» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம்: தமிழக, கேரள முதல்வர்கள் முடிவு

வியாழன் 26, செப்டம்பர் 2019 11:38:20 AM (IST)தமிழகம் - கேரளம் இடையேயான முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதிநீர்ப் பிரச்னைகளுக்கு தீர்வு காண சிறப்புக் குழுக்கள் அமைப்பது என்று இரு மாநில முதல்வர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.

கேரள மாநிலத்துடனான பல்வேறு நதிநீர்ப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க அந்த மாநில முதல்வர் பினராயி விஜயனை, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திருவனந்தபுரத்தில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்காக அவர் சென்னையில் இருந்து காலை விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கே.சண்முகம், முதல்வரின் செயலாளர் சாய்குமார், பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பலரும் சென்றிருந்தனர்.

திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவருக்கு சால்வை அணிவித்து, பரிசாக சுவாமி சிலை வழங்கினார். இதைத் தொடர்ந்து, இரு மாநில முதல்வர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு, இரு மாநில முதல்வர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, தமிழக முதல்வர் பழனிசாமி கூறியது: 15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையிலான நீர்ப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது.

ஏற்கெனவே ஆலோசித்தபடி, பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தின் மூலம் நீர்ப் பங்கீடு செய்வதற்கு இரண்டு மாநிலத்திலும் தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவின் ஆய்வின் அடிப்படையில் நீர்ப் பங்கீடு செய்து கொள்ளப்படும். இதேபோன்று, பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தனிக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அந்தத் திட்டமும் நிறைவேற்றப்படும். ஆனைமலையாறு, நீராறு, நல்லாறு திட்டம், சிறுவாணி பிரச்னை போன்றவற்றுக்கும் இந்தக் குழு மூலமாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தப் பிரச்னைக்கும் பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். தமிழக, கேரள விவசாயிகளும், பொது மக்களும் சகோதரர்களாகவே இருக்கிறார்கள். இரு மாநிலத்துக்கும் இடையிலான நதிநீர்ப் பங்கீட்டு பிரச்னைகளைத் தீர்க்க குழுக்கள் அமைக்கப்படும். இரு மாநில விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் தேவையான நீரை முறைப்படி பங்கிட்டு வழங்குவதற்குத்தான் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே நதிநீர் தொடர்பான சிறுசிறு பிரச்னைகளும் கூட பேசி தீர்த்துக் கொள்ளப்படும்.

பம்பா-அச்சன்கோவில் வைப்பாறு திட்டம் குறித்து விவாதிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பேசி முடிவெடுக்கப்படும். இரண்டு மாநிலங்களின் துறைச் செயலாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்படும். ஆண்டுக்கு இருமுறை, இரு மாநில தலைமைச் செயலாளர்களும் சந்தித்துப் பேசுவர் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory