» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து மக்களும் மதிக்கவேண்டும்: ஜாமியத் உலாமா-ஐ-ஹிந்த்

புதன் 6, நவம்பர் 2019 5:45:19 PM (IST)

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து முஸ்லீம்களும், நாட்டு குடிமக்கள் அனைவரும் மதிக்கவேண்டும் என ஜாமியத் உலாமா-ஐ-ஹிந்த் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது. வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வுபெறுகிறார். எனவே அதற்குள்ளாக அயோத்தி வழக்கு உள்ளிட்ட ஒரு சில முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக முஸ்லீம் அமைப்பான ஜாமியத் உலாமா-ஐ-ஹிந்த் அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில்,”இந்த வழக்கில், வரலாற்று உண்மைகள் மற்றும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முஸ்லீம்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, எந்தவொரு கோவிலையும் இடிக்கப்பட்டு, பாபர் மசூதி கட்டப்படவில்லை என்பது உண்மையாகும்.

நீதியை மதிக்கும் மக்கள் அனைவரும், அடிப்படை ஆதாரங்கள் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதை மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்” என்று கூறினார். மேலும்,”நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். ஆதாரங்கள் மற்றும் உண்மையான சான்றுகளின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் எந்த தீர்ப்பு வழங்கினாலும் நாங்கள் அதை ஏற்போம். உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து முஸ்லீம்களும், நாட்டு குடிமக்கள் அனைவரும் மதிக்கவேண்டும்” என்று மவுலானா அர்ஷத் மதானி கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory