» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை : பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை

திங்கள் 30, செப்டம்பர் 2019 11:45:56 AM (IST)

வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. வெங்காயம் இருப்பு வைக்க நாடு முழுவதும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

அன்றாட சமையலுக்கு அத்தியாவசிய காய்கறியான வெங்காயத்தின் விலை, கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை ஆகிறது. வெங்காயம் அதிகமாக விளையும் மராட்டியம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை காரணமாக, வெங்காயத்தை கொண்டு வருவதிலும் சிக்கல் எழுந்துள்ளதால், விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த மாதம் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது. அத்துடன், வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு 850 டாலர் என்று நிர்ணயித்தது. அதாவது, இந்த விலைக்கு குறைவாக வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய அனுமதி கிடையாது. இதன்மூலம், உள்நாட்டில் வெங்காய தட்டுப்பாட்டை போக்க முடியும் என்று கருதியது.

மேலும், தனது சேமிப்பு கிடங்குகளில் இருந்து 50 ஆயிரம் டன் வெங்காயத்தை மாநிலங்களுக்கு மத்திய அரசு வினியோகித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அனைத்து வகையான வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்தது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகத்தின் ஒரு பிரிவான வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் இந்த தடையை பிறப்பித்துள்ளது. இதற்கான அறிவிப்பாணையையும் வெளியிட்டுள்ளது.

உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வெங்காயத்தை இருப்பு வைக்க நாடு முழுவதும் மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: நாடு முழுவதும் சில்லறை வியாபாரிகள் 100 குவிண்டால் (10 டன்) வரை மட்டுமே வெங்காயத்தை இருப்பு வைக்கலாம். மொத்த வியாபாரிகள் 500 குவிண்டால் (50 டன்) வரை இருப்பு வைக்கலாம். இந்த கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இதன்மூலம், இருப்பு வைக்கப்பட்ட வெங்காயம், விற்பனைக்கு வருவதுடன், அதன் விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம். வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வங்காளதேசம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை விட குறைந்த விலையில் செய்யப்படும் ஏற்றுமதி, உடனடியாக நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory