» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மராட்டியம், அரியானாவில் விறுவிறு வாக்குப்பதிவு: அரசியல் பிரபலங்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

திங்கள் 21, அக்டோபர் 2019 11:41:00 AM (IST)மராட்டியம் மற்றும் அரியானாவில் அரசியல் பிரபலங்கள் காலையிலேயே ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மராட்டிய மாநிலம் நாக்பூர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

மராட்டியம், அரியானா மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெறும் மராட்டிய மாநில சட்டசபைக்கும், பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் அரியானா சட்டசபைக்கும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.  காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாக போட்டியிடுகிறது. 90 உறுப்பினர்களை கொண்ட அரியானாவில், ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ், ஜனநாயக் ஜனதா ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மராட்டியம், அரியானா மாநிலங்களின் சட்டசபை தேர்தலுடன் நாடு முழுவதும் தமிழ்நாடு (2), உத்தரபிரதேசம் (11), குஜராத் (6), கேரளா (5), பீகார் (5), அசாம் (4), பஞ்சாப் (4), சிக்கிம் (3), ராஜஸ்தான் (2), இமாசலபிரதேசம் (2), புதுச்சேரி, தெலுங்கானா, மத்தியபிரதேசம், மேகாலயா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சத்தீஷ்கார் (தலா ஒரு தொகுதி) ஆகிய மாநிலங்களில் உள்ள 51 சட்டசபை தொகுதிகளுக்கும், மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா நாடாளுமன்ற தொகுதிக்கும், பீகார் மாநிலம் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளும் 24ந்தேதி எண்ணப்படும்.

இந்நிலையில், மராட்டியம் மற்றும் அரியானாவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணியளவில் தொடங்கியது.  இதற்காக காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மராட்டிய மாநிலம் நாக்பூர் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நாக்பூர் மத்திய தொகுதியில் காலை 8.20 மணியளவில் ஓட்டு போட்டார்.  மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் அவரது மனைவி காஞ்சனா காலை 8.25 மணியளவில் நாக்பூர் தொகுதியில் உள்ள வாக்கு சாவடியொன்றில் வாக்களித்துள்ளனர். வருகிற 24ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory