» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரசு பள்ளி வகுப்பறையில் பாம்பு கடித்து 10 வயது சிறுமி பலி : ஆசிரியை பணிநீக்கம்

வெள்ளி 22, நவம்பர் 2019 11:47:03 AM (IST)

கேரளா வயநாடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்த ஷெஹாலா ஷெரின் என்ற 10 வயது சிறுமி வகுப்பறையில் பாம்பு கடித்து உயரிழந்தார். 

வயநாடு மாவட்டம் சுல்தா பதேரியில் உள்ள சர்வஜன அரசு மேல்நிலை பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாம்பு கடித்த மாணவியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் அலட்சியமாக செயல்பட்ட ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டார். சிறுமியை பாம்பு கடித்த விஷயம் தெரிந்தவுடன் உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் அனுப்பப்பட்டது. பள்ளிக்கு விரைந்த பெற்றோர் அவரை 4 மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் எங்கும் விஷ முறிவு மருந்து அளிக்கப்படவில்லை. மருத்துவர்கள் அனைவரும் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோழிக்கோடு மருத்துவ கல்லூரிக்கு சிறுமியை கொண்டு செல்லும்படி பெற்றொரிடம் தெரிவித்துள்ளனர். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் சிறுமி கோழிகோடு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வகுப்பறை தரையில் இருந்த ஓட்டையில் ஷெஹாலா ஷெரினின் கால்கள் இன்று மாட்டி கொண்டன. அப்போது ஓட்டைக்குள் ஒளிந்திருந்த பாம்பு அவர் காலில் கடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கேரளா மனித உரிமை கமிஷன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கமிஷன் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளன. முதல் கட்ட விசாரணையில் ஷெரினின் ஆசிரியை ஷிஜில் அலட்சியமாக நடந்து கொண்டதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கேரளா கல்வித்துறை அமைச்சர் சி ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறினார்.உயிரிழந்த ஷெஹாலா ஷெரினின் உடன்படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்களின் அலட்சியத்தால் தான் ஷெரின் உயிரிழந்ததாக  குற்றம்சாட்டினர்.

ஷெரினை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தாங்கள் மன்றாடிய போதும் ஆசிரியர்கள் அவளது தந்தை வரும்வரை காத்திருந்ததாக மாணவர்கள் புகார் கூறினர். பல ஆசிரியர்களிடம் கார் இருந்த போதும் யாரும் ஷெரினை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முன்வரவில்லை என்று மாணவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். தன் மகளை பாம்பு கடித்துவிட்டதாக பள்ளி நிர்வாகம் தன்னிடம் தெரிவிக்கவில்லை. 4 மருத்துவமனைக்கு அழைத்து சென்றும் விஷமுறிவு மருந்து வழங்கப்படவில்லை. கோழிக்கோடு செல்லும் வழியிலேயே தன் மகள் இறந்துவிட்டாள் என்று ஷெரினின் தந்தை செய்தியாளர்களிடம் கூறினார்.

கேரள முதல்வருக்கு ராகுல் கடிதம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் வயநாடு தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்தது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். வகுப்பறையில் இருந்த ஒரு பிளவில் பதுங்கி இருந்த விஷப்பாம்பு மாணவியை கடித்துள்ளது. ‘‘வயநாடு, சுல்தான் பதேரியின் மிக பழைய அரசு பள்ளியான சர்வாஜனா மேல்நிலை பள்ளியின் மோசமான கட்டுமான நிலையை மாநில அரசு உடனடியாக கவனிக்க வேண்டும். மாணவர்களுக்கு கற்றலுக்கான உகந்த சூழல் இல்லாவிட்டால் அது மாணவர்களை மட்டுமன்றி பெற்றோருக்கும் மனசோர்வை அளிக்கும்’’ என்று ராகுல் காந்தி தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory