» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அயோத்தி வழக்கில் அனைவரும் ஏற்கும் தீர்ப்பு வரும்: உ.பி., முதல்வர் யோகி நம்பிக்கை

செவ்வாய் 8, அக்டோபர் 2019 8:44:19 AM (IST)

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அனைவரும் மதிப்பார்கள். அனைவரும் ஏற்கும் வகையில் தீர்ப்பு வரும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ராமஜென்ம பூமி என்று அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய 2.27 ஏக்கர் நிலத்திற்கு உரிமை கோரித் தொடரப்பட்ட வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நவம்பர் 17ம் தேதிக்குள் தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்தியநாத் செய்தியாளர்களிடம் ‘‘அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்றம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முடிவில் உச்சநீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் அனைவரும் அந்தத் தீர்ப்பை மதித்து மரியாதை செய்வார்கள்’’ என முதல்வர் யோகி தெரிவித்தார்.

ராமரின் வாழ்க்கையில் இருந்து மக்கள் ஊக்கம் பெற வேண்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது என முதல்வர் யோகி ஆதித்தியநாத் தெரிவித்திருந்தார். அவர் கூறியதை விமர்சித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உச்சநீதிமன்றம் என்ன முடிவெடுக்க போகிறது என்பதை முதல்வர் யோகி எப்படி முன்பே அறிந்துகொண்டார் என கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் முதல்வர் யோகி ஆதித்தியநாத் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது என கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு கடந்த ஆண்டை போல் வரும் தீபாவளி பண்டிகையின் போது அயோத்தியில் பிரமாண்ட தீப உற்சவம் நடக்கவுள்ளது. அன்று சரயு நதிக்கரையில் 5.50 லட்சம் விளக்குகள் ஏற்றப்படும். அதை குறிப்பிட்டு தான் அவ்வாறு கூறியதாக ஆதித்தியநாத் கூறினார். தன் கருத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி கொண்ட எதிர்க்கட்சிகளை யோகி ஆதித்தியநாத் கடுமையாக சாடினார்.

அயோத்தி ராமஜென்ம பூமி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் எப்பொழுதும் அழிவை ஏற்படுத்தும் எதிர்மறை அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளாக நீடிக்கும் ராமர் கோவில் விவகாரம் முடிவுக்கு வர வேண்டும். முந்தைய ஆட்சிகளில் அயோத்தியின் கலாச்சாரங்கள் சீர்குலைக்கப்பட்டன. ஆனால் இன்று அயோத்தியாவில் வெளிநாட்டில் இருந்து வரும் கலைஞர்களால் ராம்லீலா நடத்தப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என முதல்வர் யோகி ஆதித்தியநாத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory