» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால் வங்கதேசம் பாதிப்பு - பிரதமர் ஹசினா வேதனை

சனி 5, அக்டோபர் 2019 3:42:31 PM (IST)

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா வேதனையுடன் கூறினார்.

இந்தியாவில் மராட்டியம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பலத்த மழை காரணமாக வெங்காய உற்பத்தி பாதித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் பரவலாக வெங்காய வினியோகம் பாதித்து, அதன் விலை உயர்ந்தது. இதனால் இல்லத்தரசிகள் கண்ணீர் சிந்தும் நிலை உருவானது. இதையடுத்து வெங்காய ஏற்றுமதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. அது மட்டுமின்றி, நாடு முழுவதும் வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்குவதை தடுக்கும் வகையில் இருப்புவைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

சில்லரை வியாபாரிகள் 10 ஆயிரம் கிலோவும், மொத்த வியாபாரிகள் 50 ஆயிரம் கிலோவும் இருப்பு வைக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியா வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால் அண்டை நாடான வங்க தேசம் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. இந்த நிலையில் இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, தலைநகர் டெல்லியில் நேற்று இந்திய, வங்கதேச வர்த்தக மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் வெங்காய ஏற்றுமதி தடை பிரச்சினையை எழுப்பினார்.

அவர், "திடீரென்று வெங்காய ஏற்றுமதியை நீங்கள் (இந்தியா) நிறுத்தி விட்டீர்கள். இதனால் எங்கள் நாட்டு மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். நீங்கள் எதற்காக வெங்காய ஏற்றுமதியை நிறுத்தினீர்கள் என்பது எனக்கு தெரியாது. இதனால் நான் என்ன செய்தேன் தெரியுமா? எனது சமையல்காரரிடம் சமையலுக்கு வெங்காயத்தை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லி விட்டேன்” என்றார். மேலும், "இது போன்ற சமயங்களில் முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு, செய்தால் அது நல்லது. அது உதவிகரமாக இருக்கும். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கிறபோது அதை முன்கூட்டியே தெரிவித்து உதவுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory