திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (6 of 53)

 
தாமிரபரணி நதியில் அதிசயம் பல உள்ளது. முதலில் தாமிரபரணி நதி தோன்றும் இடமான பொதிகை மலை சிறப்பை பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
 
தாமிரபரணி தோன்றும் ஐந்து தலைப்பொதிகை:
 
"திங்கள் முடிசூடும் மலை
தென்றல் விளையாடும் மலை
தங்கும் முகில் சூழும் மலை
தமிழ் முனிவர் வாழும் மலை
அங்கையற்கண் அம்மைதிரு
அருள் சுரந்து பொழிதெனப்
பொங்கருவி தூங்குமலை
பொதிய மலையென்மலையே”
 
            என குற்றால குறவஞ்சியில் குற்றால குறத்தியிடம் பொதிகை மலை குறத்தி பொதிகை மலை பெருமையை கூறுவதாக உள்ள பாடல் இது. குற்றால மலையை திரிகூட மலை என்று கூறுவார்கள். தாமிரபரணி தோன்றும் இடத்தை ஐந்து தலை பொதிகை என்பர்.
 
இந்த ஐந்து தலை பொதிகையை அழகான கருமேகங்கள் செல்லமாக தொட்டு, தொட்டு முத்தம் இட்டு செல்வது போல் நமக்கு காட்சியளிக்கிறது. இந்த ஐந்து தலை பொதிகை பகுதியின் குகை போன்று தோற்றமுள்ள இடத்தில் இருந்து தான் தாமிரபரணி தோன்றுகிறது. நெல்லை - தூத்துக்குடி மாவட்டத்தை செழுமையாக்கும் இந்த இளவல் நதி தோன்றுமிடம் இதுதான் என்று சரியாக யாரும் இதுவரை தீர்மானிக்க முடியவில்லை.
 
ஆனால் தாமிரபரணி தோன்றுவதாக கருதப்படும் இடம் பாணதீர்த்தம் அருவியில் இருந்து 15 கி.மீ தொலைவில் பொதிகை மலையின் மேல்பகுதியில் உள்ளது. இங்கு செல்ல சரியான பாதை கிடையாது. மலை முகட்டுகளில் வாழ்ந்து வரும் காணிகள் என அழைக்கப்படும் பழங்குடியினர் மட்டும் இந்த பகுதிக்கு சென்று வருகிறார்கள். ஆனால் அவர்கள் கூட தாமிரபரணி தோன்றும் இடத்தை பார்த்திருப்பார்களா? என்பது அரிதானதுதான். 
 
குட ரத்தம் மக்கா
 
இந்த இடம் குறித்து நல்லாசிரியர் அகஸ்தீஸ்வரன் கூறும் போது: ஆம்பூர் அருகில் உள்ள மயிலப்ப புரத்தை சேர்ந்த பக்தர்கள் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு காவல் தெய்வத்திற்கு பூஜை செய்ய கல்யாண தீர்த்தம் அருகில் தீர்த்தம் எடுக்க சென்றார்கள். இவர்களுடன் தாரைத் தப்பட்டைகளும் சென்று இருந்தது. கல்யாணதீர்த்தம் தாண்டி 5 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு காவல் தெய்வத்தை தரிசிக்க வேண்டி இவர்கள் தாரை தப்பட்டங்கள் முழங்க கிளம்பினார்கள். அப்போது இவர்களின் தலைமை ஏற்று வந்த அய்யா வழி சாமியார் சிவப்பு குடையை தலை மேல் பிடித்தப்படி சென்றார்.
 
இந்த தப்பட்டைகள் சத்தம் விண்ணை பிளப்பதாக இருந்தது. இதன் சத்தம் கேட்டு பொதிகை மலை வண்டுகள் விழித்துக் கொண்டது. வண்டுகள் பற்றி அறியாத பக்தர்கள் கோசம் போட்டு முன்னேறி சென்று கொண்டிருந்தனர். அப்போது இறைச்சலுடன் இவர்களை நோக்கி வண்டுகள் படையெடுத்து வந்தது . படை எடுத்து வரும் வண்டுகளை பற்றித் தெரியாமல் இவர்கள் மேலும் வேகமாக தப்பட்டை அடித்தார்கள். வந்த வண்டுகள் இவர்களை தாக்கியது. அடிபட்ட பக்தர்கள் விழுந்தடித்து மலையில் இருந்து கீழே இறங்கி ஓடினார்கள்.
 
ஆனால் தலைமை சாமியார் மட்டும் தலைக்கு மேல் இருந்த குடையுடன் வண்டுகளிடம் மாட்டிக் கொண்டு கதறினார். இதற்கிடையில் அருகில் தீர்த்தம் கொண்டு போன பக்தர்கள் தண்ணீரை எரிந்து விட்டு ஓடினர். தண்ணீர் சாமியாரின் குடைமேல் பட்டு அதன் சாயம் முகத்தில் வடிந்தது. அப்போது ஒருவர் "ஐயோ சாமி முகத்தில் வண்டு கடிச்சு ரத்தம் வருது” என்று கத்தினார். சாமியார் கீழே சாய்ந்தார். பக்தர்கள் திரும்பி பார்த்தனர். ஆனால் அதற்குள் சுதாகரித்து எழுந்த சாமியார் "மக்கா குட ரத்தம் மக்கா...மக்கா குட ரத்தம் மக்கா” என கத்தினார்.
 
என்ன குடையில் ரத்தம் வருதா? என அதிர்ந்தவர்கள் மேலும் திகைக்க .. அவர்கள் அருகே ஒடி வந்து விபரம் சொன்னார் சாமியார். "வண்டு நம்மள விரட்டின உடனே அவசரத்தில் தீர்த்த தண்ணீர் குடை மேலே விழ, குடையின் சிவப்பு சாயம் தான் என் முகத்தில் இருக்குது எனக் கூறினார். அதை தான் அவர் அவசரத்தில் குடை ரத்தம் மக்கா என சொன்னார் என்று நினைத்து மக்கள் நிம்மதி அடைந்தனர்.
 
இதற்கிடையில் தாரை தப்பட்டைகளை கீழே போட்டு விட்டு ஓடி வந்த காரணத்தால் தப்பட்டைகள் சத்தம் இல்லாமல் போய் விட, ராட்சத வண்டுகள் திரும்பி போய் விட்டது. பிறகு நிம்மதி பெருமூச்சு விட்டவர்கள் மீண்டும் கீழே வந்து கல்யாணதீர்த்தம் அருகில் தீர்த்தம் எடுத்து ஊர் வந்து காவல் தெய்வத்தை நீராட்டி பூஜை செய்தார்கள் என்றார்.


Favorite tags



Tirunelveli Business Directory