» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இமாசல. பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019 9:00:46 AM (IST)பஞ்சாப், அரியானா, இமாசல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பருவமழையின் தீவிரத்தால் கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பல்வேறு வடமாநிலங்கள் கனமழையின் பிடியில் சிக்கி உள்ளன. குறிப்பாக இமாசலபிரதேசம், உத்தர காண்ட், பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக உத்தரகாண்டில் பெய்து வரும் மழையால் அங்குள்ள உத்தரகாசி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இமாசல பிரதேசத்தை ஒட்டியுள்ள இந்த மாவட்டத்தில் நூற்றுக்கணக் கான வீடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன.

மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த பயிரும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. அங்கு நேற்றைய கனமழைக்கு 17 பேர் உயிரிழந்தனர். 6 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகளை பேரிடர் மீட்புக்குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். உத்தரகாண்டின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. இங்கு மழை வெள்ள மீட்பு பணிகளில் இந்தோ- திபெத் பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதைப்போல இமாசல பிரதேசத்தில் நேற்றும் கனமழை கொட்டியது. இந்த மழையால் சிம்லா, குலு உள்ளிட்ட மாவட்டங்கள் தொடர்ந்து வெள்ளத்தின் பிடியில் சிக்கி உள்ளன. மாநிலத்தில் சுமார் 26 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் 12 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் வெளியேற முடியாமல் பல இடங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர். அவர் களை வான்வழியாக மீட்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. மேலும் நிலச்சரிவை சீரமைத்து போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் பணிகளும் நடந்து வருகிறது.

இங்கு நேற்று காலையில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஒரு ஆசிரியரும், 2 மாணவர்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். நீண்ட போராட்டத்துக்குப்பின் மீட்கப்பட்ட அவர் களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மழையால் மாநிலத்தில் குடிநீர் இணைப்புகள் கடுமையாக சேதமடைந்திருக்கின்றன. இந்த மழையால் ரூ.500 கோடிக்கும் மேல் மாநிலத்தில் சேதம் ஏற்பட்டு இருப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வந்த அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் நேற்று காலையில் மீண்டும் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இந்த மழையால் யமுனை நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நேற்றுமுன்தினம் மாலையில் வினாடிக்கு 8.28 லட்சம் கன அடி தண்ணீர் சென்றதால் கரையோர மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடப்பட்டது. அரியானாவின் கர்னால் மாவட்டத்தில் யமுனை நதியின் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 9 பேர் நேற்று ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

இதைப்போல பஞ்சாப்பின் சட்லஜ் நதியிலும் அபாய அளவை தாண்டி வெள்ளம் செல்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஜலந்தர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மாநிலத்தில் அடுத்த 48 அல்லது 72 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் அரசு சார்பில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கவனிக்குமாறு அனைத்து துறைகளுக்கும் முதல்-அமைச்சர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டு உள்ளார். இந்த நடவடிக்கைகளை அவரும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory