» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சாதியைக் கூறி இழிவுபடுத்தியதால் பெண் டாக்டர் தற்கொலை: மற்றொரு பெண் டாக்டர் கைது!!

புதன் 29, மே 2019 11:06:19 AM (IST)மும்பையில் பழங்குடி  வகுப்பைச்  சேர்ந்த இளம் பெண் டாக்டரை, சாதியை சொல்லி இழிவுபடுத்தி, தற்கொலைக்கு  தூண்டியதாக மற்றொரு பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் கடந்த 22-ம் தேதி பழங்குடி வகுப்பைச் சேர்ந்த, இளம் பெண் டாக்டர் பாயல் தட்வி தற்கொலை செய்துகொண்டார். அது தொடர்பாக 3 மூத்த பெண் டாக்டர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, டாக்டர்  பக்தி மெஹர் செவ்வாய்க்கிழமை மும்பை அக்ரிபாதா போலீஸாரால் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட மற்ற 2 டாக்டர்களான அங்கிதா கண்டெல்வால், ஹேமா அஹுஜா ஆகியோர் முன் ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையே, தற்கொலை  செய்துகொண்ட பாயல் தட்வியின் தாய் அபேதா, கணவர் சல்மான் ஆகியோரும் மற்றவர்களும் மும்பை பிஒய்எல் நாயர் அரசு மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். பழங்குடி சாதியைச் சேர்ந்தவர் என்பதைச் சொல்லி இழிவுபடுத்தியும், துன்புறுத்தியும், ராகிங் செய்தும் பாயல் தட்வியை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டிய 3 மூத்த பெண் டாக்டர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வன்சித் பகுஜன் அகாதி அமைப்பையும் மற்ற தலித், பழங்குடி அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தன் மகளைப் போல உயர் கல்வி பயிலும் மற்ற மாணவிகளின் பாதுகாப்புக்கு அரசு பொறுப்பேற்குமா என்று பாயல் தட்வியின் தாயார் கேள்வி எழுப்பினார். சின்னப் பிரச்சினைகளுக்கு எல்லாம், மூத்த டாக்டர்கள் தன்னை துன்புறுத்துவதாக என்னிடம் சொல்லி என் மகள் வேதனைப்பட்டிருக்கிறாள். மற்ற நோயாளிகள் முன்னிலையில் பைல்களை தூக்கி என் மகளின் முகத்தில் வீசி எறிந்திருக்கிறார்கள் என்று பாயல் தட்வியின் தாயார் அபேதா கூறினார்.

தன்னை துன்புறுத்தினாலும், அவர்களுக்கு எதிராக எழுத்துபூர்வமாக புகார் தர வேண்டாம் என்றும் அப்படிச் செய்தால் அது அவர்களின் வேலைக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடும் என்றும் என் மகள் என்னிடம் சொல்லுவது வழக்கம் என்றும் அபேதா தெரிவித்தார். பாயல் தட்வியின் கணவரான டாக்டர் சல்மான் கூறுகையில், அந்த 3 டாக்டர்களால் பாயல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார். இதற்கிடையே அந்த 3 பெண் டாக்டர்களையும் மகாராஷ்டிர மாநில உறைவிட மருத்துவர்கள் சங்கம் சஸ்பெண்ட் செய்திருக்கிறது. அந்த 3 பெண் டாக்டர்களுக்கு எதிராகவும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், ராகிங் தடுப்புச் சட்டம், தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்கான 306-வது பிரிவு ஆகியவற்றின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory