» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள்: நினைவிடத்தில் தலைவர்கள் மலர்தூவி மரியாதை

புதன் 2, அக்டோபர் 2019 3:58:57 PM (IST)மகாத்மா காந்தியின் 150 பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவரக்ள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்திய விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, அகிம்சை வழியில் போராடிய மாமனிதர் மகாத்மா காந்தி. தேச பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் கிராமத்தில் கரம்சந்த் காந்தி – புத்திலிபாய் காந்தி தம்பதியினருக்கு அக்டோபர் 2ம் தேதி மகனாய் பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும், அவரது பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி, காந்தி ஜெயந்தி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதையொட்டி, டெல்லியின் ராஜ்காட் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஹர்தீப் சிங் பூரி, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மரியாதை செலுத்திய பின், பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில், ”மகாத்மா காந்தி அவர்களுக்கு ராஜ்காட்டில் என் மரியாதையை செலுத்தினேன். அமைதி, இணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்காக அவர் ஆற்றிய பங்களிப்பு நிகரில்லாதது. ஏழைகளுக்கு அதிகாரம் வழங்கவேண்டும் என்று கனவு கண்டவர் அவர். அவரது லட்சியங்கள் எங்களை வழிகாட்டும் ஒளியாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.


ராகுல் காந்தி பாதயாத்திரை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில், ”150வது பிறந்தநாளை முன்னிட்டு, நம் தேச தந்தையான மகாத்மா காந்தி அவர்களுக்கு என் மரியாதையை செலுத்திக்கொள்கிறேன். அவர், தன் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம், அடக்குமுறை, வெறுப்பு மற்றும் மதவெறி ஆகியவற்றை வீழ்த்த அன்பு மற்றும் அகிம்சையே ஒரே வழி என்று உணர்த்தியுள்ளார்” என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்தப்பட்டது. தீனதயால் உபத்யாய் மார்க் பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான ராஜீவ் பவனில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ள காந்தி நினைவிடம் வரை பேரணியாக சென்றனர். இது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றது. இளைஞர்கள் பலர், காந்தி கண்ணாடி மற்றும் உடை அணிந்து பேரணியாக சென்றனர். 

மம்தா பானர்ஜி மரியாதை

மேற்குவங்க மாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியும் காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். மம்தா பானர்ஜி டுவிட்டரில்,”மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்தநாளில், அவருக்கு என் மரியாதையை செலுத்திக்கொள்கிறேன். கொல்கத்தாவின் மாயோ சாலையில் உள்ள தேச பிதா காந்தியின் சிலைக்கு நாங்கள் மலர்தூவி மரியாதை செலுத்த இருக்கிறோம். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பேலேகாடா பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி பவனத்தை புதுப்பிக்கும் திட்டம் இன்று துவக்கிவைக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory