» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்களவைத் தேர்தலில் கூட்டணி: அகிலேஷ்-மாயாவதி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சனி 12, ஜனவரி 2019 8:29:36 AM (IST)மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில், பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை இணைத்துக்கொள்ள மறுப்பு தெரிவித்து, சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டன. இதனைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து இரு கட்சிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை வீழ்த்தும் நோக்கில், மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர்கள் இருவரும் சனிக்கிழமை முதல்முறையாகக் கூட்டாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கின்றனர்.

இது குறித்து, அகிலேஷ் யாதவ் வெள்ளிக்கிழமை கூறுகையில், கடந்த முறை மக்களவைக்கான இடைத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது, பாஜக தோற்கடிக்கப்பட்டது. இந்த முறையும் பாஜகவைத் தோற்கடித்து, கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இந்தக் கூட்டணியால், பாஜக மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சிக்கும் பயம் ஏற்பட்டுள்ளது என்றார்.
தொகுதிப் பங்கீடு: மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில், இரு கட்சிகளும் தலா 37 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸின் கோட்டையாக விளங்கி வரும் அமேதி மற்றும் ரே பரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டாம் என்று கட்சித் தலைமைகள் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சிறிய கட்சிகளான ராஷ்ட்ரீய லோக் தளம், நிஷத் கட்சி ஆகியவையும் சமாஜவாதி-பகுஜன் சமாஜ் கூட்டணியில் இடம்பெறலாம் என்று தெரிகிறது. ஆனால், சனிக்கிழமை நடைபெறவுள்ள செய்தியாளர்கள் சந்திப்புக்கு அக்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.இது குறித்து, ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் மாநிலத் தலைவர் மசூத் அகமது செய்தியாளர்களிடம் கூறுகையில், கட்சியின் துணைத் தலைவர் ஜெயந்த் செளதரி சனிக்கிழமை லக்னெளவில் இருப்பார். செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்தால், அவர் அதில் கலந்துகொள்வார் என்றார்.

அதே வேளையில், மக்களவைத் தேர்தலில் 6 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுமாறு கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தி வரும் ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சிக்கு 2 முதல் 3 தொகுதிகள் வரை வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டவிரோத சுரங்க வழக்கில், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிடம் சிபிஐ விசாரணை நடத்த இருப்பதாக அண்மையில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மாயாவதி அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory