» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடியைத் தவிர வேறு யாராலும் மத்தியில் வலிமையான ஆட்சியைத் தர முடியாது: அமித் ஷா

சனி 12, ஜனவரி 2019 10:29:37 AM (IST)பிரதமர் மோடியைத் தவிர வேறு யாராலும் மத்தியில் வலிமையான ஆட்சியைத் தர முடியாது. என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறினார்.

பாஜகவின் தேசிய அளவிலான 2 நாள் மாநாடு, தில்லி ராம்லீலா மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு பாஜகவைச் சேர்ந்த உள்ளூர் பிரதிநிதிகள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அந்த தேர்தலுக்கு கட்சித் தொண்டர்களை தயார்படுத்தும் விதமாக இந்த மாநாடு அமைந்துள்ளது.

மாநாட்டின் முதல்நாள் நிகழ்வில் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் என சுமார் 12,000 பேர் கலந்து கொண்டனர்.  மாநாட்டைத் தொடங்கி வைத்து அமித் ஷா சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசினார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்றும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் தொண்டர்களிடம் அமித் ஷா வலியுறுத்தினார். 

அவர் பேசியதாவது: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, எதிர்க்கட்சிகள் ஓரணியாகத் திரள்வதாகக் கூறப்படுகிறது. அந்த அணியில் உள்ள எந்தவொரு தலைவருக்கும் கொள்கையும் கிடையாது; அவர்களிடம் வளர்ச்சித் திட்டமும் கிடையாது. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற வெறியே அவர்களை ஒன்றிணைத்துள்ளது. உலக அளவில் மிகவும் பிரபலமான தலைவரான பிரதமர் மோடியை பாஜக பெற்றுள்ளது. அவரது தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, மக்கள் நலத் திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியைத் தவிர வேறு யாராலும் மத்தியில் வலிமையான ஆட்சியைத் தர முடியாது. எனவே, பாஜக தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால்தான், நாட்டின் வளர்ச்சியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும். பிரதமர் மோடியை எந்தக் கூட்டணியாலும் வெல்ல முடியாது; அவர், இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தி என்பதை எதிர்க்கட்சிகள் அறிந்து வைத்துள்ளன. பிரதமர் மோடிக்கு மக்கள் உறுதியோடு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது.

கேரளத்தில் பாஜக ஆட்சி: கடந்த 2014-ஆம் ஆண்டில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, 6 மாநிலங்களில் மட்டுமே பாஜகவின் ஆட்சி நடைபெற்றது. தற்போது, 16 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கேரளத்தில் பாஜகவின் ஆட்சி மலரும்.பிரதமர் மோடியை 1987-ஆம் ஆண்டில் இருந்து எனக்குத் தெரியும். அவரது தலைமையில் நடைபெற்ற எந்தவொரு தேர்தலும் தோல்வியைத் தழுவியது கிடையாது.

வரும் மக்களவைத் தேர்தலில், கடந்த 2014-ஆம் ஆண்டில் கிடைத்த தொகுதிகளைக் காட்டிலும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 73 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. வரும் மக்களவைத் தேர்தலில், அதைவிட அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். அந்த மாநிலத்தில் பாஜக மீதான அச்சம் காரணமாகவே, சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கை கோத்துள்ளன. ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக ராகுல் காந்தியும், அவரது சகாக்களும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு கல்வி-வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருப்பதன் மூலம், கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் விரைவில் கட்டப்பட வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. ஆனால், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தீர்ப்பு விரைவில் வெளியாவதற்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்றார் அமித் ஷா. மாநாட்டின் இரண்டாம் நாளான சனிக்கிழமை, பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory