» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வன்முறையை தூண்டுகிறது : டிரம்ப்பிடம் மோடி குற்றச்சாட்டு

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019 10:28:52 AM (IST)

இந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் கருத்துகளை, சில தலைவர்கள் வெளியிட்டு வருவது, பிராந்திய அமைதிக்கு உகந்ததல்ல என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். 

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், இந்திய அரசுக்கு எதிராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். எனவே, இந்தியாவுக்கு எதிராக இம்ரான் வன்முறையை தூண்டுவதாக பிரதமர் மோடி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் "பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் சுமார் 30 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர். அப்போது, இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். 

பிராந்திய நிலவரம் தொடர்பாக அவரிடம் பேசிய பிரதமர், இந்தியாவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலான கருத்துகளை, சில தலைவர்கள் வெளியிட்டு வருவது, பிராந்திய அமைதிக்கு உகந்ததல்ல என்று குறிப்பிட்டார். எல்லை தாண்டிய பயங்கரவாதம், வன்முறை இல்லாத சூழலை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தினார். பயங்கரவாதமற்ற சூழலை உருவாக்கும் பாதையில் பயணிக்கும் எந்த நாட்டுக்கும், வறுமை, எழுத்தறிவின்மை, நோய்கள் ஆகியவற்றை ஒழிப்பதில் ஒத்துழைப்பு அளிக்க இந்தியா தயாராக உள்ளது என்று டிரம்ப்பிடம் பிரதமர் மோடி கூறினார்.

ஆப்கானிஸ்தானின் 100-ஆவது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டதை சுட்டிக் காட்டி பேசிய பிரதமர் மோடி, ஒன்றுபட்ட, பாதுகாப்பான, ஜனநாயகம் மேம்பட்ட ஆப்கானிஸ்தானை உருவாக்க வேண்டும் என்ற இந்தியாவின் நீண்ட கால உறுதிப்பாட்டை குறிப்பிட்டார். மேலும், ஜப்பானின் ஒசாகா நகரில் கடந்த ஜூன் மாதம் ஜி-20 நாடுகள் மாநாட்டையொட்டி இருவருக்கும் இடையே நடைபெற்ற விரிவான பேச்சுவார்த்தையையும் பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடனான உரையாடலின்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசித்தனர். தங்களது அடுத்த சந்திப்பை ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளதாக இருவரும் கூறினர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் இம்மாத இறுதியில் ஜி7 நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ளது. இதில், மோடியும், டிரம்ப்பும் சந்தித்து பேசுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த விவகாரத்தில், இந்திய அரசை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது. அவரது அரசின் செயல்பாடுகள், பாகிஸ்தானுக்கும், இந்தியாவில் வாழும் சிறுபான்மையினருக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. இந்தியாவிடமுள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை, சர்வதேச நாடுகள் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கூறினார். கடந்த இரு நாள்களுக்கு முன் டிரம்ப்புடன் இம்ரான் கான் தொலைபேசியில் பேசினார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு இம்ரானிடம் டிரம்ப் கூறிவிட்டார். இந்த விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலையிடுவதற்காக பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory