» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுதலை செய்யக் கூடாது : எடியூரப்பாவிடம் காங்கிரஸ் மனு

செவ்வாய் 15, அக்டோபர் 2019 5:48:09 PM (IST)

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் வெளியே விடக்கூடாது என்று காங்கிரஸ் சார்பில் கர்நாடக முதல்-அமைச்சர் எடியூரப்பாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு செயலாளர் முத்து மாணிக்கம், கர்நாடக முதல்- அமைச்சர் எடியூரப்பா மற்றும் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோரை நேரில் சந்தித்து கடிதம் ஒன்று கொடுத்தார்.சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவ்க்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகளை அனுபவித்திருக்கிறார்கள்.

மேலும் இதுகுறித்து ஆதாரங்களை அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்த படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை சாட்சியாக வைத்து சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா கர்நாடக அரசிற்கு 2 கடிதங்கள் அனுப்பினார். அதில் சிறைத்துறை கண்காணிப்பாளர் அறை அருகில் 5 அறைகள் சசிகலா மற்றும் இளவரசிக்கு ஓதுக்கப்பட்டது. இதில் யோகா பயிற்சி அறை, படிப்பகம், தூங்குவதற்கு சொகுசு கட்டில்கள், ஏசி வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து கர்நாடக அரசு சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைத்தது. அவர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் சிறைக்கைதிகளை சந்தித்து விசாரணை நடத்தினார். அதில் பல்வேறு தகவல்கள் கிடைத்தது. அவற்றை 260 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக தயார் செய்து வினய்குமார், சமீபத்தில் அதை மாநில தலைமை செயலாளரிடம் சமர்ப்பித்தார். 

அதில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு வி.ஐ.பி. சலுகை உட்பட பல்வேறு வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிறையில் இருந்து வெளியே சென்று வந்த காட்சிகள், இவர்களுக்கான ஒதுக்கப்பட்டுள்ள அறைகள், சசிகலாவை யார் யார் வந்து சந்தித்திருந்தார்கள் போன்ற பல்வேறு தகவல்கள் அடங்கிய அறிக்கை மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.

இந்தநிலையில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரை சிறையின் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கர்நாடக அரசுக்கு சிறைத்துறை நிர்வாகம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சசிகலா மற்றும் இளவரசி அளவுக்கு மீறி சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு துஷ்பிரயோகம் செய்தவர்கள். ஆகையால் இவர்களை நன்னடத்தை அடிப்படையில் வெளியே விடக்கூடாது. மேலும் சம்மந்தப்பட்ட சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ், சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் அனிதா ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory