திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (5 of 53)



துணை நதிகள்
 
தாமிரபரணியில் மலையில் கலக்கும் நதிகள் பற்றி ஏற்கனவே பேசினோம். தற்போது சமவெளி பகுதியில் கலக்கும் நதிகள் குறித்து பார்க்கலாம்.
 
கல்லிடைகுறிச்சிக்கு 2 மைல் மேற்கே கன்னடியன் அணைக்கு உள்ளே மணிமுத்தாறு நதி வந்து கலக்கிறது. ராம நதியும், கடனா நதியுடன் சேர்ந்து அது கடனா நதியாக திருப்புடைமருதுhரில் இடப்பக்கம் கலக்கிறது. எதிரே ஒரு காலத்தில் வராக நதி வந்து சேர்ந்தது. தற்போது அந்த நதி கன்னடியன் கால்வாயில் கலக்கிறது. முற்காலத்தில் இந்த இரு நதிகளும் தாமிரபரணியில் சேர்ந்த காரணத்தால் இவ்விடம் முக்கூடல் எனப்படுகிறது.
 
3 ஆறுகள் கலக்கும் மற்றொரு முக்கூடல் சீவலப்பேரியாகும். குற்றால மலையில் தோன்றி வருவது சித்ரா நதி என்னும் சிற்றாறும், கயத்தாறு என்னும் உப்போலோடை என்று அழைக்கப்படும் ஆறும் சேரும் இடமே சீவலப்பேரியாகும். கழுகுமலையில் உற்பத்தியாகும் கயத்தாறு நதி பராக்கிரம பாண்டி என்னும் குளத்தில் சேருகிறது. அந்த குளம் நிரம்பியவுடன் அது நேராக சீவலப்பேரியில் 3 நதிகளுல் ஒன்றாக வந்து சேருகிறது. திருவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து இரண்டரை மைல் அடுத்து ஆத்துhரில் தாமிரபரணி வந்து சேரும் போது, ஆத்தூரில் இருந்து கரை நீண்ட தொலையில் தொடர்ந்துள்ளது. இந்த நதி கடலோடு கலக்கும் இடம் தான் சங்கு முகம் என்னும் வடிநில பகுதி.
 
தாமிரபரணி நதியில் மழைக்காலங்களில் தோன்றும் வெள்ளப்பெருக்கில் கலங்கலாக வரும் தண்ணீர் கடலோடு சேரும் போது சீக்கிரமாக சேர்ந்து விடாது. குறிப்பாக மணம் முடிந்து போகும் பெண் தன் புகுந்த வீட்டையும், பிறந்த வீட்டையும் மறக்க முடியாமல் தவிப்பது போல நதி நீர் கடலில் கலக்கும் போது சேரவா.. வேண்டாமா? என யோசிப்பது போல் இந்த தேக்க நிலை இருக்கும். கலங்கல் தண்ணீர் கடலில் சேர்ந்து விடாமல் இருப்பதை திருச்செந்தூர் கடற்கரையில் சுமார் 3 மாதங்கள் கடலோடு சேராமல் கலங்கிய நிலையில் இந்த தண்ணீர் அப்படியே இருப்பதை கார்த்திகை மார்கழியில் பார்க்கலாம்.
 
முற்காலத்தில் ஆறு கடலோடு கலக்குமிடத்தில் உள்ள முகட்டுகளிடையே இப்போது மணல் மேடிட்டு உள்ளது. ஆகவே உப்பங்கழிகளின் வழியாக வளைந்து வளைந்து சென்று புன்னக்காயல் என்னும் இடத்தில் பரணி நதி கடலோடு கலக்கிறது. இங்குள்ள 2 பிரதான முகத்துவாரங்களில் ஒன்றில் எப்போதும் நீர் சென்று கொண்டே இருக்கும். மற்றொன்று கோடை மாதங்களில் அடைபட்டு கிடக்கும். இந்த இடத்தினை சங்குமுகம் என்றும் சொல்வார்கள். முனிவர்கள் இந்த இடத்தில் தீர்த்தமாடி உள்ளனர். இந்த இடம் மிக சிறப்பானது ஆகவே இந்த இடத்தில் தீர்த்தம் எடுத்து கோயில்களுக்கு கும்பாபிசேகம் நடத்துகிறார்கள்.


Favorite tags



Tirunelveli Business Directory