» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விலை உயர்வை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி - மத்திய அரசு நடவடிக்கை

வியாழன் 7, நவம்பர் 2019 10:32:14 AM (IST)

வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது.

வெங்காயம் விலை கிலோ ரூ.100 வரையில் விற்பனையாகிறபோது, இந்த விலை உயர்வை சந்திக்க முடியாமல் இல்லத்தரசிகள் நாடு முழுவதும் திணறி வருகின்றனர். இந்நிலையில் வெங்காயம் கையிருப்பு நிலவரம், அதன் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து டெல்லியில் நேற்று உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி, துறைக்கான அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, "வெங்காய இருப்பு பற்றியும், விலை நிலவரம் குறித்தும் ஆய்வு செய்தோம். நாட்டில் வெங்காய உற்பத்தி 30 முதல் 40 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. பருவ மழையின் வருகையில் ஏற்பட்ட தாமதத்தால் அடுத்த சாகுபடி பாதித்தது. பல மாநிலங்களில் மழை, வெள்ளத்தால் உற்பத்தி பாதித்தது. வெங்காய வினியோகம், தேவையைப் பொறுத்து விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். தற்போது இது சம நிலையில் இல்லை. இருப்பினும் சந்தையில் வெங்காயத்தை கூடுதலாக கிடைக்கச்செய்யவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கிறது” என கூறினார்.

மேலும், "தற்போதைய நிலை குறித்து கவலை கொள்கிறோம். அரசாங்கம் தன்னால் இயன்றதை செய்யும். இதில் நாங்கள் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கிறோம்” என கூறினார். "வெங்காய விலை எப்போது குறையும்?” என்ற கேள்விக்கு " நான் ஜோதிடர் அல்ல; "இருப்பினும் இந்த மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் வெங்காய விலை குறைந்து விடும் என நம்புவோம்” என குறிப்பிட்டார். இந்த பிரச்சினையை சமாளிப்பது தொடர்பாக பொதுமக்களும், ஊடகங்களும் யோசனைகள் கூறலாம் எனவும் அவர் கூறினார்.

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் வெங்காய இருப்பு வைப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெங்காய இருப்பை விடுவித்து, கிலோ ரூ.23.90 என்ற மலிவு விலையில் விற்பனை செய்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு அவர்கள் உதவ வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை தனியார் மூலம் இறக்குமதி செய்வதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது. வெங்காய இறக்குமதிக்கான நடைமுறைகளை தாராளமயமாக்க விவசாயத்துறை அமைச்சகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory