» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தனி நபர்களை தீவிரவாதியாக அறிவிக்கும் உபா மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

சனி 10, ஆகஸ்ட் 2019 11:05:02 AM (IST)

தனி நபர்களை தீவிரவாதியாக அறிவிக்கும் உபா சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா-2019 (உபா) கடந்த ஜூலை 24ம் தேதி மக்களவையிலும், கடந்த 2ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதை பரிசீலித்த அவர், நேற்று முன்தினம் இரவு ஒப்புதல் அளித்தார். இது தொடர்ாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: தீவிரவாத அமைப்புகளை ஆதரிப்பவர்கள், அதற்கு உதவிகள் செய்யும் தனி நபர்களை புதிய சட்டத்தின்படி இனி தீவிரவாதியாக அறிவிக்க முடியும். மேலும், அவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்யலாம். தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவர் 

வெளிநாட்டு பயணம் செல்லவும் தடை விதிக்க முடியும். இந்த சட்டம், தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ)  இயக்குனருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குகிறது. முந்தைய சட்டத்தில் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய, சம்மந்தப்பட்ட மாநில காவல் துறை தலைவரின் அனுமதி பெறவேண்டும். புதிய சட்டப்படி என்ஐஏ இயக்குனரே தீவிரவாதியின் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம். முன்பு டிஎஸ்பி மற்றும் அதற்கு கூடுதலான அந்தஸ்து கொண்ட அதிகாரிகளே உபா தொடர்புடைய வழக்குகளில் சிக்கியவர்களை விசாரிக்க முடியும். 

தற்போதைய சட்டப்படி இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான என்ஐஏ அதிகாரிகளே  விசாரணை நடத்தலாம். இவ்வாறு கூறியுள்ளார். குடியரசுத் தலைவர்  ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. மத்திய உள்துறை அதிகாரி மேலும் கூறுகையில், இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர்  ஹபீஷ் சயீத்தும், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர்  மசூத் அசாரும் தேடப்பட்டு வருகின்றனர். இந்த புதிய உபா சட்டத்தின்படி, முதலில் இந்த 2 பேரும் பயங்கர தீவிரவாதிகளாக அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory