» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்போ இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் சந்திப்பு

புதன் 26, ஜூன் 2019 4:24:50 PM (IST)இந்தியா  வருகை தந்துள்ள அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்போ, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். 

இம்மாத இறுதியில் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றபின் முதல்முறையாக டொனால்ட் ட்ரம்பை சந்திக்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்போ மூன்று நாள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று (ஜூன் 26) டெல்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. 

மைக் பாம்போவின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை மைக் பாம்போ இன்று சந்தித்து பல விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கவுள்ளார். பின்னர் இருவரும் இன்று மதியம் உணவு விருந்தில் கலந்துகொள்வர். பிரதமர் மோடி - மைக் பாம்போ சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "இருதரப்பு உறவை வலுப்படுத்த இணைந்து பணிபுரிந்து வருகிறோம். இந்தியா-அமெரிக்கா உறவு குறித்து பல்வேறு விவகாரங்களில் கருத்துக்ளை பரிமாறிக்கொள்ள பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்போ சந்தித்தார். ஒசாகாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டின்போது அதிபர் டொனால்ட் ட்ரம்பை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவார்” என்று தெரிவித்துள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மைக் பாம்போ சந்திப்பின்போது ரஷ்யாவுடனான ஏவுகணை ஒப்பந்தங்கள், பயங்கரவாதம், ஹெச்-1பி விசா, வர்த்தகம், வரிகள், ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை மைக் பாம்போ சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பில் தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory