற்காக ஓடுகிறது. பின் கருங்குளத்தில் இருந்து அந்த நதி மீண்டும் கிழக்கு பார்த்து திரும்புகிறது.
 
முக்கிய தீர்த்தம்
 
தாமிரபரணி தீர்த்தத்தில் மிக முக்கிய தீர்த்தமாக கருதப்படுபவை பாண தீர்த்தம், கல்யாண தீர்த்தம், வேத தீர்த்தம் (அகத்தியர் தாமிரபரணி யை உருவாக்கும் முன்பு இந்த பகுதியில் ஒடிய ஆறு இப்பெயரைதான் பெற்று இருந்தது) அகத்தியர் தீர்த்தம், பாபநாசம் தீர்த்தம். இவையெல்லாம் போக பொதிகை மலையில் 32 தீர்த்தக்கட்டங்கள் ரிஷிகள் நீராடும் தீர்த்தமாக கருதப்படுகிறது.
 
அம்பையில் காசிபர் தீர்த்தம், ஊர்க்காட்டில் கோட்டிஸ்வர தீர்த்தம், திருப்புடைமருதூர், புடாச்சன தீர்த்தம், குறுக்குத்துறை வேணுவன தீர்த்தம், அருகன்குளம் அருகே ஜடாயு தீர்த்தம், ஆத்தூர் அருகே உள்ள நதிப்புற தீர்த்தம் உள்பட சில தீர்த்த கட்டம் பிரதித்திப் பெற்ற தீர்த்தக்கட்டமாக உள்ளது. அந்த தீர்த்தக்கட்டம் குறித்து பல்வேறு கதையும் கூறப்படுகிறது. அது குறித்து நாம் அந்தந்த பகுதிக்கு வரும் போது தொடர்ந்து கூறி வருவோம். இனி எந்தெந்த தீர்த்தக்கட்டத்தில் எந்த மாதம் நீராட வேண்டும் என்று காணலாம்.


Favorite tags



Tirunelveli Business Directory