» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வானிலை நிலவரம் காரணமாக பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் ஏவப்படும் தேதி மாற்றம்

வெள்ளி 22, நவம்பர் 2019 10:36:58 AM (IST)வானிலை நிலவரம் காரணமாக பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்  25-ம் தேதிக்கு பதிலாக 27-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்த பி.எஸ்.எல்.வி. சி-47, சி-48 மற்றும் சி-49 ஆகிய 3 ராக்கெட்டுகளில், வெளிநாடுகளை சேர்ந்த 14 சிறிய செயற்கைகோள்களை டிசம்பர் இறுதிக்குள் விண்ணில் செலுத்தும் பணியில் இஸ்ரோ தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இந்த ராக்கெட்டுகளில் வெளிநாட்டு செயற்கைகோள்களுடன், இஸ்ரோ தயாரித்த தலா 3 பூமி கண்காணிப்பு செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. 

அதன்படி, வருகிற 25-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.28 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து இருந்தனர். இந்நிலையில் ராக்கெட் ஏவும் பணி 25-ம் தேதியில் இருந்து 27-ம் தேதிக்கு திடீரென தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்டை, வருகிற 25-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போதுள்ள வானிலை நிலவரம் காரணமாக ராக்கெட் ஏவும் பணி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 27-ம் தேதி (புதன்கிழமை) காலை 9.28 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும். இதற்கான கவுண்ட்டவுன் 25-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது.இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்க நாட்டுக்கு சொந்தமான 13 வணிக நானோ வகை செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படுகிறது.

பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக விண்ணில் ஏவப்படும் கார்டோசாட்-3 செயற்கைகோள் துல்லியமாக படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. இந்த செயற்கைகோள் 509 கி.மீ. உயரத்தில் புவிவட்ட சுற்றுப்பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலைநிறுத்தப்பட உள்ளது. தற்போது ராக்கெட் பொருத்தும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory