» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அயோத்தி வழக்கில் 26-ஆம் தேதி விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதன் 20, பிப்ரவரி 2019 5:46:17 PM (IST)

அயோத்தி வழக்கை பிப்ரவரி 26-இல் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, என்.வி,ரமணா, டி.ஒய். சந்திரசூட், யு.யு.லலித் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதையடுத்து, இந்த வழக்கு கடந்த மாதம் 10-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அயோத்தி விவகாரத்தில் கடந்த 1997-ஆம் ஆண்டு அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங் தரப்பில் யு.யு. லலித் வழக்குரைஞராக ஆஜராகியதை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையில் இருந்து யு.யு. லலித் விலகினார். 

அதனால், அயோத்தி வழக்கை விசாரிக்கும் புதிய அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 25-ஆம் தேதி மாற்றியமைத்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அந்த புதிய அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. நஸீர் ஆகியோர் இடம்பெற்றனர். மேலும், இந்த வழக்கு ஜனவரி 29-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

இதனிடையே, அயோத்தி விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எஸ்.ஏ.போப்டே இல்லாத காரணத்தால், ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறவிருந்த விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் ஜனவரி 27-ஆம் தேதி அறிவித்தது. அந்த அறிவிப்பில் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தேதி எதுவும் குறிப்பிடவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு வரும் 26-ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory