திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (31 of 53)

கடனாநதி உற்பத்தியாகும் இடத்தில் கோரக்க நாதர் கோவில உள்ளது. அதன் முன்பு பிள்ளையார் சிலை ஒன்று உள்ளது. அதைச் சுற்றி தண்ணீர் பொங்கிக் கொண்டே இருக்கும். அந்த தண்ணீர் குடிக்க சுவையாகவும் இருக்கும். இங்கு இண்டன் செடி மிக அதிகமாக காணப்படுகிறது. இதில் தவம் செய்யும் சித்தர்கள் ஆங்கங்கே குகைக்குள் இருந்து தவம் செய்வார்கள்.  
 
சர்க்கஸ் காட்டும் காட்டு கோழி:
 
இக்கோவில் முன்பு சருகுகள் மிக ஏராளமாக கிடக்கும். இதில் காட்டு கோழி விளையாடிக் கொண்டிருக்கும். நம்மவர்களை பார்த்தால் அந்த காட்டுக் கோழிகள் சருகுகள் புகுந்து விடும். இதில் தானே புகுந்துள்ளது என்று நாம் காட்டுக் கோழியை கண்டு பிடிக்க சருகுக்குள் கைவிட்டால் அக்கோழி சருகுகள் வழியாக 50 அடி தள்ளி போய் எழுந்து சர்க்கஸ் காட்டும்.
 
அந்த அளவுக்கு சருகுகள் சுமார் 3 அடி உயரம் வரை இந்த இடத்தில் இருக்கும். காட்டுக் கோழி சருகுகளில் 50 அடி தூரம் வரை பதுங்கி செல்லும் போது சருகுகள் சத்தம் கூட கேட்காது என்பது ஆச்சரியமான விசேஷம்.
 
சரக்கொன்றை
 
சரக்கொன்றை என்ற அபூர்வ மரம் தாமிரபரணி கரையில் உள்ள பொதிகை மலையில் சில இடங்களில் அபூர்வமாக காணப்படும் இந்தவகை மரம் தாமிரபரணி நதிக்கரையில் திருவைகுண்டம் அருகில் உள்ள மேலபுதுக்குடி என்னும் கிராமத்தில் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில் அருகே உள்ளது.
 
கொன்றை பூ சிவனுக்கு பிடித்த பூ.. சிவபூஜைக்கு உகந்த பூ. இந்த பூ சித்திரை, வைகாசி மாதங்களில் சர.. சரமாக பூத்து குலுங்குவதால் சரகொன்றை என்று பெயர் பெற்றது. இதில் வேறு ஒரு விசேஷமும் உண்டு. இந்த மரம் பூ பூத்து, காய்த்து, விதையாகி, காற்றில் விதை அடித்து செல்லப்படுகிறது. ஆனால் இம்மரத்தின் சுவடுகள் வேறு எங்கேயும் முளைக்கவில்லை என்பது ஆச்சரியம் தான்.
 
பிரண்டும் முனிவர்
 
கோரக்கநாதர் கோவிலுக்கு நாம் சென்றால் 4 மணிக்கு மேல் அங்கே தங்க முடியாது. இரவு மிளா, காட்டுப் பன்றி போன்ற மிருகம் வரும். அவைகளிடம் இருந்து தப்பிக்க நாம் தீ வளர்த்து தான் தங்க வேண்டும். சுமார் 20 வருடங்களுக்கு முன்பே இங்கு தவம் இருந்த முனிவர் பற்றி ஏற்கெனவே கூறியிருந்தோம். இங்கு ஒருவர் குறி சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார் என்கிறார் எனது குருநாதர் நல்லாசிரியர்.
 
இன்னொரு பெரிய அற்புதம் இப்பகுதியில் நிகழ்ந்து வருகிறது. இங்கு சிறு சிறு குகைகள் உள்ளன. அந்த குகைக்குள் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் முனிவர்கள் இருப்பதாக கூறுகிறார்கள். அது உண்மை என்று நிரூபிப்பது போல குகை அருகே நாம் சென்றால் அந்த இடத்தில் இருந்து யாரோ கைகால்களை பிரண்டும் சத்தம் கேட்கிறது. இதில் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மிக அதிகமாக சத்தம் இருக்கும். இந்த சம்பவத்தினை இதை நாம் நம்பியே தீர வேண்டும் என்று இங்கு சென்று வந்த மக்கள் கூறுகின்றனர்.
 
முன்பு இந்த இடத்துக்கு கடனாநதி வழியாக சென்றுவர பாதை இருந்தது. சுமார் 40 வருடத்திற்கு முன்பு கடனாநதி அணைக்கட்டுகட்டியதால் ஆழ்வார்குறிச்சி சம்பன்குளம் வழியாக 10 கி.மீட்டர் நடந்துதான் இந்த கோயிலுக்கு செல்ல வேண்டியது உள்ளது. சுண்ணாம்பு பாறையில் தோன்றிய மசூதி- இப்பகுதியில் கோரக்க நாதர் கோயில் செல்லும் வழியில் ஒரு முஸ்லீம் மசூதி உள்ளது. இது சுண்ணாம்பு பாறையில் உள்ளது. இங்கு கோழி, ஆடு தலைகளின் எலும்புகள் கிடக்கும். இங்கு நடக்கும் தொழுகையில் இந்துக்களும் கலந்து கொள்கின்றனர்.
 
இந்துக்களும் இஸ்லாமியர்களும் சகோதரர்களே என்பதை உலகத்திற்கு உணர்த்துவது போல் இந்த சம்பவம் உள்ளது. அது மட்டுமல்லாமல் மிகவும் பிரசித்தி பெற்ற பொட்டல்புதூர் தர்கா வளாகத்தில் உள்ள அழகான புளியமரத்துக்கு இந்துக்கள் தண்ணீர் எடுத்து ஊற்றுகிறார்கள். தர்காவுள்ளே இந்துக்களுக்கு தேவையான விபூதி உள்ளது. விளக்கு ஏற்றும் போது கூட இந்துக்கள் எண்ணெய் விடுகின்றனர்.
 
தெரிந்து கொள்வோம்

இங்கேயும் சந்தனமழை பொழியும் மரங்கள் உள்ளது. அந்த மரத்தின் பெயர் மகிஷர்வர்த்தினி.. அதாவது மகிஷம் என்றால் எருமை.. அதாவது எருமை கடா உருவம் கொண்டவன் மகிடாஸ்வரன். அவனை வதம் செய்தார் காளி. அவன் அப்போது கேட்டு கொண்டதற்கு இணங்க அவன் பெயரால் இந்த மகிஷர் வர்த்தனி மரம் உருவானது, இம்மரத்தில் தான் பௌர்ணமி இரவில் சந்தன மழை பொழிகிறது.


Favorite tags



Tirunelveli Business Directory