» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இலங்கையில் இருந்து தீவிரவாதத்தை அழித்து, நாட்டை சுத்தப்படுத்தினார்: ராஜபட்சவுக்கு சு.சுவாமி பாராட்டு!!

வியாழன் 13, செப்டம்பர் 2018 12:22:24 PM (IST)இலங்கையில் இருந்து தீவிரவாதத்தை அழித்து, நாட்டை சுத்தப்படுத்தியதாக முன்னாள் அதிபர் ராஜபட்சவுக்கு சு.சுவாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் விராட் ஹிந்துஸ்தான் சங்கம் சார்பில், டெல்லியில் இந்தியா-இலங்கை உறவுகள்; அதை முன்னோக்கி எடுத்து செல்வதற்கான பாதை என்ற தலைப்பில் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் ராஜபட்ச கலந்து கொண்டு பேசியதாவது: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது, இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளுடன் கலந்தாலோசனை நடத்துவது தொடர்பான கொள்கையை இலங்கை கடைப்பிடித்தது. 

இந்த நோக்கத்துக்காக, இருதரப்பிலும் மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுவில் இருக்கும் அதிகாரிகள், பரஸ்பரம் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருந்தனர். பொருளாதாரம், சமூகம் தொடர்பான விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கும் இதேபோன்ற நடைமுறையை இந்தியாவும், இலங்கையும் கொண்டு வர வேண்டும். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை ஒருபோதும் நாங்கள் இனரீதியிலான போராக கருதக் கூடாது. 

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த தீவிரவாத அமைப்பின் (விடுதலைப்புலிகள் அமைப்பு) செயல்பாடானது, இலங்கை எல்லையுடன் மட்டும் நிற்கவில்லை. இந்தியா வரை நீண்டது. இந்திய மண்ணில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் பலரை அவர்கள் படுகொலை செய்தனர். இதை எப்போதும் மறக்கக் கூடாது. தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது என்பது ஒரு இனத்தினருக்கு பயன் தரும் நடவடிக்கையாக பார்க்கக் கூடாது. 

அதனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் நன்மையாகும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தீவிரமாக நடைபெற்ற வேளையில், பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளரும், பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சரும் என்னைத் தொடர்பு கொண்டு, உடனடியாக போரை நிறுத்தும்படி வலியுறுத்தினர். ஆனால் அதை நான் நிராகரித்து விட்டேன். அப்படி செய்தால், எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் என நான் பதிலளித்தேன். இந்தியாவுடன் இணக்கமான நட்புறவு வைத்து கொள்வது மற்றும் இரு நாடுகளும் பரஸ்பரம் முழுவதும் புரிந்து கொள்வது ஆகியவையே எனது எதிர்கால வெளியுறவு கொள்கையின் ஒரு பகுதியாகும் என்றார். 

சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில், இலங்கையில் தேர்தலுக்கு பிறகு அடுத்து ராஜபட்சதான் அரசு அமைப்பார் என்று பரவலாக நம்பப்படுகிறது. இலங்கையில் இருந்து தீவிரவாதத்தை அவர் அழித்து, நாட்டை சுத்தப்படுத்தினார். இதனால் சர்வதேச நாடுகள் முதலீடுக்கான உகந்த மையமாக இலங்கையை தற்போது கருதுகின்றன என்றார். நிகழ்ச்சியில் ராஜபட்சவுடன் இலங்கை முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ், மகன் நாமல் ராஜபட்ச ஆகியோரும் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory