» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: பெங்களூரு முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

வியாழன் 26, செப்டம்பர் 2019 12:08:18 PM (IST)

அரசியல் பிரமுகர்களின் போனை ஒட்டுக்கேட்ட விவகாரம் தொடர்பாக பெங்களூரு முன்னாள் போலீஸ் கமிஷனர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகத்தில், குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்த பிறகு, பா.ஜனதா ஆட்சி அமைந்தது. எடியூரப்பா, முதல் அமைச்சராக பதவி ஏற்றார். இந்நிலையில் பெங்களூரு நகர போலீஸ் கமி‌ஷனராக நியமிக்கப்பட்ட பாஸ்கர்ராவ், கமி‌ஷனர் பதவிக்காக ஒரு கட்சியின் பிரமுகருடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான ஆடியோ உரையாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக பா.ஜனதா புகார் கூறியது.

பா.ஜனதா, கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளராக இருந்த சித்தராமையா, அவருடைய உதவியாளர்கள் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சில தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் என மொத்தம் 300 பேரின் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, காவல்துறை முன்னாள் அமைச்சர் எம்.பி.பட்டீல் உள்ளிட்ட பலர் இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளித்த குமாரசாமி, யாருடைய தொலைபேசியையும் ஒட்டு கேட்கவில்லை என்றும், அதுதொடர்பான புகார் உண்மைக்கு புறம்பானது என்றும், எத்தகைய விசாரணைக்கும் தயார் என்றும் கூறினார். கர்நாடக அரசியலில் இந்த தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. 

இந்நிலையில் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த முதல்-அமைச்சர் எடியூரப்பா பரிந்துரை செய்தார். சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று பெங்களூருவில் உள்ள முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் அலேக்குமார் வீட்டில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் அலேக்குமார் வீட்டில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அரசியல் பிரமுகர்களின் போனை ஒட்டுக்கேட்ட விவகாரம் தொடர்பான தகவல்களை அவர் ஒரு பென்டிரைவில் சேமித்து வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் இந்த சோதனை நடந்து வருகிறது. சோதனை முடிந்தபிறகுதான் அந்த பென்டிரைவ் சிக்கியதா? இல்லையா? என்பது தெரியவரும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory