» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாணவியை மாணவர் கழிப்பறையில் நிற்க வைத்து தண்டனை: ஆசிரியர்கள் 2 பேர் மீது வழக்கு

செவ்வாய் 12, செப்டம்பர் 2017 3:55:59 PM (IST)

சீருடை அணிந்து வராத மாணவியை, மாணவர் கழிப்பறையில் நிற்க வைத்து தண்டனை அளித்த உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவியின் தந்தையும், சமூக ஆர்வலரும் அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்சி புரம் காவல்துறையினர், இரண்டு பேர் மீதும் அரசியலமைப்புச் சட்டம் 323, 339, 503 ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள தனியார் பள்ளியொன்றில் சீருடை அணிந்து வராததற்கு தண்டனையாக, 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், மாணவர்களின் கழிப்பறைக்குள் நிற்க வைப்பட்டார். இதையடுத்து அந்த தண்டனையை விதித்த உடற்கல்வி ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டார்.

ஹைதராபாதின் ராமச்சந்திராபுரத்தில் உ ள்ள தனியார் பள்ளியில் பயிலும் அந்த மாணவி, கடந்த சனிக்கிழமை சீருடை அணியாமல் சாதாரண உடையில் பள்ளிக்கு வந்திருக்கிறார். அதற்காக, அந்த மாணவியை தண்டிப்பதற்காக, அவரை உடற்கல்வி ஆசிரியை, மாணவர்களின் கழிப்பறைக்குள் 5 நிமிடங்கள் நிற்க வைத்தார். 

இதுதொடர்பாக, அந்த மாணவியின் தந்தை கூறியதாவது: சீருடை அணிந்து வர முடியாததற்கான காரணத்தை எனது மகளின் குறிப்பேட்டில் விளக்கமாக குறிப்பிட்டிருந்தேன். இருப்பினும், அதை பொருள்படுத்தாமல், எனது மகளை, மாணவர்கள் கழிப்பறைக்குள் நிற்கவைத்து, உடற்கல்வி ஆசிரியர் தண்டனை கொடுத்திருக்கிறார். இந்த தண்டனை, எனது மகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இதனால், சக மாணவ, மாணவிகளை நேரில் காண முடியாமல், அவமானம் அடைந்த உணர்வுடன் இருக்கிறார் என்றார் அவர்.

ஆனால், மாணவியின் தந்தை கூறும் குற்றச்சாட்டை உடற்கல்வி ஆசிரியை மறுத்திருக்கிறார். மாணவியை வகுப்பறைக்கு வெளியேதான் நிற்கவைத்தேன். அந்த இடம் மாணவர்கள் கழிப்பறைக்கு அருகே இருந்ததை ஊடகங்கள் பெரிதுபடுத்திவிட்டன என்று விளக்கம் கொடுத்துள்ளார். இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை துணை முதல்வரும், மாநில கல்வி அமைச்சருமான கடியம் ஸ்ரீஹரியின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்கு தெலுங்கானா அரசு உத்தரவிட்டது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தப் பள்ளிக்குச் சென்ற 2 அதிகாரிகள் பள்ளியில் விசாரித்தபோது, மேற்கண்ட தகவல் உண்மை என்பது உறுதியானது.

மாணவர் கழிப்பறை அருகே மாணவி நிற்க வைக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பெற்றோரும், உள்ளூர் பொதுமக்களும், பள்ளி முன் திங்கள்கிழமை திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியை மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


மக்கள் கருத்து

உண்மைSep 12, 2017 - 04:42:48 PM | Posted IP 122.1*****

இதுவே பிஜேபி ஆளுகின்ற மாநிலத்தில் நடந்து இருந்தால் இந்தியா முழுமைக்கும் தலைப்பு செய்தி விவாதம் நேர்காணல் என்று ஊடகங்கள் பரபரப்பாக இருந்து இருக்கும் ஒரு வாரத்திற்கு!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory