» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் : கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் கைது- புதிய ஆவணங்கள் சிக்கியது

வெள்ளி 27, செப்டம்பர் 2019 5:22:31 PM (IST)

நீட் தேர்வில்  ஆள்மாறாட்ட புகார் விவகாரத்தில் உதித் சூர்யாவுக்கு உதவிய கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர்.

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடந்த நீட் நுழைவு தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் முதலாமாண்டு வகுப்பில் சேர்ந்து படிப்பை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவபடிப்பில் சேர்ந்திருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கும், தேனி மருத்துவக் கல்லூரிக்கும் இ.மெயில் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் தேனி மருத்துவ கல்லூரியில் உதித்சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்திருப்பது தெரிய வந்தது.

மாணவர் உதித்சூர்யா சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர். இவரது தந்தை வெங்கடேசன் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். தன்னை போலவே தனது மகனையும் டாக்டராக்க வேண்டும் என்று வெங்கடேசன் ஆசைப்பட்டார். இதற்காக உதித் சூர்யாவை 2 முறை நீட் தேர்வு எழுத வைத்தார். ஆனால் உதித் சூர்யாவால் அதில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் தனது மகனுக்கு பதில் ஆள்மாறாட்டம் மூலம் வேறு ஒரு மாணவரை தேர்வு எழுத செய்து தனது மகனை டாக்டராக்கி விடவேண்டும் என திட்டமிட்டார். இந்த ஆண்டு உதித்சூர்யா நீட் தேர்வை மும்பையில் எழுத தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. 

எனவே மும்பையில் உள்ள ஒரு மாணவரை தனது மகனுக்கு பதில் தேர்வு எழுத வைக்க முடிவு செய்தார். இதற்காக வெங்கடேசன் விசாரித்த போது அவருக்கு கேரளாவை சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் அறிமுகமானார். அவர் மூலம் மும்பையில் போலி மாணவர் ஏற்பாடு செய்யப்பட்டார். இதற்கு ரூ.20 லட்சம் கொடுக்கப்பட்டது. அதன்படி உதித்சூர்யாவுக்கு பதில் அந்த போலி மாணவர் நீட் தேர்வை எழுதினார். நீட் விண்ணப்பத்தில் அந்த போலி மாணவரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்ததால் எளிதாக அவர் நீட் தேர்வை எழுதி முடித்து விட்டார். இந்த தேர்வில் அவர் தேர்ச்சி பெற்று தேனி மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார்.

அந்த போலி மாணவர் தேனி மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ்களுடன் சேர்ந்தார். வகுப்புகள் தொடங்கிய பிறகு அவர் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து முதலாம் ஆண்டு படிப்பை தொடங்கினார். சுமார் 20 நாட்களுக்கு அந்த போலி மாணவர் கல்லூரிக்கு வந்ததாக தெரியவந்துள்ளது. அதன் பிறகுதான் அவருக்கு பதில் உதித்சூர்யா வந்து மருத்துவ படிப்பை மிக சாதுரியமாக தொடர்ந்துள்ளார். மற்ற மாணவர்களை போல அவரும் மருத்துவ படிப்பை கடந்த 2 மாதங்களாக படித்து வந்தார். இந்நிலையில் தான் உதித்சூர்யாவின் ஆள் மாறாட்டம் மோசடி பற்றி தெரியவந்தது. உதித்சூர்யாவின் ஹால் டிக்கெட்டில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படமும், கல்லூரிக்கு அவர் விண்ணப்பித்திருந்த போது ஒட்டப்பட்ட புகைப்படமும் வேறு வேறாக இருந்ததால் அவர் மீது சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து மாணவர் உதித்சூர்யாவிடம் தேனி மருத்துவ கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதனால் அவர் தலைமறைவானார். கடந்த 18-ந் தேதி உதித்சூர்யா மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே தமிழக அரசு இந்த வழக்கு விசாரணையை கடந்த திங்கட்கிழமை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், தேனி போலீசாரும் மாணவரை தேடி சென்னை வந்தனர்.

அப்போது டாக்டர் வெங்கடேசன், தனது மகன் உதித்சூர்யா, மனைவி கயல்விழியுடன் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது. திருப்பதியில் ஒரு ஓட்டலில் அவர்கள் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்சா தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு சென்று பதுங்கி இருந்த 3 பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் அவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு டாக்டர் வெங்கடேசன், மாணவர் உதித்சூர்யா இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மாணவர் உதித்சூர்யா மீது இந்திய தண்டனை பிரிவு 120பி (கிரிமினல் சதி), 419 (ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல்), 420 (மோசடி செய்தல், முறைகேடாக நடந்து கொள்ளுதல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கயல்விழி மீது எந்த புகாரும் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு வெங்கடேசனும், உதித்சூர்யாவும் தேனிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது நீட் தேர்வில் உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது எப்படி என்பதற்கான புதிய பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.

வெங்கடேசனும், உதித்சூர்யாவும் தெரிவித்த தகவல்கள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. உதித்சூர்யாவைவிட டாக்டர் வெங்கடேசன் ஆள்மாறாட்டம் செய்தது குறித்து அதிக தகவல்களை வெளியிட்டார். அவர் கூறுகையில், "ஆள்மாறாட்டம் செய்வதற்கு ஏற்பாடு செய்தது பற்றி எனது மகனுக்கு எதுவும் தெரியாது. குற்றங்கள் அனைத்தையும் நான் மட்டுமே செய்தேன்” என்று தெரிவித்தார். உதித்சூர்யாவுக்காக மும்பையில் தேர்வு எழுதிய மாணவரை கேரளாவை சேர்ந்த புரோக்கர் ஒருவர் ஏற்பாடு செய்துள்ளார். அந்த புரோக்கரை உதித்சூர்யாவின் தந்தை சென்னை மற்றும் பெங்களூரில் சந்தித்து பலமுறை பேசி இருக்கிறார்.

அப்போதுதான் ஆள் மாறாட்டத்துக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. புரோக்கருக்கு ரூ.20 லட்சம் பணத்தை வெங்கடேசன் கொடுத்துள்ளார். அதன் பின்னரே போலியாக ஹால் டிக்கெட் தயாரிக்கப்பட்டு உதித்சூர்யாவுக்கு பதிலாக மும்பையில் வேறு ஒருவர் தேர்வு எழுதியுள்ளார். இது தொடர்பான அனைத்து தகவல்களையும் வெங்கடேசன் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்கு மூலமாக அளித்துள்ளார். ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதிய நபர் உதித்சூர்யாவை போன்றே மருத்துவ மாணவராக இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் மும்பையை சேர்ந்தவராகவே இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

இதையடுத்து ஹால் டிக்கெட்டில் உள்ள போட்டோவை வைத்து அவரை கண்டு பிடிக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக மும்பை போலீசாரின் உதவியையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாடினர். மும்பையில் உள்ள பத்திரிகைகளில் போலி மாணவரின் புகைப்படம் வெளியிடப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இவரை தேர்வெழுதவைத்த கேரளாவை சேர்ந்த இடைத்தரகர்தான் நீட் மோசடி விவகாரத்தில் மூளையாக செயல்பட்டுள்ளார். அவர்தான் ஆள்மாறாட்டத்துக்கான அனைத்து திட்டங்களையும் தீட்டி கொடுத்துள்ளார்.

இதையடுத்து கேரளா சென்ற சிபிசிஐடி போலீசார், ஜோசப் என்ற இடைத்தரகரை கைது செய்தனர். உதித் சூர்யாவின் தந்தை அளித்த தகவலின் அடிப்படையில் இடைத்தரகர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில், உதித் சூர்யாவுக்காக தேர்வு எழுதிய நபர் குறித்த தகவல் வெளியாகும். இந்த இடைத்தரகரின் பின்னணியில் மொத்தம் 5 பேர் இருப்பதாகவும், அனைவரையும் கைது செய்ய வலை விரித்துள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

நீட் தேர்வு மோசடியில் மேலும் 5 மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். அவர்கள் யார் யார்? என்பது பற்றியும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசனிடம் கேரள புரோக்கரை சிலர் அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பது பற்றிய தகவல்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திரட்டி வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறார்கள்.

இதற்கிடையே மாணவர் உதித்சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசனும் தேனியில் உள்ள ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.இதையடுத்து டாக்டர் வெங்கடேசனும், உதித் சூர்யாவும் தேனியில் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர் களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். தேவைப்பட்டால் டாக்டர் வெங்கடேசனை மும்பைக்கு அழைத்து சென்று விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள் ளனர்.

தேனி மருத்துவக் கல்லூரியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது அடுத்த கட்ட விசாரணையை இன்று நடத்தினார்கள். கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரிடமும் நீட் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேனி மருத்துவ கல்லூரியில் ஆவணங்கள் திருத்தப்பட்டு உள்ளது. உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டில் திருத்தம் செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடியிடம் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. சிபிசிஐடியிடம் சிக்கிய புதிய ஆவணங்களால் தேனி மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து

ஒருவன்Sep 28, 2019 - 04:30:55 PM | Posted IP 162.1*****

பணம் எல்லாம் செய்யும் ஆனால் அது பாதாளம் வரை பாயும் ..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory