திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (8 of 53)

 
பாணதீர்த்தம் செல்வதற்கு மற்றுமொரு ரோட்டு வழி பாதை உள்ளது. அந்த பாதை சொரிமுத்து அய்யனார் கோயில் அருகே இருந்து செல்கிறது. அந்த பாதை தற்போது இல்லை.1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இந்த பாதை முற்றிலும் காணாமல் போனது. பாணதீர்த்தின் கீழே தான் பாபநாசம் அணை உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணைக்கான இடத்தை தேர்ந்தெடுத்து சர்வே செய்தவர் வெள்ளைக்கார மாவட்ட ஆட்சித் தலைவர் பக்கிள்துரை.
 
இவர் ஆர்தர் கோப் லேப் ஏரியை 1937-ல் சர்வே செய்த போது இங்கு சில வெள்ளைக்காரத்துரைகள் பழத்தோட்டம் போட்டு இருந்தனர்.  சுமார் 20 சதுர மைல் தூரம் கொண்ட பழத்தோட்டம் சொந்தக் காரர்களுக்கு மலை முகட்டுகளில் வேறு இடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பின் அணைக்கு கர்னல் பிராட்,பொறியாளர் கார்டுவர்டு ஆகியோர் வடிவமைத்து கட்டிட பணியை துவக்கினார்கள். 1938-ம் வருடம் இந்த பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகளுக்கு ஆர்தர் கேர்ப் என்னும் ஆங்கிலேயர் துணையாக இருந்தார். ஆகவே தான் இந்த அணைப்பகுதியை ஆர்தர்கோப்லேப் என அழைத்தார்கள்.
 
ஆனால் நாளடைவில் இந்த பெயர் பாபநாசம் மேலணை என்று அழைக்கப்பட்டு வருகிறது. 1938-ல் ஆரம்பித்த வேலை 1943-ம் வருடம் முடிவடைந்தது.  இந்த அணையை கட்ட தளவாட பொருட்கள் கொண்டு போக போடப்பட்ட தற்காலிக பாலம் ஒன்று அணையின் அருகில் உள்ளது. இந்த பாலம் வழியாகத்தான் வேலைக்கு தேவையான பொருட்களை கொண்டு சென்றனர். ஆனால் தற்சமயம் அந்த பாலம் மேற்பகுதி தளத்தை எடுத்து விட்டனர்.
 
பாபநாசம் அணையின் உள்பகுதியில் சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த பாதையில் சென்றுதான் அணையில் தண்ணீர் கசிகிறதா? என்று பார்க்கிறார்கள். அணையில் நுணுக்கமான கட்டிடத்தை ஆராய்ச்சி செய்தவர்கள் இன்னும் பல வருடங்களுக்கு எந்தவொரு மராமத்து பணியும் தேவையில்லை என எழுதி வைத்து விட்டனர். அந்த குகைக்குள் நாம் சென்று பார்த்தபோது எந்தவொரு நீர்கசிவை பார்க்கவில்லை.


Favorite tagsTirunelveli Business Directory