» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நர்மதை அணையிலிருந்து குஜராத்துக்கு தண்ணீர் திறக்கமாட்டோம்: மத்திய பிரதேசம் போர்க்கொடி

ஞாயிறு 21, ஜூலை 2019 9:55:13 AM (IST)நர்மதை அணையிலிருந்து குஜராத் மாநிலத்துக்கு தண்ணீர் திறக்கமாட்டோம் என மத்திய பிரதேச நர்மதா ஆணைய அமைச்சர் சுரேந்திர சிங் பாகேல் கூறியுள்ளார்.

நர்மதை அணையில் இருந்து மத்திய பிரதேசம் தண்ணீர் திறக்காவிட்டால் வல்லபாய் படேல் சிலை உள்ள பகுதிக்கு தண்ணீர் கிடைக்காது என சுரேந்திர சிங் பாகேல் குறிப்பிட்டார். நர்மதா நதி ஆணைய கூட்டங்களுக்கு குஜராத் அரசு முக்கியத்துவம் தருவதில்லை. நர்மதா நதி அணை கட்டப்பட்டபொழுது அதன் காரணமாக பாதிக்கப்பட்ட  மக்களை புதிய இடங்களில் குடியமர்த்தும் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என மத்திய பிரதேச நர்மதா ஆணைய அமைச்சர் சுரேந்திர சிங் பாகேல் தெரிவித்தார்.

நர்மதா அணைத் தண்ணீரிலிருந்து 2 இடங்களில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மின் உற்பத்தித் திறன் 1,450 மெகாவாட் ஆகும். இந்த 2 நீர் மின்சார நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 57 சதவீதம் மத்தியப் பிரதேசத்திற்கும், 27% மகாராஷ்டிர மாநிலத்துக்கும் 16 சதவீதம் குஜராத் மாநிலத்துக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது ஒப்பந்தம் ஆகும். தற்போது நீர் மின்சார நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு தேவையான தண்ணீரை குஜராத் மாநில அரசு திறந்து விடுவதில்லை. அதன் காரணமாக இந்த 2 மின் நிலையங்களிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அதனால் மத்திய பிரதேசத்திற்கு மின்சாரம் கிடைப்பதில்லை,

மழை காரணமாக, இந்த நர்மதா அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை திறந்து விட குஜராத் அரசு விரும்பவில்லை அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று அஞ்சுகிறது. நீர் மின்சார நிலையங்கள் இயங்கி மின்சாரம் உற்பத்தி செய்தால்தான் மற்ற மாநிலங்களுக்கு மின்சாரத்தை பகிர்ந்துகொள்ள முடியும். தன்னுடைய நலனுக்காக தண்ணீர் திறந்துவிட அரசு நிறுத்தி வைத்தால் மற்ற மாநிலங்களுக்கு கிடைக்கவேண்டிய மின்சாரம் கிடைக்காமல் போகிறது.

அதே நேரத்தில் நர்மதா அணையில் தேங்கும் நீரின் அளவு அதிகரித்து பல குடியிருப்புகளை மூழ்கடிக்கிறது என்று பாகேல் குற்றம்சாட்டினார். நர்மதா நதி ஆணையம் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இயங்கி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநிலங்கள் இந்த ஆணையக் கூட்டங்களே முக்கியமாகக் கருதவில்லை என்று மத்திய பிரதேச அரசு கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி

நர்மதா அணைத் தண்ணீரை அரசியலாக்க மத்திய பிரதேச அரசு முயற்சி செய்து வருகிறது. இதை அரசியல் ஆக்கினால் பாதிக்கப்படப்போவது 3 மாநில மக்கள்தான் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்தார். நர்மதா அணை கட்டுவதால் இடம்பெயர்ந்த குடும்பங்களை மறு குடியமர்த்துவதற்கு குஜராத் உதவி செய்யவில்லை என்று மத்திய பிரதேச அரசு இப்போது புதிதாக குற்றஞ்சாட்டுகிறது.

ஏற்கனவே நர்மதா நதியில் அணை கட்டுவதன் மூலம் இடம்பெயர்ந்த எல்லா குடும்பங்களையும் குடியமர்த்தும் ஏற்பாடுகள் முறைப்படி நிறைவேற்றப் பட்டுவிட்டன. இப்பொழுது புதிதாக 6,000 குடும்பங்கள் இன்னும் குடியமர்த்தப்பட வேண்டி உள்ளது என 2019ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி குஜராத் மாநில தலைமைச் செயலாளருக்கு மத்திய பிரதேச அரசு திடீரென்று கடிதம் அனுப்பி உள்ளது என விஜய் ரூபானி தெரிவித்தார்.

நர்மதா ஆணையம் தொடர்பான கூட்டங்களுக்கு மத்திய பிரதேச அரசு மூத்த அதிகாரிகளை அனுப்புவதில்லை. பல நேரங்களில் நர்மதா ஆணைய கூட்டங்களை மத்திய பிரதேச அரசு புறக்கணித்து விடுகிறது. கடந்த ஜூலை 18ம் தேதி நடந்த கூட்டத்தையும் இப்படித்தான் மத்திய பிரதேச அரசு புறக்கணித்தது. நர்மதா ஆணையம் எல்லா மாநிலங்களையும் சமமாக நடத்துவதில்லை என்று மத்திய பிரதேச அரசு இப்பொழுது குற்றம்சாட்டுகிறது. இது மோசமான அரசியல் நோக்கத்துடன் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆகும் என குஜராத் முதல்வர் விஜய்ரூபானி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory