» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிவகங்கை தொகுதியில் முழுக்கவனம் செலுத்துங்கள்: கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதன் 29, மே 2019 12:51:59 PM (IST)

உங்களை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்த சிவகங்கை தொகுதியில் முழுக் கவனம் செலுத்துங்கள் என்று கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா ஆகிய வழக்குகள் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, அவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ள அனுமதி அளித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ள நிபந்தனைகளின்படி, ரூ.10 கோடியைப் பிணைத்தொகையாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், ஏற்கெனவே செலுத்திய ரூ.10 கோடி பிணைத்தொகை உச்சநீதிமன்றத்தின்வசமே உள்ளது என்றார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், மீண்டும் ஒருமுறை ரூ.10 கோடி பிணைத்தொகையைச் செலுத்துவதில், உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என நினைக்கிறோம் என்றனர். இந்த நிலையில், ஏற்கனவே செலுத்திய ரூ.10 கோடி பிணைத் தொகையை திரும்ப அளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மேலும் ரூ.10 கோடியை பிணைத் தொகையாக செலுத்தி, இந்த மாத இறுதி மற்றும் அடுத்த மாத முதல் வாரத்துக்குள் அனுமதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வரலாம் என்றும், ஏற்கனவே செலுத்திய பிணைத்தொகையை தற்போது திருப்பி அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மீண்டும் மனு தாக்கல் செய்ததால், அந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் கூறினார். மேலும், உங்களைத் தேர்வு செய்த சிவகங்கை மக்களவைத் தொகுதியில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவுரை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory