» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா கோலாகலம்: டெல்லியில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றினார்

ஞாயிறு 26, ஜனவரி 2020 4:22:51 PM (IST)நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

கடந்த 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நாட்டின் அரசமைப்புச் சட்டம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜன. 26ம் தேதி குடியரசு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க வானில் 20க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டன. நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் மற்றும் முக அங்கீகார சாதனங்கள் நிறுவப்பட்டிருந்தது. விமான எதிர்ப்பு துப்பாக்கிகளுடன் பாதுகாப்புப் பணியாளர்கள் ராஜ்பாத் பகுதியில் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ராஜ்பாத்தில் இருந்து செங்கோட்டை வரை எட்டு கி.மீ நீளமுள்ள அணிவகுப்பு பாதையில் கண்காணிக்க ஷார்ப் ஷூட்டர்கள் மற்றும் ஸ்னைப்பர்கள் உயரமான கட்டிடங்களின் மீது நிறுத்தப்பட்டுள்ளன. முன்னதாக, ராஜ்பாத் பகுதி பொது போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டது. மத்திய செயலகம், உத்யோக் பவன், படேல் சவுக் மற்றும் லோக் கல்யாண் மார்க் மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களும் காலை 8.45 மணி முதல் மூடப்பட்டன. போக்குவரத்து சீராக இருக்கவும், பார்வையாளர்கள் விழா நடக்கும் இடத்தை அடையவும் 2,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீஸ் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். காவல்துறையினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். டெல்லிக்குள் நுழையும் நபர்களையும் வாகனங்களையும் சோதனை செய்வது, மால்கள் மற்றும் சந்தைகளில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

பாரா-கிளைடர்கள், பாரா மோட்டார்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள், மைக்ரோலைட் விமானம், தொலைதூர பைலட் விமானம், சூடான காற்று பலூன்கள், சிறிய அளவிலான இயங்கும் விமானம், குவாட்கோப்டர்கள் அல்லது விமானத்திலிருந்து பாரா ஜம்பிங் போன்ற வான்வழி தளங்களில் பறப்பது தடைசெய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து, நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் இன்று காலை, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ, விழாவின் தலைமை விருந்தினராக பங்கேற்றார். முன்னதாக, உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் வகையில் இந்தியா கேட் பகுதிக்கு அருகிலுள்ள தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடந்த காலங்களில் அமர் ஜவான் ஜோதி பகுதியிலேயே உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்துவார். 

ஆனால், இம்முறை முதல்முறையாக தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். முப்படைகளின் திறனையும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராணுவத்தின் ‘டி-90 பீஷ்மா’ பீரங்கி, கே-9 வஜ்ரா, தனுஷ் துப்பாக்கிகள், ‘ஆகாஷ்’ ஏவுகணை அணிவகுப்பை பார்வையிட்டார்.விமானப்படையின் ரபேல் போர் விமானம், தேஜாஸ் போர் விமானம், ‘அஸ்த்ரா’ ஏவுகணை மாதிரிகள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் அணிவகுத்த எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை அழிக்கவல்ல ‘ஏசாட்’ ஏவுகணை ஆகியன முக்கியத்துவம் பெற்றன.

நாட்டின் பன்முகத்தன்மை, கலாசாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. அதேபோல் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த துறை வாரியான அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றன. சிஆர்பிஎப் பெண் வீராங்கனைகள் முதல் முறையாக இருசக்கர வாகனங்களில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர். விமானப்படையின் ‘சினூக்’, ‘அப்பாச்சி’ ரக ஹெலிகாப்டர்கள், சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்கள் உள்ளிட்டவை வானில் சாகசம் செய்தன. விழாவில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, கஜேந்திர சிங் சேகாவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 71-வது குடியரசு தின விழா தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடி ஏற்றினார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory