» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: சிபிஐ முன் ஆஜரானார் கொல்கத்தா முன்னாள் ஆணையர்

வெள்ளி 7, ஜூன் 2019 12:43:49 PM (IST)

சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் விசாரணைக்காக கொல்கத்தா முன்னாள் ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ முன்பு இன்று ஆஜரானார்.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை நீர்த்துப் போக செய்ததாக முன்னாள் ஆணையர் ராஜீவ் குமார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. சிபிஐ பல முறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில் பல்வேறு காரணங்களைச் சொல்லி வாய்தா பெற்றுக் கொண்டிருந்த ராஜீவ் குமார் கடைசியாக இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.  

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்த ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ, வழக்கின் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், சில முக்கிய ஆவணங்களை சிபிஐயிடம் இருந்து மறைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியது. 

இதுதொடர்பாக, அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சென்றபோது, அவர்களை மேற்கு வங்க காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதுடன், விசாரணை நடத்த அனுமதி மறுத்துவிட்டனர்.  இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது. இதையடுத்து, ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், அதே சமயம், அவரைக் கைது செய்வதற்கு சிபிஐக்கு இடைக்காலத் தடை விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த சில தினங்களில், அந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கிக் கொண்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் சிபிஐ கைது செய்வதில் இருந்து தன்னைப் பாதுகாக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ராஜீவ் குமார் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவர் முறையிடலாம் என்று தெரிவித்தது. இதையடுத்து, அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அவர் நாடினார்.  இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அவரை சிபிஐ கைது செய்வதில் இருந்து ஒரு மாதம் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த நேரில்  ஆஜராகுமாறு சிபிஐ தரப்பில் ராஜீவ் குமாருக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அழைப்பாணையை (சம்மன்) ஏற்று சிபிஐ அதிகாரிகள் முன்பு கொல்கத்தா நகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் இதுவரை நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார். சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் கோரி அவர் கடிதம் அனுப்பி வந்த நிலையில், இன்று நேரில் ஆஜராகி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory