» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

புல்வாமா தாக்குதல் போல் காஷ்மீரில் மற்றொரு தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ திட்டம்: உளவுத்துறை தகவல்

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 9:02:04 AM (IST)

புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலை நடத்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து வருகிறது. அதற்கு பதிலடியாக இந்தியத் தூதரை திருப்பி அனுப்பியது. இந்தியாவுடனான வர்த்தக உறவையும் ரத்து செய்தது.

மேலும், சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் ரயில், ஜோத்பூர் கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றையும் ரத்து செய்தது பாகிஸ்தான். இறுதியாக டெல்லி, லாகூர் இடையே சென்ற பஸ் போக்குவரத்தையும் நிறுத்தியது. காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும்படி உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய தாக்குதலைப் போன்று மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ திட்டமிட்டு இருப்பதாக, டிஎன்ஏ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களை பலிவாங்கிய புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு பாகிஸ்தான் உளவுத்துறை தொடர்ந்து ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 முதல் 7 தீவிரவாதிகள் ராணுவ கண்காணிப்பை மீறி எல்லைப்பகுதிக்குள் ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக சமீபத்தில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு, ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் கமாண்டர் முப்தி அஸ்கர் ராப்புடன் ராவல்பிண்டி நகரில் ஆலோசனையும் நடத்தியுள்ளது. ராணுவ உடையில் தீவிரவாதிகள் இருக்க வேண்டும், அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற கவலைப்படாமல் இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என தீவிரவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த வாரம் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், " ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துவிட்டதால், காஷ்மீர் புல்வாமாவில் நடந்த தாக்குதலைப் போன்று மற்றொரு தாக்குதல் நடக்கக்கூடும் என்று எச்சரித்து இருந்தார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்கள் மீது அழுத்தம் அதிகரிப்பதால் இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கலாம். ஆனால், இந்த தாக்குதல் நடக்கும்போதெல்லாம் பாகிஸ்தான் ஆதரவு தருகிறது என்று கூறுகிறார்கள் " என இம்ரான் கான் தெரிவி்த்திருந்தார். இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவம் மிகப் பயங்கரமான ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிபொருட்களுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நோக்கியும், சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை நோக்கியும் நகர்கிறார்கள் என பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஹமித் மிர் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி நண்பர்களிடம் இருந்து எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதன்படி, பாகிஸ்தான் ராணுவத்தினர் பயங்கர ஆயுதங்களுடனும், வெடிபொருட்களுடனும் சர்வதேச எல்லைக் கோட்டை நோக்கி செல்கிறார்கள். இதை அங்குள்ள மக்கள் வரவேற்கிறார்கள். கையில் பாகிஸ்தான் கொடிகள், காஷ்மீர் பனே கா பாகிஸ்தான் என்ற வாசகத்தை உச்சரித்தபடி செல்கிறார்கள் " என ஹமித் மிர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் போர் விமானங்கள் குவிப்பு

லடாக் ஒட்டிய எல்லையில் பாகிஸ்தான் தன் போர் விமானங்களைக் குவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அரசு தரப்பிலிருந்து வந்த தகவலில், "பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான சி-130 ரக விமானங்கள் மூலம் லடாக் ஒட்டிய ஸ்கார்டு விமானப்படைத் தளத்துக்கு பாகிஸ்தான் ஆயுதத் தளவாடங்களைக் கொண்டு வந்துள்ளது இந்தத் தளவாடங்கள் போர் விமானங்களுக்குத் தேவையான உபகரணங்களாக இருக்கலாம். மேலும் பாகிஸ்தான் தனது ஜே.எஃப்-17 ரக போர் விமானங்களையும் ஸ்கார்டு விமானத் தளத்துக்குக் கொண்டுவரும் எனத் தெரிகிறது

இந்திய உளவு அமைப்புகளும் விமானப் படை மற்றும் ராணுவம் பாகிஸ்தானின் ஸ்கார்டு விமானப் படையைக் கூர்ந்து கவனித்து வருகிறது" என அரசு தரப்பில் வந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பயன்படுத்தும் சி-130 ரக விமானங்கள் அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்டவை. பாகிஸ்தான் தனது விமானப் படை உபகரணங்களைக் கொண்டு ஒத்திகை நடத்துவதற்காக ஸ்கார்டு விமானப் படை தளத்தில் போர் உபகரணங்களைக் குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஸ்கார்டு விமானப் படை தளத்தை பாகிஸ்தான் இந்தியாவுடனான போர் நடவடிக்கைகளில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory