» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ. நுழைய தடை : அருண் ஜேட்லி கண்டனம்

ஞாயிறு 18, நவம்பர் 2018 5:21:09 PM (IST)

ஆந்திர மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் சி.பி.ஐ. நுழைவதற்கு மாநில அரசுகள்  தடை விதித்துள்ளதற்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்து உள்ளார். 

மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., டெல்லி சிறப்பு போலீஸ் நிறுவன சட்டத்தின் கீழ் இயங்கி வருகிறது. நாட்டின் மிக உயர்ந்த விசாரணை அமைப்பான சி.பி.ஐ.க்கு, பல்வேறு குற்றங்கள், குற்ற சதிகளை விசாரிப்பதற்கு இந்திய தண்டனை சட்டத்தின் சுமார் 187 பிரிவுகள் மற்றும் 67 மத்திய அரசு சட்டங்களின் படி பொது அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றன.இதன் மூலம் குற்ற வழக்குகளின் விசாரணைக்காக மாநில அரசுகளின் பிரத்யேக அனுமதி இன்றி அந்தந்த மாநிலங்களில் சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

ஆனால் இந்த விவகாரத்தில் திடீர் நடவடிக்கையாக, சி.பி.ஐ.க்கு வழங்கியுள்ள பொது அனுமதியை திரும்ப பெறுவதாக ஆந்திர மாநில அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சி.பி.ஐ. போன்ற உயர் விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டது. இந்த நடவடிக்கை மூலம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆந்திராவுக்குள் விசாரணை மற்றும் சோதனைக்காக அனுமதியின்றி நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்து உள்ளது. அதேநேரம் கோர்ட்டு உத்தரவு மூலம் நடத்தப்படும் விசாரணை மற்றும் சோதனைகளுக்கு மாநில அரசிடம் தனியாக அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

ஆந்திராவின் இந்த முடிவை தொடர்ந்து மேற்கு வங்க அரசும் சி.பி.ஐ.க்கு வழங்கப்பட்டு உள்ள பொது அனுமதியை நேற்று திரும்ப பெற்றது. கொல்கத்தாவில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கூட்டத்தில் பேசிய கட்சித்தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவை தான் ஆதரிப்பதாக தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘சந்திரபாபு நாயுடு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை மிகச்சரியானது. சி.பி.ஐ. மற்றும் பிற விசாரணை நிறுவனங்களை பா.ஜனதா தனது அரசியல் நலன்களுக்காகவும், பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்துகிறது’ என்று தெரிவித்தார்.

ஆனால் மேற்கு வங்க அரசின் இந்த நடவடிக்கை மூலம் அந்த மாநிலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சாரதா, நரதா போன்ற ஊழல் வழக்குகளில் நடந்து வரும் விசாரணையில் பாதிப்பு ஏற்படாது என சி.பி.ஐ. அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். எனினும் இந்த வழக்குகளில் எந்தவித கோர்ட்டு உத்தரவும் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா மற்றும் மேற்கு வங்க அரசுகளின் இந்த முடிவுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஊழல் விவகாரத்தில், எந்த மாநிலத்துக்கும் எந்தவொரு இறையாண்மையும் இல்லை. மறைப்பதற்கு தங்களிடம் ஏராளமான விஷயங்கள் இருப்பதால்தான், இந்த மாநில அரசுகள் சி.பி.ஐ. அமைப்பை தங்கள் மாநிலத்துக் குள் அனுமதிக்க மறுக்கின்றன’ என்று குற்றம் சாட்டினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory