» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முக்கிய வழக்குகளில் வாதாடிய ராம் ஜேத்மலானி மறைவு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

திங்கள் 9, செப்டம்பர் 2019 8:22:44 AM (IST)

முக்கிய வழக்குகளில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முதுபெரும் சட்ட வல்லுனரும், மூத்த வக்கீலுமான ராம் ஜெத்மலானி, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை 7.45 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95.அவர் கடந்த சில மாதங்களாகவே வயோதிகத்தாலும், உடல்நலக்குறைவாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.வரும் 14-ந் தேதி தனது 96-வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில், ராம் ஜெத்மலானி மரணம் அடைந்து விட்டார்.

தமது வாதத் திறமையால் பல சிக்கலான வழக்குகளில் இருந்து தமது கட்சிக்காரர்களுக்கு அவர் விடுதலை பெற்று தந்துள்ளார். இருந்தபோதிலும், 1959-ம் ஆண்டு நடைபெற்ற கடற்படை கமாண்டர் நானாவதி வழக்கில் ஆஜராகி வாதாடிய போதுதான் நாடு முழுவதும் ராம் ஜேத்மலானி பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜராகி வாதாடியிருக்கிறார் ராம் ஜேத்மலானி.

குறிப்பாக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்ட பாதுகாவலர்களுக்கு ஆதரவாக வாதாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதே போல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் களுக்காக கடந்த 2011-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வாதாடினார்.

திமுக எம்.பி. கனிமொழி தொடர்புடைய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு, பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் தொடர்புடைய கால்நடை தீவன ஊழல் வழக்கு, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொடர்புடைய சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கு, பாஜக மூத்த தலைவர் அத்வானி தொடர்புடைய ஹவாலா வழக்கு, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்புடைய சொத்துக்குவிப்பு வழக்கு ஆகியவற்றில் ராம் ஜேத்மலானி ஆஜராகி (குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில்) வாதாடியிருக்கிறார்.

அரசியல் வாழ்க்கை

வழக்கறிஞர் தொழிலில் சிறந்து விளங்கிய ராம் ஜேத்மலானி, அரசியலிலும் தனி முத்திரை பதித்தவர் ஆவார். பாஜகவின் முந்தைய வடிவமான பாரதிய ஜன சங்கத்திலும், பின்னர் பாஜகவிலும் இணைந்து பணியாற்றிய அவர், 1988-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட் டார். பிறகு, 1996-ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமை யிலான அமைச்சரவையில் சட்டத் துறை அமைச்சராகவும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

எனினும், கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவிலிருந்து விலகிய ராம் ஜேத்மலானி, 2004-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாஜ்பாயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்றார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2010-ம் ஆண்டு பாஜகவில் மீண்டும் இணைந்த அவர், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே, பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த காரணத்தால் 2013-ம் ஆண்டு பாஜகவிலிருந்து ராம் ஜேத்மலானி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு வழக்கறிஞர் தொழிலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், தீவிர அரசியலில் இருந்தும் விலகினார்.

தலைவர்கள் இரங்கல்

இந்நிலையில், ராம் ஜேத்மலானியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி யில் கூறப்பட்டுள்ளதாவது:

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி மறைந்த செய்தி அறிந்து சோகம் அடைந்தேன். பொது பிரச்சினைகள் குறித்து துணிச்சலாக கருத்து கூறும் பண்புடையவர் அவர். மிகவும் திறமையான, தேச பக்தி கொண்ட ஒரு வழக்கறிஞரை நமது தேசம் இழந்துவிட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘ராம் ஜேத்மலானி நகைச் சுவை உணர்வு மிக்கவர். எந்த ஒரு விவகாரத்திலும் தனது மனதில் பட்டதை துணிச்சலாகவும், வெளிப் படையாகவும் கூற தயங்காதவர். நாடாளுமன்றத்திலும், நீதித்துறை யிலும் சிறந்த பங்களிப்பை நல்கியவரை நமது நாடு இழந்துள்ளது’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory