திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (40 of 53)

சொரிமுத்து அய்யனார் கோவில்

 
அடுத்து அணைக்கட்டை விட்டு கீழே உள்ள மிக விசேசமான கோயிலை பற்றி பார்க்க போகிறோம். பொருநை நதிக்கரையில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டடத்தில் தெரியாத நபரே இருக்க முடியாது. இந்த கோயிலில் குறிப்பாக மழை இல்லாமல் போய் விட்டால் அரசு அதிகாரிகளே வந்து வேள்வியை நடத்துவார்கள்.
 
 
சொரிமுத்து
 
அய்யன் - அய்யனார் என்பது பண்டைய நாட்களில் அய்யன்பொழி என பெயர் பெற்றது. இந்த திருக்கோவிலும் அய்யன் கோவில் தான். இந்த அய்யன் கோவிலை சாஸ்தா கோவில் என்றும் வழங்கி வருகிறோம். இங்கு அய்யன் சிவலிங்க வடிவமாக இருப்பார். இதே போல் சாஸ்தா கோவில் சிறுபான்மை ஆற்றங்கரையிலும் பெரும்பான்மை குளத்துக் கரையிலும் வைத்து வணங்கி வருகின்றனர். பெரும்பாலுமே இத்தெய்வங்கள் காவல் தெய்வங்களாகவே இருக்கும்.
 
சொரிமுத்து அய்யனார் கோவிலைப் பொறுத்த வரை காலத்திலே மழை பெய்ய தாமதிக்குமானால் உடனே ஊரார்கள் ஒன்று கூடிகிறார்கள். அய்யனுக்கு பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். உடனே மழை பெய்வதை பார்த்து மகிழ்கின்றனர். நாம் ஏற்கனவே கூறியது போல அதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இது போல் அருள் பொழிந்து மழை சொரிவதனால் சொரி முத்து அய்யன் என்று இவர் பெயர் பெற்றார்.
 
சொரிதல், பொழிதல் என்பது குறித்து கூறும் போது முத்து என்பது விலை மதிக்க முடியாத பெரும் பொருள்.(மழையை முத்து மழை என்றும் கூறுவர்) அது போல் சொரிமுத்து அய்யனாரின் திருவருளும் விலை மதிக்க முடியாது. ஆகவே இந்த கோயிலுக்கு வந்து சொரி முத்து அய்யனை வேண்டி விலை மதிக்க முடியாத திருவருளை பெற்று செல்கிறார்கள் பக்தர்கள்.
 
மணிமுத்தாறு
 
இந்த சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல லோயர் கேம்பில் இருந்து அப்பர் கேம்ப் செல்லும் வழியில் இடது புறம் செல்லும் ரோட்டில் திரும்ப வேண்டும். பின் அந்த வழியாக சென்று ஆற்றை கடந்து அந்தப்புறம் சென்றால் அங்கு அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோவில் சிங்கம்பட்டி ஜமீன் என்ற குறுநில மன்னரின் வழித்தோன்றலை சேர்ந்தது.
 
ஆக, அமாவாசை அன்று இக்கோவிலில் விழா மிகச்சிறப்பாக நடக்கும். இந்த கோயிலில் கொட்டும் மழையில் ஆண்களும் பெண்களும் பாணதீர்த்தம் சென்று அங்கு நீராடுவார்கள். பாணதீர்த்தம் செல்ல முன்பு இந்த கோயிலில் இருந்து பாதை இருந்தது. அந்த வழியாக பாணதீர்த்தத்தில் குளித்து விட்டு பின் சொரிமுத்து அய்யனாரை வணங்கி வந்தனர். அவர்கள் தோளிலும், இடுப்பிலும் சிறு குழந்தைகளை தூக்கிக்கொண்டு வருவார்கள். குடு குடு என குளிரில் ஆடி வரும் முதியவர்களும் வாணதீர்த்தம் சென்று நீராடியே வருவார்கள்.
 
பல பிரச்சனைகளை மனதில் சுமந்து கொண்டு அதில் இருந்து தீர்வு வேண்டும் என்று ஆடி அமாவாசையில் பொழியும் மழையில் நனைந்து கொண்டு அய்யனை வணங்கி அருள் பெறும் பக்தர்கள் மிக ஏராளம். இந்த கோயிலை பற்றி பல சுவையான கதைகள் உள்ளது. அதை தொடர்ந்து தருகிறேன். அதற்கு முன் இந்த இடத்தில் தாமிரபரணியின் துணை நதியான மணிமுத்தாறு நதியை பற்றி கூற வேண்டும்.
 
தாமிரபரணியில் வந்து முதன் முதலில் சமவெளியில் கலக்கும் ஆறு மணிமுத்தாறு தான். இந்த மணிமுத்தாற்றைப் பொறுத்தவரை தான் செல்லும் வழியை தானாகவே ஏற்படுத்தகிக்கொண்டு வந்தது ஆகும். இந்த ஆறு மணி ஆகவும் முத்தாகவும் ஓடி வருவதால் மணிமுத்தாறு என்று அழைக்கப்படுகிறது. எனவே மணியைப் போலவும், முத்தைப் போலவும் மிகத் தெளிந்த நீரை சுமந்து வருவதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என திருநெல்வேலி ஜில்லா கோவில் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். மணிமுத்தாறு தண்ணீரைப் போன்று உலகில் தண்ணீர் கிடையாது என புலவர்களால் போற்றப்படுகிறது.
 
சிங்கம்பட்டி
 
மணிமுத்தாறு ஓடி வரும் பகுதியில் இரு கரையிலுமே நெல்லி மரங்கள் மிக அதிகமாக இருப்பதாலும் இதன் தண்ணீர் சுவையாக இருக்கிறது என்ற கருத்தும் நிலவி வருகிறது. மணிமுத்தாறு தாமிரபரணி ஆற்றில் கலப்பதற்கு இரண்டு மைலுக்கு மேலே இருக்கும் ஊர் சிங்கம்பட்டி. பட்டி என்றால் சிற்றூர். பட்டணம் என்பது பேரூர். அதாவது ஊர், நகர் என்பதை ஊர்தல், நகர்தல் எனக் கொண்டாலும் கூட இரண்டுமே ஒரே பொருளுடைய சொற்களாக இருக்கிறது. ஆகவே சிறிய ஊரை ஊர் என்று அழைக்கிறார்கள். பெரிய அளவில் உள்ள ஊரானது நகர் என்று பெயர் பெற்று விட்டது. அதன்படி சிங்கம்பட்டி சிறிய ஊராக உள்ளது. ஆகவே இதை ஊர் என்று கூறுகிறோம். ஆனாலும் இந்த ஊர் மிகவும் விசேஷமானது.
 
விக்கிரமசிங்கன்
 
இப்பகுதியில் ஆண்டு வந்த விக்கிரமசிங்கன் என்ற குறுநிலை மன்னருடைய பெயரால் உருவாக்கப்பட்ட ஊர் சிங்கம்பட்டி. இந்த பரம்பரையில் வாழ்ந்த மன்னர்கள் மிகவும் பக்தி வாய்ந்தவர்கள். இவ்வூரை தலைமை ஊராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்களால் அமைக்கப்பட்டது மாகதேவர்-அகஸ்தீசுவரர் ஆலயம். இந்த பகதியில் ஆண்ட மன்னர்கள் இந்த ஆலயத்தில் சிவபெருமானையும், அம்மையையும் பொன்னாலும், பூவாலும் அலங்கரிப்பார்கள். பின் தம் தோளில் சுமந்து செல்வர். இன்ப கண்ணீரு வடித்தும் இன்னிசை பாடி வாழ்த்தியும் சிவனை வாழ்த்துபாடி நல்ல வாழ்க்கை வாழ்ந்து உள்ளனர்.
 
தீர்த்தபதி
 
தற்சமயம் பாணதீர்த்தம் மற்றும் கல்யாண தீர்த்தம் போன்ற தீர்த்தம் உள்ள இடங்கள் இந்த குறுநிலை மன்னர்களுக்கு சொந்தமானது. தீர்த்ததிற்கு அதிபதியானதால் தான் சிங்கம்பட்டி ஜமீன்களுக்கு தீர்த்தபதி என்ற பெயர் வந்துள்ளது. இவர்கள் இடத்திற்க்குள் தான் சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளது.
 
சொரிமுத்து அய்யனார்
 
தாமிரபரணி ஆற்றின் கீழக்கரையிலே சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ளது. இவர் தாமிரபரணி ஓடி வரும் பள்ளத்தாக்கிற்கு பாதுகாவலாய் உள்ளார். இதே போல் செங்கோட்டைக்கு மேல்புறம் இருக்கும் பள்ளத்தாக்கில் ஆரியங்காவுக்கு பாதுகாவலாக ஆரியகாவு சாஸ்தா அமர்ந்து அருள் புரிகிறார்.சொரிமுத்து அய்யனார் கோயில் காசிக்கு நிகரான தலம்.
 
இங்கு மகாலிங்கத்திற்கு ஜோதி வழிபாடு நடக்கிறது. சொரிமுத்து அய்யனார் சிறந்த பாதுகாவலர் என்பதை விளக்க திருச்செந்தூர் கொடிமரம் பொதிகை மலையில் இருந்து கொண்டு சென்ற போது நடந்த திடுக்கிடும் சம்பவம் உதாரணமாகும். அது குறித்த ஒரு சம்பவம் தான் இது.


Favorite tags



Tirunelveli Business Directory