» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை: சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 14, பிப்ரவரி 2017 10:55:19 AM (IST)

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 பேரும் 4 வாரத்துக்குள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது பெங்களூரு தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்து தனிக் கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கினார். 

இதைத்தொடர்ந்து நால்வரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த நான்கு பேரும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ஐகோர்ட், கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்ததோடு, நால்வரையும் விடுதலை செய்தது.ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பிலும், தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 7-ந் தேதி இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர். தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.

பரபரப்பு தீர்ப்பு 

அதன்பின்னர் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.விலும், ஆட்சியிலும் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள், தமிழக அரசியலில் கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கியது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பினாகி சந்திரகோஷ் தலைமையிலான அமர்வு கடந்த 6-ம் தேதி அறிவித்தது. அதன்படி, நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கியது. 

காலை 10.35 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர். அப்போது, சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன், தனிக்கோர்ட்டு வழங்கிய 4 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தனர். முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட மூவரும் உடனடியாக சரணடையுமாறும், இறந்துவிட்டதால் ஜெயலலிதா தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் தெரிவித்திருந்தனர். இந்த தண்டனையை எதிர்த்து சசிகலா தரப்பினர் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கனவு தகர்ந்தது

அவர்கள் கூறியபடி, சசிகலா சம்பந்தப்பட்டுள்ள சொத்து குவிப்பு வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு கூறப்பட்டது. தமிழகமே ஏன், இந்தியாவே எதிர்பார்த்திருந்த சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். நீதிபதிகள் கூறிய தீர்ப்பு, "சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட மூன்று பேருமே குற்றவாளிகள் என்றும், பெங்களூர் தனி நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு சரியானது. அதன்படி சசிகலா உள்ளிட்ட மூன்று பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் உறுதி” என்று உச்சநீதிமன்றம் அளித்தது. இந்த அறிவிப்பின் மூலம், "சசிகலா தமிழக முதல்வர் பதவியேற்க இருந்த கனவு அனைத்தும் சுக்கு நூறாக உடைந்து, தகர்ந்துள்ளது”. 

தீர்ப்பின் எதிரொலியாக சசிகலா, தானே பெங்களூர் நீதிமன்றம் சென்று சரணடைய வேண்டும். இல்லையென்றால் சசிகலா தங்கியுள்ள ஓட்டலுக்கோ அல்லது போயஸ் கார்டன் வீட்டுக்கே போலீஸ் சென்று அவரை கைது செய்வார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் சசிகலாவின் உறவினர்களால் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களின் நிலை என்ன என்று தெரியாத நிலை உள்ளது. அவர்கள் அனைவரும் அங்கிருந்த தப்பி வரலாம். அல்லது அவர்களில் யாராவது ஒருவரது தலைமையை ஏற்றுக்கொண்டு சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து சசிகலா 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory