திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (34 of 53)

யானை- முதலை விமோசனம் அடைந்த விதம்
 
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அவர் அவர் நாட்டுக்கு கிளம்பி ஆட்சி அரியணையில் ஏறினார்கள். சந்திர மண்டலத்தில் அரியணை ஏறி பாண்டிய மன்னர் சந்திரபாண்டியன் என்று பெயர் பெற்றான். அவனின் மகன் விக்கிரமசிங்கன். இவரது பெயரால் தான் தற்சமயம் விக்கிரமசிங்கபுரம் என்ற நகரம் உள்ளது. விக்கிரமசிங்கன் ஆட்சி காலத்திற்கு பின்பு அவரது மகன் கருணாகர பாண்டியன் ஆட்சி பொறுப்பை ஏற்றான்.
 
கருணாகர பாண்டியன் ‘கருணாபுரி’ என்னும் நகரை தலைமை யிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்தான். அவன் காலத்துக்கு பிறகு அவரது மகன் இராசராசன் ஆட்சி பீடத்தில் ஏறினார். சிவனின் தீவிர பக்தனான இராசராசன் சிவனை நோக்கி தவமிருந்த காரணத்தால் பூதங்களை படை வீரர்களாகவும் அனுப்பினார். அதை கொண்டு எட்டு திக்கிலும் சென்று பூத படையுடன் மோதி வெற்றி வாகை சூட்டினார். பின்பு பூதப் படையுடன் மீண்டும் பொதிகைமலையை நோக்கி வரும் போது பாலாற்றில் தனது ஐம்புலன்களையும் அடக்கி மீண்டும் தவம் செய்தான்.
 
பூதம் கட்டிய அணைக்கட்டு
 
பூதப் படை என்றவுடன் நாம் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்ப்போம். ஆனால் அந்த காலத்தில் இந்த சம்பவம் எல்லாம் உண்மை என்பது போல சில நிகழ்சிகள் நடந்துள்ளது. பூதம் கட்டிய அணைக்கட்டு என்று தாமிரபரணி ஆற்றின் 7-வது அணைக்கட்டான மருதூர் அணைக்கட்டை கூறுவார்கள். ஏன் பூதம் அணை கட்டுமா? என நாம் கேள்வி கேட்கலாம். ஆனால் இந்த அணைக்கட்டினை பற்றி நம்பித்தான் தீர வேண்டும். ஏனென்றால் அந்த காலத்தில் பொக்லின் இல்லை. ஜே.சி.பி என்று சொல்லக்கூடிய ராட்சத எந்திரம் இல்லை. ஆனால் மிகப் பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போட்டு மருதூர் அணைகட்டை கட்டியுள்ளனர். இந்த அதிசய 4000 அடி தொலைவு அணைக்கட்டு வளைந்து நௌpந்து செல்கிறது. இது பற்றிய தகவல்களை நாம் ஏற்கனவே இந்த நூலின் ஆரம்பகட்டத்தில் கூறிவிட்டோம்.
 
அடுக்கப்பட்ட பாறைகள்
 
மருதூர் அணையை பார்த்தாலே ஆச்சரியமாக இருக்கும். இந்த அணையில் நீரின் ஓட்டத்துக்கு ஏற்றபடி கல்களால் அடுக்கி அணை அமைந்திருப்பது மிகவும் விசேசமானது ஆகும். மேலும் அந்த அணை வளைந்து நௌpந்து செல்லும் நேர்த்தியை பார்க்க ஓராயிரம் கண் வேண்டும்.
 
அகத்தியர்
 
பாலாற்றில் தவம் இருந்து இராசராசன் ஐம்புலன்களை அடக்கி தவம் செய்யும் போது அங்கு அகத்திய மாமுனி வந்தார். அவரை மன்னன் கவனிக்கவில்லை. ஆகவே ஆத்திரம் அடைந்தார் அகத்தியர். சிவனை போற்றி உட்கார்ந்து இருந்த இராசராசன் எட்டு திக்கிலும் படை எடுத்து பெற்ற வெற்றியின் இறுமாப்பில்தான் தன்னை வரவேற்கவில்லை என்று நினைத்தார் அகத்தியர். இதனால் அவரை நோக்கி சாபம் இடுகிறார். முனிவரின் சாபப்படி இராசராசன் யானை ஆகிறான். யானை உருவத்தில் மாறிய பாண்டியன் ‘அகத்திய மாமுனியே.. நான் ஒரு பாவமும் செய்ய வில்லையே என்னை நோக்கி சாபம் இட்டு விட்டிர்களே என்று கேட்டான்.
 
மேலும் என் சாபம் நீங்க நான் என்ன செய்ய வேண்டும்’ என்றும் கேட்டான். பாண்டியா! நீ முன் காலத்தின் வினையை அனுபவிக்கவே இந்த சாபம் பெற்றுள்ளாய். இதே போல் தாமரைத் தடாகத்தில் வித்தியாதரன் என்றொரு அரசன் முதலையாக உள்ளான். அவன் நாரதரால் சபிக்கப்பட்டவன். ஓரு நாள் அந்த முதலை, யானை வடிவத்தில் உள்ள உனது காலை பற்றும். அப்போது நீ ஓலமிடுவாய். அப்போது சிவனின் அருளால் திருமால் தோன்றி உங்கள் இருவர் சாபத்தையும் தீர்ப்பார் என்று கூறினார்.
 
பாவம் தீர்ந்தது
 
அந்த குறிப்பிட்ட காலமும் வந்தது. தாமிரபரணி தடாகத்தில் முதலை கிடந்தது. அங்கு தண்ணீர் குடிக்க யானை உருவில் இருந்த பாண்டிய மன்னன் வந்தான். அப்போது முதலை காலை பிடித்தது. மன்னன் ஓலமிட அகத்தியர் கூறியது போல் திருமால் காட்சி கொடுத்தார். பின் தனது கையில் வைத்திருந்த சக்கரத்தைச் சுழற்றி வீசினார். அது முதலையை வதை செய்தது. அதன் பின் இருவரும் சாபவிமோசனம் பெற்றனர். சாப விமோசனம் பெற்ற பாண்டிய மன்னன் சிவனை வணங்கி நின்றான்.
 
அவனுக்கு திருமாலுடன் சிவனும் காட்சியளித்தார். பாண்டியனின் வேண்டுகோளுக்கு இணங்க தற்சமயம் திருமாலும், சிவனும் ஒன்றாக அவ்விடத்தில் உள்ளனர். அந்த ஊர் அத்தியாளநல்லூர் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. அத்தி என்றால் யானை அத்தியை பெருமான் ஆள் கொண்ட ஊர் அத்தியாள நல்லூர்.
 
தாமிரபரணியின் வெள்ளமும்- நகைச்சுவையும்
 
தாமிரபரணியில் நடந்தது என்று கூறப்படும் ஒரு செவி வழிகதை இது:
 
ஒரு சயமம் கார்த்திகை மாதம் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறுக்குத்துறை (திருநெல்வேலி) முருகன் கோவில் மண்டபத்தையே வெள்ளம் மூழ்கடித்து விட்டது. வைக்கோல் படப்பு, வீடுகள், கோழி, ஆடு, மாடு என்று வெள்ளம் அடித்துக்கொண்டு வருகிறது. அதில் எதிர்பாரதவிதமாக ஒரு குழந்தையும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது. அந்த குழந்தை ஒரு வைக்கோல் போர் மீது இருந்தது. இந்த காட்சியை திருநெல்வேலி ஆற்று பாலம் மீது நின்று பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
இளைஞர்கள் கைகளை பிசைந்துக் கொண்டிருக்க, பெண்கள் அழுதுகொண்டிருந்தனர். ஐயோ, குழந்தை என ஓலம் இந்த இடத்தில் வெள்ளத்தின் இறைச்சல் சத்தத்தோடு மிக அதிகமாக இருந்தது. ‘ஐயோ.. இந்த குழந்தை கதி, அதோ கதிதானா’ வைக்கோல் படப்பு மேல் இருக்கும் இந்த குழந்தை கொஞ்சம் பிரண்டு விழுந்தால் கூட வெள்ளத்தில் விழுந்துவிடுமே. என்று எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் யாரும் காப்பாற்ற முன் வரவில்லை.
 
அந்த நேரத்தில் தான் அந்த சம்பவம் நடந்தது. ஒரு பெரியவர் அந்த இடத்துக்கு வந்தார். சுமார் 70 வயது அவருக்கு இருக்கும்.  தள்ளாடிக் கொண்டு நின்ற அவர் குழந்தையை காப்பாற்ற தாமிரபரணி ஆற்றுக்குள் பாய்ந்தார். தாமிரபரணியில் விழுந்த அந்த வயதானவர் ஆற்று வெள்ளதில் நீச்சல் அடித்துப் பாய்ந்து சென்றார். வைக்கோல் போர் மீது ஏறினார். பின் அந்த குழந்தையை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார். அனைவரும் தாத்தாவை பாராட்டினர். எல்லோரும் ஒடி வந்து அவருக்கு கை கொடுத்தனர்.
 
போலீஸ்காரர்கள் ஒருபடி மேலே போய் தாத்தாவுக்கு அண்ணா விருது கொடுக்க சிபாரிசு செய்யணும் என்றனர். ஆனால் தாத்தா, எவண்டா அவன் என் பக்கத்தில் நின்ற சிவப்பு சட்டை காரன் என்று கேட்டார்.‘ஏன் தாத்தா? என்று ஒருவர் கேட்டார். அவன் தாண்டா என்னை ஆற்றுக்குள்ளே தள்ளி விட்டுட்டான் என்றார். தாத்தாவின் வீரத்தீர செயலை பார்த்து அனைவரும் சிரித்தனர்.


Favorite tags



Tirunelveli Business Directory