திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு (9 of 53)

 
பாபநாசம் மேலணையில் காரையாறு மற்றும் மயிலாறு சேரும் இடம் கேச்மென்ட் ஏரியா என்று அழைக்கப்படுகிறது. இதில் நீர்பிடிப்பு பகுதிகள் 57.4 சதுர மைல்கள். அணையின் உயரம் 143 அடி.அணையின் நீர்பரப்பு 2.24 சதுர மைல். இது 5 ஆயிரத்து 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. இங்கு நிறைய முதலைகள் வாழ்கின்றன. இந்த முதலைகள் மாலை நேரங்களில் கரையில் வந்து பாறை மீது படுத்து கிடக்கும்.
 
மான்கள் நீர் குடிக்க கரையில் வந்து நின்று கொண்டிருக்கும். இது எல்லாம் கண்கொள்ளா காட்சியாகும். காட்டாறுகள் வந்து சேரும் பகுதியில் மலை முகடுகளில், சரிவுகளில் வாழும் காணி இனத்தவர்கள் மலை வாழை, வெள்ள தொழுவன், பூலான் செண்டு, ஆயிரங்காச்சி போன்ற வாழை பயிர்களையும்பயிரிடுகிறார்கள். இவ்விடத்தில் கப்பங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளையும் பயிரிடப்படுகிறது.
 
இந்த காணிகள் மலை அடிவாரத்தில் வாழும் பகுதி மக்களிடம் பண்ட மாற்று முறையில் கப்பங்கிழங்கு வகைகளை கொடுத்து மற்ற பயிர்களான பருப்பு, பூண்டு, அரிசி போன்ற பொருட்களை வாங்கி கொள்வார்கள். ஆனால் தற்சமயம் இதெல்லாம் மாறிவிட்டது. இந்த காணிகள் அரசு திட்டத்தினால் நிறைய பயன்கள் பெற்று முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் வேட்டையாடுதல், தேன் எடுத்தல் போன்ற வேலைகளை அன்றாட வேலைகளாக வைத்துள்ளனர்.
 
இவர்கள் தோட்ட வேலைகளை விடவில்லை. அவர்களின் பழைய பழக்க வழங்கங்கள் இன்றும் அப்படியே உள்ளது. காணிகள் தங்களின் பெண்கள் வயதுக்கு வந்தவுடன் வீட்டு முற்றத்தில் ஒரு குடிசை கட்டி அதில் ஓலையை வேய்ந்து அந்த பெண்ணை அதில் குடியேற்றிவிடுவார்கள். சடங்கு விசேஷங்கள் எல்லாம் முடித்த பிறகுதான் குடிசையை எரித்து விட்டுத்தான் அந்த பெண்ணை வீட்டுக்கு கூட்டி வருவார்கள்.


Favorite tags



Tirunelveli Business Directory