திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (36 of 53)

பரணியில் காவிரிக்கு திருமணம்
 
தாலி பாக்கியம் நிலைக்கவும், நல்ல மழை பெய்யவும் தாமிரபரணி கரை நெல்லையில் காவிரிக்கு திருமணம் செய்கிறார்கள். இந்த வைபவம் கடந்த 70 வருட காலமாக நடக்கிறது. நெல்லை மீனாட்சி புரத்தில் வசித்து வந்த வீரலட்சுமி அம்மையார் இந்த விழாவை நடத்தி வந்தார். தற்போது அவரது மருமகள் அருணா இந்த வைபவத்தை தொடர்கிறார்.
 
ஐப்பசி மாதம் 1ம் தேதி முதல் ஆராதனை நடக்கிறது. ஐப்பசி மாதம் 22ம் தேதி காவிரிக்கு திருமணம் நடக்கும். இந்த நாளில் புது அம்மன் கோயில் முன்பு 7 சொம்பில் காவிரி அன்னையை வடிவமைத்து, அதில் இரண்டு செம்பில் அன்னை முகம் அமைத்து எதிரே அகத்தியர் உருவம் அமைக்கப்பட்டுள்ளது.
 
பிராமண கன்னி பெண்ணை காவிரியாக நினைத்து அந்த பெண்ணுக்கு மணப்பெண் கோலம் தரித்து, இந்த வைபவம் நடத்தும் பெண்கள் தாலி கட்டுகிறார்கள். சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். அதன் பின் தாமிரபரணியில் கொண்டு காவிரி தாயை கலந்து விடுகிறார்கள். இப்படி செய்தால் மழை பெய்யும், மற்றும் பெண்களுக்கு தாலி பாக்கியம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
 
நாகர் தகடு மூலம் தோஷம் நீக்கும் அற்புத இடம்
 
பெண்களுக்கு நாகதோஷம், செவ்வாய் தோஷம், சர்ப்பதோஷம், தாலிபாக்கியம், புத்திரபாக்கியம், முன்னோர்கள் செய்த வினை, தான் பிறருக்கு இட்ட சாபத்தால் வந்த வினை, சனி தோஷம், திருமண தடை, கணவன் மனைவி பிரிவு இது போன்ற தோஷங்களை நீக்கும் இடம் பொதிகையடியில் உள்ளது. அந்த இடத்திற்கு சாதாரணமாய் நினைத்தால் எவரும் வந்து பூஜை செய்ய முடியாது.
 
அவர்களுக்கு பாக்கியம் இருந்தால் மட்டுமே வந்து இந்த இடத்தில் பூஜை செய்யமுடியும். அப்படி பூஜை செய்தால் மேற்சொன்ன தடைகள் நீங்கும் என்கிறார் மணக்கரை கிராமத்தில் போஸ்ட்மாஸ்டராக பணியாற்றும் காளிமுத்து என்பவர்.
 
அவர் கூறிய கருத்து: காளிமுத்து ஒரு சிவன் பக்தர். இவர் சிவ பெருமனுக்கு வணக்கம் செலுத்தி வைத்திய தொழிலும் செய்கிறார். அவர் சிலர் தோஷத்தினை நீக்க பொதிகையடி வருவார். பொதிகையடி அருகே திருவள்ளுவர் டெப்போவிற்கு பின்புறம் உள்ள சாஸ்தா கோவில் அருகே தாமிரபரணி நதிக்கரையின் பக்கம் உள்ள நாகபுற்று அருகே தோஷம் நிவர்த்தி செய்யும் இடம் உள்ளதாகவும், அதை நிவர்த்தி செய்வது குறித்தும் நம்மிடம் பேசினார்.
 
அவரின் குருநாதர் ‘கொச்சி மாநகர் வாழும் குருசாமி’ என்ற தக்கலை சுவாமிகள் வாக்குபடி, பெண்களுக்கு ஏற்படும் தோஷம் நீங்க, நல்ல சுத்தமான 5 கிராம் எடையுள்ள வெள்ளி நாகர் தகடை அடித்து 11 நாட்கள் பூஜை மற்றும் அபிஷேகம் செய்து 11வது நாள் அதிகாலையில் 5 மணிக்கு வீட்டில் இருந்து குளிக்காமல் தோஷம் நீக்க வேண்டிய பெண்ணையும், அவருடைய குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு பொதிகையடி வர வேண்டும்.
 
பின்னர் அவர் ஏற்கனவே கூறிய பாம்பு புற்று அருகே நாகர் தகடை வைத்து பாலாபிஷேகம் செய்து, பின்பு கொஞ்சம் பாலூற்றி வைத்து விட்டு ஆற்றில் குளிக்க வேண்டும். பின்பு சிவனை நினைத்து கரையில் படைப்பு போட்டு சிவனை உருகி வணங்கிய பின்பு, மீண்டும் ஆற்றில் நீராடி விட்டு பாபநாசம் சிவன் கோவில் வந்து சிவனை வணங்கி, கோவிலை சுற்றி கும்பிட்டு விட்டு வந்தால் அனைத்து பாவங்களும் நீங்கும். திருமணம் தடை பட்டு போகும் பெண்களுக்கு உடனே திருமணம் நடக்கும்.
 
மற்ற தோஷங்கள் நீங்கும். ஆனால் இந்த பூஜை சாதாரணமாக செய்ய இயலாது. ஏனென்றால் சிவபக்தர் காளிமுத்து 50க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த பூஜை குறித்து கூறினாலும் யாராவது ஒருவர் தான் பாபநாசம் வந்து இந்த பூஜை செய்வார்களாம். ஏனென்றால் அது அவர்களின் கரும விதி பலன் என்கிறார் காளிமுத்து. சில ஆண்களுக்கு 2 தாரம் பீடை இருக்கிறது என்று சொல்வார்கள்.
 
அதே நேரம் பெண்களுக்கு 2 தாரம் பீடை இருக்கிறது என்றும் கூறுவார்கள். அப்படி ஏதாவது குறை இருந்தால் அவரது கணவன் கட்டிய தங்கத் தாலியை தேங்காயில் ஒரு கண்ணை மட்டும் திறந்து அதன் வழியே தாலியை உள்ளே போட்டு ஆற்றில் விட வேண்டும். அப்படி விட்டு விட்டால் பெண்களுக்கு 2 தாரம் தோஷம் இருந்தால் அது உடனே நீங்கும் என்று சொன்ன அவர் தாலியை வைத்து ஒரு பெரிய கதையே கூறினார்.
 
குறிப்பாக தாலி என்றால் அது சாதாரண தங்கத் தாலி என்று நினைப்பது தவறு. ஒரு பெண் கழுத்தில் தாலி கட்டினால் அவளின் கணவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும் என்றால் அவளுக்கு தாலி கட்டியவுடனேயே அந்த பலன் கிடைக்கும். அதே போல் சிலருக்கு தாலி தங்காது என்று கிரகம் இருக்கும் அப்போது பெண் தாலியை கழற்றி சாமி முன் வைத்து சிவனே நீ தான் என்கதி என்று இருந்தால் கூட அவரது கணவர் காப்பாற்றப்படுவார் என்கிறார் அவர். அதே போல் தான் தாமிரபரணியில் தேங்காய்க்குள் தாலியை வைத்து விடுவது மிகப்பெரிய அற்புதமான செயல்.
 
சிவன் காட்சி
 
கடந்த 15 வருடங்களாக பாபநாசத்திற்கு நாகர் தகடு கொண்டு செல்லும் காளிமுத்து இதுவரை 100க்கும் மேற்பட்டவருக்கு இத்தோஷம் நீங்க காரணமாக இருந்துள்ளார். ஒரு நாள் இவர் சிவனை வேண்டி மனமுருகினார். ‘சிவனே நானும் 10 வருடத்திற்கு மேல் உம்மை நாடி வருகிறேன். எனக்கு நீர் எனக்கு ஏன் தரிசனம் தரக் கூடாது’ என்று நினைத்துக் கொண்டு படுத்துத் தூங்கி விட்டார். அன்று கனவில் சிலர் காரில் வந்து, நாளை பாபநாசம் வா... உனக்கு பொன் உருவில் காட்சி தருகிறேன் என்று கூறி மறைந்தனர்.
 
மறுநாள் காளிமுத்து பாபநாசம் சென்ற போது நாகப்புற்று அருகே ஒரு இடத்தில் ஒரு பவுன் மதிக்கத்தக்க மோதிரம் ஒன்று அவர் கண்ணில் பட்டது. சிவனே என்று அதை அவர் கையில் எடுத்துக் கொண்டார். சிவனே பொன் உருவில் கனவில் கூறியது போல் காட்சி அளித்ததாக கருதி அந்த மோதிரத்தை பத்திரமாக போற்றிப் பாதுகாத்து வருகிறார்.
 
சாது தரிசனம்
 
மேலும் அவர் கூறும் போது சாது தரிசனம் கிடைப்பது அரிது. அதிலும் தாமிரபரணி நதிக்கரையில் சாது தரிசனம் கிடைப்பது மிக மிக சிறப்பு. ஏனென்றால் ஒருவர் மிக பக்திமானாக இருப்பார். ஆனால் அவர் பக்கத்து தெருவில் இருக்கும் சாதுக்களை கூட பார்த்திருக்க மாட்டார். ஏனென்றால் சாது தரிசனம் யாருக்கு எப்போது கிடைக்க வேண்டுமோ அப்போது தான் கிடைக்கும். அது மட்டுமல்லாமல் பெண் சாது தரிசனம் கிடைப்பது அவர்கள் வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியம்.
 
ராஜா- ராணி மலை
 
பொதிகை மலையிலிருந்து அகத்தியர் அருவிக்கு திரும்பும் பாதையை விட்டு மேலே சென்று மின்சாரம் தயாரிக்கும் லோயர் கேம் பகுதி வழியாக சென்று பின் மின்சக்தி தயாரிக்கும் இயந்திரக் குழாய் ரோட்டை கடக்கும் இடத்திலிருந்து எதிர்புறம் பார்த்தால் சாலை வளைவின் மேற்பகுதியில் 3 பாறைகள் வித்தியாசமாக இருக்கும்.
 
அதில் 1 பாறை கிரிடம் வைத்த ராணி போன்றும் எதிரே இருக்கும் பாறை ராஜா போன்றும் அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பாறை மந்திரி போலவும் தெரிகிறது. இவர்கள் 3 பேரும் ஆலோசனை செய்வது போல் இருக்கும் இந்த பாறையை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்கின்றனர். இதை தான் அவர்கள் ராஜா- ராணி மலை என்கிறார்கள்.


Favorite tagsTirunelveli Business Directory