» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் இல்லம் அருகே வன்முறையில் ஈடுபட்ட வழக்கில் இருந்து கேஜரிவால் விடுவிப்பு

செவ்வாய் 4, டிசம்பர் 2018 10:25:13 AM (IST)

பிரதமர் இல்லம் அருகே வன்முறையில் ஈடுப்பட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது.

நிலக்கரி சுரங்க ஊழலைக் கண்டித்து, கடந்த 2012, ஆகஸ்ட் 26-இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லம் முன் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் அரவிந்த் கேஜரிவால் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.  அப்போது ஏற்பட்ட தள்ளு, முள்ளுவில் காவல்துறையினர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கலைத்தனர்.

இதனிடையே, பிரதமர் இல்லம் முன் வன்முறையில் ஈடுபட்டதாக கேஜரிவால் உள்ளிட்டோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 147 (கலவரம் செய்தல்), 148 (மோசமான ஆயுதங்களால் கலவரம் செய்தல்), 149 (சட்டவிரோதமாக ஒன்று கூடியது) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கூடுதல் தலைமை பெருநகர் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் கூடுதல் பெருநகர நீதிமன்ற நீதிபதி சமர் விஷால் நேற்று அளித்த தீர்ப்பின் விவரம்: தங்களது உரிமைகளைக் பாதுகாப்பதற்காக, ஆயுதம் எதுவும் ஏந்தாமல் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. 

2012-ஆம் ஆண்டு சம்பவமும் அப்படித்தான் நிகழ்ந்துள்ளது. ஆயுதம் ஏதுமின்றி, எந்த குற்ற நோக்கமும் இல்லாமல் போராட்டக்காரர்கள் கூடியுள்ளனர். இந்தப் போராட்டத்தின் போது, காவல் துறையினர் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சுதான் நிலைமை மோசமடையக் காரணமாக இருந்துள்ளது.  எனவே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கேஜரிவால், கண்ஷியாம், மகேஷ், தீபக் சாப்ரா, ரஞ்சித் பிஷ்த், அமித் குமார் சிங், கெளதம் குமார் சிங் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory